Published : 26 Aug 2016 09:39 AM
Last Updated : 26 Aug 2016 09:39 AM

திண்டுக்கலிலும் டிஎன்பிஎல் போட்டி தொடக்கம்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்திக் 67 ரன் எடுத்தார்.

சேப்பாக் அணி தரப்பில் சதீஷ் 2 விக்கெட் கைப்பற்றினார். 165 ரன்கள் இலக்குடன் விளையாடி சேப்பாக் அணி 19.4 ஓவர்களில் 119 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தூத்துக்குடி அணி தரப்பில் ஆகாஸ் சும்ரா, அவுசிக் சீனிவாஸ் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இந்நிலையில் தொடரின் 2-வது நாளான நேற்று திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் திருவள்ளூர் வீரன்ஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதின. இந்த போட்டியையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாடகி சின்னப்பொன்னு, பாடகர் ஹரிச்சரண் ஆகியோர் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். 30-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்ற நடனமும் நிகழ்ச்சியில் இடம் பெற்றது. இதையடுத்து போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

ஆர்.நிவாசன் 38 பந்தில், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்னும், விஜய் குமார் 39 பந்தில், 4 புவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 43 ரன்னும், ராஜ்குமார் 13 பந்தில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸருடன் 34 ரன்களும் எடுத்தனர்.

திருவள்ளூர் அணி தரப்பில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து 166 ரன்கள் இலக்குடன் திருவள்ளூர் வீரன்ஸ் அணி பேட் செய்ய தொடங்கியது. டிஎன்பிஎல் தொடரின் 3-வது நாளான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- காஞ்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் நேரடி ஒளிபரப்பாகிறது.

டிஎன்பிஎல் டி 20 தொடரின் 2-வது நாள் ஆட்டம் நேற்று திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பாடகி சின்னப்பொன்னு, பாடகர் ஹரிச்சரண் ஆகியோர் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

படங்கள்:கே.பிச்சுமணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x