Published : 29 Jun 2016 04:09 PM
Last Updated : 29 Jun 2016 04:09 PM

நான் எப்போதுமே விரைவுகதியில் பீல்ட் செய்பவனல்ல: விராட் கோலி

தான் எப்போதும் களத்தடுப்பில் விரைவு கதியில் இயங்கும் பீல்டர் அல்ல என்று கூறிய விராட் கோலி 2012 ஐபிஎல் தொடருக்குப் பிறகு உடற்தகுதி குறித்த தனது பார்வையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற விளம்பராதாரர் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

2012-ம் ஆண்டு ஐபிஎல் வரை நான் உடற்தகுதி குறித்து கவனம் கொள்ளாமலேயே இருந்தேன். உடற்தகுதியின் சில நுட்பமான விவரங்களுக்குள் நான் சென்றதில்லை. அதாவது காலை முதல் இரவு வரை என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும் ஆகிய விவரங்களில் நான் நாட்டம் கொண்டதில்லை.

ஐபிஎல் கிரிக்கெட்டில்தான் நான் என்னுடைய உடலின் தேவைகளுக்கு பணிந்தேன். நான் உலகில் சிறந்த வீரராக இருக்க வேண்டும், சராசரியாக இருப்பது எனக்குப் பிடிக்காது. எனவே மனத்தளவில் நன்றாக இருந்தேன் ஆனால் அதற்கு உறுதுணையாகும் உடற்தகுதி பற்றி பெரிய அளவில் கவனம் கொள்ளாமல்தான் இருந்து வந்தேன்.

நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் போது, என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற உற்சாகத்தை அது அளிக்கிறது. நான் ஒரு உதாரணம் கூறுகிறேன், நான் விரைவுகதியில் பீல்ட் செய்பவனல்ல. அனைத்து இடங்களிலும் பீல்ட் செய்வதும் எனக்கு வராது. ஆனால் உடற்தகுதி நிலை நன்றாக ஆனவுடன் நான் என் மீது கொண்டிருந்த சந்தேகங்களைக் களைந்தேன். தற்போது உடற்தகுதியுடன் இருப்பது அளவாக சாப்பிடுவது என்பது எனக்கு இரண்டாவது இயல்பாகவே மாறிப்போனது.

நான் இன்று உள்ளது போல் நல்ல உடற்தகுதியுடன் எப்போதாவது இருந்திருக்கிறேன் என்று கருதவில்லை. உடற்தகுதி விஷயம் எனக்கு அருமையாக அமைந்தது. வாழ்முறை தெரிவாகவே அது தற்போது ஆகிவிட்டது. கிரிக்கெட் ஆட்டம் இல்லாத போது கூட நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது ஆரோக்கியமாக இருப்பது என்பது எனது உற்சாகத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x