Published : 08 May 2016 10:37 AM
Last Updated : 08 May 2016 10:37 AM

துல்லியமான கடைசி ஓவர்களை வீசி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி

மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

இலக்கைத் துரத்தும் போது கடைசி 36 பந்துகளில் டெல்லி அணி வெற்றிக்க்கு 54 ரன்கள் தேவை. எளிதான வெற்றியாக முடிந்திருக்க வேண்டியது ஆனால், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சந்தீப் சர்மா, மோஹித் சர்மா ஆகியோரின் துல்லியமான இறுதி ஓவர்களினால் 9 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோல்வி தழுவ நேரிட்டது. மோஹித் சர்மா கடைசியில் 2 ஓவர்களில் 7 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

இத்தனைக்கும் கிரீசில் பிராத்வெய்ட், கிறிஸ் மோரிஸ் ஆகிய அதிரடி வீரர்கள் இருந்தனர். ஆனால் வேகம் குறைந்த லெக் கட்டர்கள், சில வேக ஷார்ட் பிட்ச் பந்துகள் மற்றும் யார்க்கர்கள் ஆகியவற்றை டெல்லி வீரர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இலக்கைத் துரத்தும் போது குவிண்டன் டி காக் தனது வழக்கமான அனாயாச அதிரடியில் 30 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். முதல் 4 ஓவர்களில் 23 ரன்களையே எடுத்தாலும் பிறகு அதிரடியினால் 8வது ஓவர் முடிவில் 70 ரன்கள் என்று அதிகரித்தது. சஞ்சு சாம்சன் 35 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்தார். குவிண்டன் டி காக் 52 ரன்களில் ஸ்டாய்னிஸிடம் வெளியேறினார்.

சாம்சன், கருண் நாயர் 6 ஒவர்களில் 51 ரன்கள் சேர்த்தனர். சாம்சன் 49 ரன்களில் ஸ்டாய்னிசிடம் வெளியேற 23 ரன்களில் கருண் நாயர் கரியப்பாவிடம் வீழ்ந்தார். 15.3 ஓவர்களில் 134/3 என்ற நிலையில் 27 பந்துகளில் 48 ரன்கள் வெற்றிக்குத் தேவை.

சந்தீப் சர்மாவை ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்த பிராத்வெய்ட் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மோஹித் சர்மா 3 ரன்களையே 19-வது ஓவரில் விட்டுக் கொடுத்தார். 20-வது ஓவரை சந்தீப் சர்மா 2 யார்க்கர்களுடன் முடித்தார், டெல்லி அணி வெற்றி பெறும் நிலையிலிருந்து தோல்வி தழுவியது. ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முன்னதாக டெல்லி டேர் டெவில்ஸ் அணி பீல்டிங் மோசமாக அமைந்தது, ரன் அவுட் வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ஓவர்களில் 48 ரன்கள் என்ற தொடக்கத்தைப் பெற்றது ஆனால் விஜய், ஆம்லா அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறினர். ஜாகீர் கான் குறைந்த தூரம் ஓடி வந்து வீசினார் 3 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஸ்டாய்னிஸ், சஹா ஆகியோர் அரைசதங்கள் எடுத்தனர். இதனையடுத்து கிங்ஸ் லெவன் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x