Published : 24 Aug 2015 03:14 PM
Last Updated : 24 Aug 2015 03:14 PM

நான் தோற்றாலும் வென்றாலும் என்னை நேசிக்கும் குடும்பம்: சங்ககாரா நெகிழ்ச்சிப் பேச்சு

கொழும்பு டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற இலங்கை கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திரம் சங்ககாரா, தனது உரையின் போது நெகிழ்ச்சியடைந்தார்.

134 டெஸ்ட் போட்டிகளில் 233 இன்னிங்ஸ்களில் 12,400 ரன்கள். இதில் 38 சதங்கள், 52 அரைசதங்கள், சராசரி 57.40. அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 319 ரன்கள். 182 கேட்ச்கள் 20 ஸ்டம்பிங்.

இன்றுடன் ஓய்வு பெற்ற சங்கக்காராவை முதலில் சுனில் கவாஸ்கர் வாழ்த்தினார், "என்னுடைய தாய்மொழியில் குமார் என்றால் இளம் வயதினன் என்று பொருள். வயதாகும் போது ஸ்ரீ என்று அழைக்கப்படுவர். ஆனாலும், கிரிக்கெட் ஆட்டத்தை நேசிப்பவர்கள் மத்தியில் சங்கக்காரா எப்போதும் குமார் என்றே நினைவில் கொள்ளப்படுவார். நான் இப்போது உங்களை ‘முன்னால் கிரிக்கெட் வீரர்கள் கிளப்புக்கு’ அழைக்கிறேன்” என்றார்.

சங்ககாராவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அர்ஜுனா ரணதுங்கா, சுனில் கவாஸ்கர் இருந்தனர். இந்திய வீரர்கள் அனைவரும் தங்கள் டெஸ்ட் உடையில் கையெழுத்திட்டு சங்கக்காராவுக்கு பரிசாக அளித்தனர். 269ஆம் எண் ஜெர்சி கோலியினுடையது.

பரிசளிப்பு, பாராட்டுரை முடிந்தவுடன் சங்கக்காரா பேசத் தொடங்கினார்: "நான் நிறைய பேர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் இங்கு வந்தவர்களுக்கு நன்றியைப் பதிவு செய்கிறேன். பிறகு நான் படித்த காலேஜ், டிரினிடி காலேஜ். அது அபாரமான பள்ளி. அங்கு நான் கற்றதும் பெற்றதும் அதிகம், அங்கு பெற்றுக் கொண்ட அடிப்படைகள் மற்றும் அடித்தளங்களுக்காக நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். சுனில் பெர்னாண்டோ, இவர் எனது போட்டிப் பள்ளியின் பயிற்சியாளரக இருந்தாலும் எனக்கு அன்புடன் பயிற்சி அளித்தார்.

எனது அனைத்து முன்னாள் கேப்டன்கள், என்னுடன் விளையாடிய அனைத்து அணி சகாக்கள், எனக்காக நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் என்னை பெரிய அளவில் அகத்தூண்டுதல் செய்தது. ஓய்வறையின் அனைத்து தருணங்களும் மகிழ்ச்சியளிப்பவை, இனி அதைத்தான் நான் பெருமளவில் இழக்கிறேன். சார்லி மற்றும் சுதாமி ஆஸ்டின் ஆகியோருக்கு நன்றி, என்னை கட்டி மேய்ப்பது அவ்வளவு சுலபமல்ல, ஆனால் நீங்கள் மேலாளர் என்பதையும் தாண்டி செயல்பட்டீர்கள்.

நிறைய பேர் என்னிடம் எனக்கு தூண்டுகோலாக அமைந்தது எது என்று கேட்டனர். நான் எனது பெற்றோரைத் தாண்டி இதற்கான விடையைக் காண்பதில்லை. மன்னிக்கவும் நான் உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக இதனை கூறவில்லை. நீங்கள்தான் எனது தூண்டுகோல், க்ரியா ஊக்கிகள். பிறகு எனது உறவினர்கள், அம்மா, அப்பாச்சிக்கு நன்றி. நான் வீட்டில் பாதுகாப்பாக உணர்ந்தேன். நாம் நம் குடும்பத்தை தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறுவார்கள், ஆனால் நான் உங்கள் குழந்தையாக பிறந்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் எப்பவும் உணர்ச்சிவசப்பட மாட்டேன். ஆனால் எனது பெற்றோரும் உறவினர்களும் உள்ள இந்தத் தருணம் மிகவும் அரிய தருணமாகும்.

எனது பெரிய சாதனைகள் பற்றி கேட்கின்றனர், சதங்கள், உலகக் கோப்பை வெற்றி, ஆனால் நான் பார்ப்பது, கடந்த 30 ஆண்டுகளில் பெற்ற நட்பு வட்டாரங்களையே. இன்று நான் விளையாடுவதை பார்க்கவென்றே வந்திருக்கிறார்கள். நான் வென்றாலும் தோற்றாலும் என்னை எப்போதும் நேசிக்கும் குடும்பத்தை நோக்கி என்னால் எப்பவுமே செல்ல முடிந்துள்ளது இதுதான் எனது சாதனை என்று கருதுகிறேன்.

இறுதியாக விராட் மற்றும் இந்திய அணிக்கு நன்றிகள். அன்பான வார்த்தைகளுக்கு நன்றி, அதைவிடவும் முக்கியமானது நல்ல தரமான கிரிக்கெட் ஆட்டத்தை ஆடியது. நான் ஓய்வு பெறும் தருணத்தில் கடினமான டெஸ்ட் போட்டியையே விரும்பினேன் அதனை இந்திய அணி எனக்கு அளித்ததை பெரிதாகக் கருதுகிறேன், இதைவிடவும் மதிப்பு மிக்க ஒன்றை நான் கேட்டு விட முடியாது. நீங்கள் எப்போதும் எங்களது கடினமான எதிரணியினராக இருந்திருக்கிறீர்கள், நாங்கள் உங்களை வீழ்த்துவதற்கு திட்டமிடுவோம், சில சமயங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம், சில வேளைகளில் தவறுவோம், எனினும் இங்கு இந்த தருணத்தில் இருப்பதற்காக நன்றி.

கடைசியாக ஆஞ்சேலோ மற்றும் அணியினர். ஆஞ்சி உங்களிடம் அருமையான அணி உள்ளது, அருமையான எதிர்காலம் உள்ளது. பயமற்று விளையாடுங்கள். வெற்றிக்காக ஆடும்போது தோற்பதைப் பற்றி கவலைப் படாதீர்கள்.”

இவ்வாறு பேசினார் சங்ககாரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x