Published : 22 Jun 2017 12:24 PM
Last Updated : 22 Jun 2017 12:24 PM

தொடரும் தென் ஆப்பிரிக்க அணியின் துயரம்: டி20-யில் இங்கிலாந்திடம் படுதோல்வி

ஏஜியஸ் பவுலில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற கேப்டன் டிவில்லியர்ஸ் முதலில் பேட் செய்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களையே எடுக்க முடிந்தது. தொடர்ந்து ஆடிய மோர்கன் தலைமை இங்கிலாந்து அணி ராய் (28), ஹேல்ஸ் (47), பேர்ஸ்டோ (60) ஆகியோரது தாறுமாறு அதிரடியில் 143/1 என்று அபார வெற்றி பெற்றது. 33 பந்துகள் மீதம் வைத்து வென்றது இங்கிலாந்து.

தென் ஆப்பிரிக்க அணியில் பிரிடோரியஸ், ஷம்சி ஆகியோர் அறிமுக டி20 போட்டியில் ஆடினர். இங்கிலாந்தில் கிரேன் என்பவரும் பேர்ஸ்டோவும் அறிமுக டி20யில் ஆடினர்.

தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் 65 நாட் அவுட், பெஹார்டீன் 64 நாட் அவுட் என்று கிரீசில் இருந்த போதும் ஸ்கோர் எழும்பாததற்குக் காரணம், தென் ஆப்பிரிக்கா முதலில் 7/2 பிறகு 32/3. இதில் ஸ்மட்ஸ், ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர் ஆகியோர் பெவிலியன் திரும்பினர், மார்க் வுட் இதில் 2 விக்கெட்டுகளையும் டிஜே வில்லே 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த டிவில்லியர்ஸ், பெஹார்டீன் 110 ரன்களை 16 ஓவர்களில் சேர்த்தனர். டிவில்லியர்ஸ் 58 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 65 ரன்களையும் பெஹார்டீன் 52 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 64 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நல்ல பேட்டிங் ஆடுகளத்தில் 16 ஓவர்களில் 110 ரன்களையே டிவில்லியர்ஸ், பெஹார்டீன் ஜோடி சேர்க்க முடிந்தது, இதனால் 30-40 ரன்கள் குறைவாகப் பெற்றது தென் ஆப்பிரிக்கா. இங்கிலாந்து ஸ்பின்னர்களான லியாம் டாஸன், மேசன் கிரேன் ஆகியோர் 8 ஓவர்களில் 41 ரன்களையே விட்டுக் கொடுத்தனர். இதில் டாசன் ஒரு பவுண்டரியைக் கூட கொடுக்கவில்லை. 20 வயது கிரேனும் நல்ல முதிர்ச்சியுடன் வீசி 2 பவுண்டரிகளையே விட்டுக் கொடுத்தார் அதில் ஒன்று புல்டாஸ்.

இங்கிலாந்து இலக்கைத் துரத்தியதில் பெரிய கஷ்டங்கள் எதுவும் இல்லை, ஆனால் ஜானி பேர்ஸ்டோ அபாரமாக ஆடினார் தாஹிரை ஸ்லாக் ஸ்வீப் செய்து சிக்சருக்கு அனுப்பினார், ஷம்சியை ஒரு சிக்ஸ் அடித்து 29 பந்துகளில் அரைசதம் கண்டார். ஹேல்ஸ் 37 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பெஹார்டீன் லாங் ஆனில் கோட்டை விட்டார். முதலில் ஜேசன் ராய் தனது வழக்காமான அதிரடியில் 200% ஸ்ட்ரைக் ரேட்டில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 14 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார் இதுதான் ஒரே விக்கெட்.

பேர்ஸ்டோ 35 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 60 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார், ஹேல்ஸ் 47 ரன்களுக்கு அவுட் ஆகவில்லை.

ஆட்ட நாயகனாக பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x