Published : 26 Jul 2016 07:00 PM
Last Updated : 26 Jul 2016 07:00 PM

நான் துரோகியா? அவர்கள் துரோகியா? : இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது முரளிதரன் காரசாரத் தாக்கு

ஆஸ்திரேலிய அணிக்கு 10 நாட்கள் ஆலோசனை அளிக்க முரளிதரன் ஒப்புக்கொண்டதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரை தாக்கிப் பேசியுள்ளது, இதற்கு முரளிதரனும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்.

இருதரப்பினரும் மாறி மாறி சொற்போரில் ஈடுபட இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் முரளிதரன் குறித்து புகார் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

பிரச்சினை எங்து தொடங்கியது என்றால் ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது, பயிற்சி ஆட்டம் பி.சரா ஓவலில் நடைபெற்றது. இது சரவணமுத்து ஸ்டேடியம் என்று முன்னால் வழங்கப்பட்டது. தமிழ் யூனியன் கிரிக்கெட் கிளப்புக்காக நிறைய ஆடியுள்ள முரளிதரனுக்கு இந்த மைதானம் அத்துப்படி, இங்கு அவருக்கு நிறைய ரசிகர்கள் ஆதரவும் உண்டு.

இந்நிலையில் பயிற்சியாட்டத்தில் இலங்கை வாரிய அணி தோல்வி தழுவியது, பிட்ச் ஸ்பின் பிட்ச் என்பதால் முரளிதரன் தான் மைதான பிட்ச் அமைப்பாளரை ஸ்பின் பிட்ச் போடுமாறு நிர்பந்தித்துள்ளார் என்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம், இந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இது ஒரு சர்ச்சை என்றால், முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் பல்லிகிலே மைதானத்தின் நடுபிட்சில் ஆஸ்திரேலியர்களுக்கு முரளிதரன் எந்த வித அனுமதியும் பெறாமல் பயிற்சி அளித்தார் என்பதும் இன்னொரு குற்றச்சாட்டு. இது குறித்தே தற்போது புகார் எழுந்துள்ளது.

முரளிதரன் இது குறித்து கூறியதாவது:

நான் தான் பயிற்சி ஆட்டத்தின் போது பிட்சில் உள்ள புற்களை வெட்டக் கூறினேன் என்று சரித் என் மீது பழிபோடுகிறார். இது ஒரு பெரிய பொய். நான் அவரிடம் நேரிலேயே இது பற்றி கேட்டேன், அதாவது நாம் இருவரும் விளையாடியுள்ளோம், ஒருவரையொரு மதித்துள்ளோம் பின் ஏன் இப்படிக் கூறுகிறீர்கள் என்றேன் அதற்கு அவர் சும்மா விசாரித்ததாகக் கூறினார்.

ஜனகா சம்பத் இலங்கை கிரிக்கெட் வாரிய பிட்ச் தயாரிப்பாளராக இருந்த போது சரா ஓவல் பிட்ச் தயாரிக்கப்பட்டது. அவரிடம் விளக்கம் கேட்பதை விடுத்து வதந்தியை நம்பி செயல்படுகின்றனர்” என்று கடுமையாக பதிலடி கொடுத்தார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபலா கூறும்போது, “முதலில் தன்னை தரக்குறைவாக நடத்தியதாக சரித் சேனநாயகே புகார் அளித்தார். 2-வதாக பல்லகிலே மைதானத்தில் முன் அனுமதியின்றி மையப்பிட்சில் முரளி ஆஸி.வீரர்களுக்கு பயிற்சி அளித்தார் என்பது.

நாங்கள் கடுமையாக ஏமாற்றமடைந்துள்ளோம். முரளிதரனை காப்பாற்றுவதற்காக வாரியம் நிறைய செலவு செய்துள்ளது. அவரை நாங்கள் மூன்று முறை காப்பாற்றியுள்ளோம் இதற்கு நிறைய வாரியம் செலவு செய்துள்ளது. தொழில்பூர்வமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு ஆலோசனை வழங்குவது பற்றி ஒன்றுமில்லை, ஆனால் விஷயம் அறம் சம்பந்தப்பட்டதாகும். இந்த டெஸ்ட் தொடருக்கு முரளி-வார்னே டிராபி என்று பெயர் சூட்டியுள்ளோம்.

கண்டியில் ஒரு முறை முரளிதரனுக்கு ரசிகர்கள் காட்டிய ஆதரவு இன்னமும் நினைவில் உள்ளது, கண்டி அவரது ஹோம் டவுன். ஆனால் பல்லகிலேயில் அவர் எதிரணியினருக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் மிகவும் காயப்படுத்துகிறது” என்றார்.

முரளிதரன் மீண்டும் கூறியபோது, “2 ஆண்டுகளுக்கு முன்பாக வாரியத்தலைவர் நிசாந்தா ரணதுங்கா ஸ்பின்னர்களுடன் பணியாற்ற என்னை அழைத்தார். நான் உடனே சம்மதித்து 10-15 நாட்கள் பயிற்சியளித்தேன். அதன் பிறகு எந்த ஒரு வாரிய அதிகாரியும் என்னை எதற்காகவும் அழைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு முன்னால் என்னை அழைத்திருந்தால் நிச்சயம் நான் சம்மதித்திருப்பேன். ஆனால் அவர்கள் என்னை விரும்பவில்லை, வேறொரு அணி என்னை விரும்புகிறது. நான் எப்படி நாட்டுக்கு துரோகம் இழைத்தவன் ஆவேன்? ஒட்டுமொத்த தொடருக்குமே ஆஸ்திரேலியா என்னை ஆலோசனை வழங்குமாறு கோரியது, ஆனால் இலங்கையில் தொடர் நடக்கும் போது எதிரணியினரின் ஓய்வறையில் இருப்பது முறையல்ல, அறமல்ல, என்று நான் 10 நாட்களுக்கு சம்மதித்தேன்.

இலங்கை மக்கள் எனக்காக நிறைய செய்துள்ளனர், நானும் அவர்களுக்கு முடிந்ததைச் செய்துள்ளதாகவே கருதுகிறேன். நான் என் நண்பரின் உதவியுடன் குட்னெஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும், சுமார் 50,000 குடும்பங்களுக்கு உதவி புரிந்துள்ளோம். சுனாமிக்குப் பிறகு ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 30-40 பிட்ச்களை அமைத்துள்ளோம். இலங்கை கிரிக்கெட் வாரியம் செய்ததை விட நாங்கள் எங்கள் நிதியிலிருந்து அதிகமாகவே செய்துள்ளோம்.

இன்று என்னைக் குற்றம்சாட்டுபவர்கள் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்த்துக் கொள்ளட்டும். நான் என்ன செய்திருக்கிறேன், அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பது அப்போது புரியவரும். இன்னொரு அடிப்படை தவறு என்னவெனில் நம் வீரர்கள் அருமையான கோச்சாக முதிர்ச்சி பெற்றிருக்கும் போது, வாரியம் அவர்களை துரத்தி அடித்துள்ளது. ஹதுரசிங்க, சமிந்தா வாஸ், மர்வன் அட்டப்பட்டு, மரியோ வில்லவராயன், திலன் சமரவீர ஆகியோர் பயிற்சியாளர்களாகி விட்டனர், சமரவீர ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். இவர்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர், அங்கு இவர்களை மதிக்கின்றனர்.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது வெளிநாட்டிலிருந்து கொண்டு வருகிறோம். நான் துரோகியா இல்லை அவர்கள் துரோகியா? சம்பளமும் கூட அயல்நாட்டு பயிற்சியாளர்களுக்கு அதிகம் வழங்குகின்றனர். நம்மூர் பயிற்சியாளர்களுக்கு குறைவாக வழங்குகின்றனர்.

1995, 96-ல் ஆஸ்திரேலியாவுடன் எனக்கு பிரச்சினை இருந்தது (த்ரோ சர்ச்சை), அப்போது இலங்கை என்னை ஆதரித்தது. பிறகு ஆஸ்திரேலியா என்னை பயிற்சி அளிக்க அழைக்கிறது என்றால் நான் தவறு செய்யவில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொள்வதாகத்தானே அர்த்தம். அதனால்தான் அவர்கள் ஸ்பின்னர்களுக்கு என்னை பயிற்சி அளிக்க அழைக்கிறார்கள்?

ஆஸ்திரேலியாவுக்கு 10 நாட்கள் நான் பயிற்சி அளித்ததன் மூலம் அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்றால் நான் உலகிலேயே சிறந்த பயிற்சியாளராக இருப்பேன். இலங்கையும் என்னை ஒவ்வொரு முறையும் பயிற்சிக்கு அழைக்கலாம். நாம் ஒவ்வொரு முறையும் வென்று விடுவோம்” என்று பொரிந்து தள்ளியுள்ளார்.

குமார் சங்கக்காரா, இந்த விவகாரத்தில் முரளிதரனுக்கு முழு ஆதரவு அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x