Published : 06 Oct 2015 03:32 PM
Last Updated : 06 Oct 2015 03:32 PM

நாங்கள் சரியாக விளையாடாத போது இப்படி நடப்பதுண்டு: ரசிகர்கள் ஆவேசம் பற்றி தோனி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் படுமோசமாக தோல்வியடைந்ததையடுத்து மைதானத்தில் இந்திய ரசிகர்கள் பாட்டில்களை விட்டெறிந்தனர். இதனால் சுமார் 50 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது.

இது குறித்து ஆட்டம் முடிந்த பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறும்போது, “வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் வீரர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. ரசிகர்களில் பலம் வாய்ந்த சிலரின் த்ரோவினால் வீசிய பாட்டில்கள் எல்லைக் கோடு வரை வந்து விழுந்தது.

எனவே வீரர்கள் மைதானத்தை விட்டு சென்று விடுவது நல்லது என்று நடுவர்கள் நினைத்தனர். ரசிகர்களின் இம்மாதிரியான செயல்பாடுகள், சரியாக விளையாட போது உருவாவதே. நாங்கள் சரியாக விளையாடவில்லை எனவே இதுமாதிரியான செயல்கள் நடைபெறுகின்றன. முதல் பாட்டில்தான் பிரச்சினை. அடுத்தடுத்த பாட்டில் வீச்சு விளையாட்டுக்காக, பொழுதுபோக்குக்காக வீசப்பட்டதே. அதில் நாம் கூர்ந்து பார்க்க எதுவுமில்லை.

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் நாம் சுலபமாக வென்றோம், அப்போதும் கூட நிறைய பாட்டில்கள் பறந்தன. எப்போதுமே முதல் பாட்டில் வந்து விழுந்தால் போதும் தொடர்ந்து அது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிடும். ஒருவர் செய்தால் அதனை மற்றவர்களும் பின்பற்றும் பொழுதுபோக்கு விவகாரமாகவே நான் இதனைப் பார்க்கிறேன், இதில் சீரியசாக எடுத்து கொள்ள எதுவுமில்லை” என்றார் தோனி.

தோல்வி பற்றி பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி கூறியதாவது:

நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆடவில்லை. பேட்டிங்கில் முதலில் ரன் அவுட் விவகாரத்தை கவனிக்க வேண்டும். மேலும் விக்கெட்டை கொத்தாக இழப்பது, இதில் இன்னமும் நாம் முன்னேறவில்லை. மொத்தத்தில் பேட்டிங் நன்றாகவே இல்லை. எங்கு தவறு நிகழ்ந்தது என்பதை கவனித்து விவாதிக்க வேண்டும்.

இது போன்று ஆடுவது அவ்வப்போது நிகழ்வதுதான், ஆனால் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியுறுவது எப்படி? என்பதை கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும், ரன்களுக்காக ஓடும் போது அழைப்பு விடுப்பதில் இன்னமும் முன்னேற்றம் தேவை.

சில பீல்டர்களிடம் நாம் கூடுதலாக ஒரு ரன் எடுக்க வாய்ப்பிருப்பதாக நினைப்போம் ஆனால் பந்து நாம் நினைப்பதை விட அவரிடம் வேகமாகச் சென்றடையும். 1.8, 1.9 ரன்களை 2-ஆக மாற்றலாம் ஆனால் 1.7-ஐ 2 ரன்களாக மாற்ற முடியாது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பவுலிங் சேர்க்கை பற்றி அதிகம் கூற முடியவில்லை, காரணம் ரன்களை பெரிய அளவில் எடுக்காததே. ஆனால் ஒன்று மட்டும் கூற முடியும் ஸ்பின்னர்கள் சிறப்பாக வீசுகின்றனர். வரும் ஆட்டங்களில் பிற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது.

அமித் மிஸ்ரா நன்றாக வீசி வருகிறார். ஆனால் இடது கை வீரர்கள் உள்ளே வரும் பந்துகளை சவுகரியமாக ஆடுவார்கள், அதனால்தான் 2 ஆஃப் ஸ்பின்னர்களுடன் களமிறங்கினோம்.

தனது பேட்டிங் குறித்து...

நிறைய முறை நான் பேட்டிங் ஆட செல்லும் போது, 20 ஓவர் கிரிக்கெட்டில் 16-வது அல்லது 17-வது ஓவராக இருக்கிறது, அல்லது 4 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் 5 அல்லது 6-வது ஓவரில் களமிறங்க நேரிடுகிறது. எனவே விக்கெட்டுகள் விரைவில் விழும்போது நான் மூளையைப் பயன்படுத்தியே ஆடுவேன். சரி, 130 ரன்கள் வரை கொண்டு வந்தால் நல்லது என்று ஆடுவேன். பின்னால் பெரிய ஷாட்களை ஆடுவேன். முதலில் சற்று மெதுவாக ஆடுவேன்.

ஆனால் இனி இந்த டி20 கிரிக்கெட்டில் வந்தது வரட்டும் என்று இறங்கியவுடனேயே அடிக்க வேண்டியதுதான் போலிருக்கிறது. ஏனெனில் டி20 கிரிக்கெட் என்பது அதிக ரன்கள் சேர்ப்பது பற்றியது.

இது மிகவும் குறுகிய வடிவம், இங்கு நான் தேவைக்கு அதிகமாக சிந்தித்து செயல்படுவதாக உணர்கிறேன், நான் சுதந்திரமாக ஆட வேண்டிய வடிவம் டி20, ஆனால் ஒருநாள் போட்டிகளில் நான் இப்போடு எப்படி ஆடுகிறேனோ அதையே தொடர்வதுதான் நல்லது என்று கருதுகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x