Published : 08 Sep 2014 10:46 AM
Last Updated : 08 Sep 2014 10:46 AM

தோனியின் அதீத நம்பிக்கை: இந்தியாவை 3 ரன்களில் வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாயிருக்க இந்தியாவால் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 181 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. துவக்க வீரராக களமிறங்கிய ரஹானே மோயின் அலி வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கோலி, மறுமுனையில் இருந்த தவானுடன் கை கோத்து அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். வோக்ஸ் வீசிய 4-வது ஓவரில் கோலி தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை எடுத்தார்.

கோலி, தவான் அபாரம்

தவானும் தனக்கு வீசப்பட்ட மோசமான பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விளாசினார். 6-வது ஓவரிலேயே 50 ரன்களை எட்டிய இந்திய அணி, 10 ஓவரிகளில் 89 ரன்களை எடுத்திருந்தது. வோக்ஸ் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தை லெக் சைடில் அடிக்க முயன்ற தவான், பந்தைத் தவறவிட்டு, ஸ்டம்பை பறிகொடுத்தார். 28 பந்துகளில் 33 ரன்களுக்கு அவர் பெவிலியன் திரும்ப, ரெய்னா களமிறங்கினார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்த கோலி, 34 பந்துகளில், 6 பவுண்டரி, 1 சிக்ஸருடன் அரை சதம் எடுத்தார். தொடர்ந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய கோலி, 15-வது ஓவரில் ஃபின் வீசிய ஷார்ட் பிச் பந்தை சரியாகக் கணிக்காமல் அடிக்க, அது ஹேல்ஸின் கைகளில் சரணடைந்தது. 41 பந்துகளில் 66 ரன்களுக்கு கோலி வீழ்ந்தார்.

ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் தேவைப்பட்ட நிலையில் ரெய்னாவுடன் தோனி இணைந்தார். ஆனால் அடுத்த இரண்டு ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே வர, ரெய்னாவும் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆட வந்த ஜடேஜா 17-வது ஓவரில் தான் அடித்த பந்தில் இரண்டாவது ரன் ஓட முற்பட்டபோது ரன் அவுட் ஆனார். கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராயுடும், தோனியும் களத்தில் இருந்தனர்.

ராயுடுவை தடுத்த தோனி

19-வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே வர, 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட, தோனி 20-வது ஓவரை சந்தித்தார். வோக்ஸ் வீசிய முதல் பந்தையே தோனி சிக்ஸருக்கு விளாச, மீண்டும் ஒரு கடைசி ஓவர் வெற்றியை தோனி தேடித் தருவார் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்தது. அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த தோனி, ஷார்ட் பிட்சில் வந்த மூன்றாவது பந்தை மிட் விக்கெட் திசைக்கு விரட்டினார். ஒரு ரன் வந்திருக்க வேண்டிய அந்த தருணத்தில், தோனி ராயுடுவை ரன் ஓட வேண்டாம் என நிறுத்தினார்.

4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தோனி, 2 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 5-வது பந்தை டீப் ஸ்கொயர் பகுதிக்கு திருப்பி அடித்தார். எளிதாக ஒரு ரன் வந்திருக்க வேண்டிய அந்த பந்திலும், பாதி தூரம் ஓடி வந்த ராயுடுவை தடுத்து பின்னால் அனுப்பினார் தோனி. கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தோனியால் 1 ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் ராயுடு, சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தாலும், கடைசி ஓவரில் அவரை ஆட விடாமல் தோனி மட்டுமே அனைத்து பந்துகளையும் எதிர் கொண்டது பல கிரிக்கெட் விமர்சகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. பல ஆட்டங்களில் தோனி கடைசி ஓவரில் அணிக்கு வெற்றி தேடித்தந்திருந்தாலும், நேற்றைய ஆட்டத்தில், எளிதாக வந்திருக்க வேண்டிய இரண்டு ரன்களை தோனி தடுத்தது பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

அள்ளிக் கொடுத்த அஸ்வின்

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸும், ஜேசன் ராயும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அஸ்வின் வீசிய முதல் ஓவரில் ராய் ஒரு பவுண்டரியை அடிக்க, ஹேல்ஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விரட்டினார். இதனால் அந்த ஓவரில் இங்கிலாந்து 17 ரன்கள் எடுத்தது. இதனிடையே ஜேசன் ராய் 8 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த மொயீன் அலி ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஜோ ரூட் 8 ரன்களில் இருந்தபோது அஸ்வின் கோட்டைவிட்ட கேட்ச்சால் தப்பிப் பிழைத்தார்.

மோர்கன் 71

தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஹேல்ஸ், ஜடேஜா வீசிய 10-வது ஓவரில் சிக்ஸர் அடித்த கையோடு ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். இதையடுத்து வந்த கேப்டன் மோர்கன் சிக்ஸர் அடித்து, ரன் கணக்கைத் தொடங்க, மறுமுனையில் ஜோ ரூட் 26 ரன்களில் (29 பந்துகள்) வீழ்ந்தார்.

இதையடுத்து ஜோஸ் பட்லர் களமிறங்க, இங்கிலாந்தின் ரன் வேகம் குறைந்தது. ஆனால் ஜடேஜா வீசிய 16-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், கரண் சர்மா வீசிய அடுத்த ஓவரில் இரு சிக்ஸர்களையும் மோர்கன் விரட்ட, ரன் வேகம் எகிறியது. அடுத்த ஓவரில் ஜோஸ் பட்லர் 10 ரன்களில் வெளியேற, போபாரா களம்புகுந்தார். மறுமுனையில் வெளுத்துக் கட்டிய மோர்கன், 26 பந்துகளில் அரைசதம் கண்டார். மோஹித் சர்மா வீசிய 19-வது ஓவரில் ஒரு பவுண்டரியையும், இரு பிரம்மாண்ட சிக்ஸர்களையும் விளாசிய மோர்கன், கடைசி ஓவரில் எல்லைக்கோட்டில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார். அவர் 31 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசியவர் என்ற சாதனையை கெயிலுடன் பகிர்ந்து கொண்டார் மோர்கன்.

அடுத்த 3 பந்துகளில் இரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை போபாரா விளாச, ஆட்டத்தின் கடைசி பந்தில் கிறிஸ் வோக்ஸ் ரன் அவுட்டாக, இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. போபாரா 9 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ரன்கள் எடுத்தார்.

இந்தியத் தரப்பில் முகமது சமி 4 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x