Last Updated : 02 Aug, 2015 10:18 AM

 

Published : 02 Aug 2015 10:18 AM
Last Updated : 02 Aug 2015 10:18 AM

தமிழக வீராங்கனை சாந்தியிடம் பறிக்கப்பட்ட பதக்கங்கள் திரும்ப கிடைக்குமா? - டூட்டி சந்தின் தீர்ப்பையொட்டி ஒரு கோரிக்கை

ஒடிஷா வீராங்கனை டூட்டி சந்த் வழக்கில் சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பைத் தொடர்ந்து, அதேபோன்றதொரு அநீதிக்கு ஆளான தமிழக வீராங்கனை சாந்தியின் பதக்கங்கள் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் தடகள வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன். இவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் 11 பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். 2006-ல் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 நிமிடம், 3.16 விநாடிகளில் இலக்கை எட்டிய சாந்தி, அதன்பிறகு பாலின சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் அவரிடமிருந்து அனைத்து பதக்கங்களும் பறிக்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இது சாந்தியின் வாழ்க்கையை புரட்டிபோட்டது. கனவுகளை தொலைத்த சாந்தி, இப்போது ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளராக பணிபுரிகிறார்.

இந்த நிலையில் டூட்டி சந்தின் வழக்கை விசாரித்த சர்வதேச விளையாட்டு நீதிமன்றம், ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருந்தால், சம்பந்தப்பட்ட வீராங்கனையின் செயல்பாடு மற்ற வீராங்கனைகளைவிட அதிகமாக இருக்கும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே தடகளப் போட்டியில் வீராங்கனைகளின் பெண் தன்மை தொடர்பான ஹைபர்ஆண்ட்ரோஜெனிஸம் (Hyperandrogenism) விதிகளுக்கு 2 ஆண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளது. இதனால் சாந்திக்கும் நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுபற்றி சர்வதேச ஒலிம்பிக் கல்வி மையத்தின் ஆய்வு உதவியாளரும், சிருஷ்டி மதுரை அமைப்பைச் சேர்ந்தவருமான கோபி ஷங்கர் கூறியதாவது: ஒடிஷாவைச் சேர்ந்த தடகள வீராங்கனையான டூட்டி சந்துக்கு டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது இந்திய தடகள சம்மேளனம். தடகளப் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘ஒருவரை ஆண் என்றும், பெண் என்றும் எவ்வாறு நிர்ணயம் செய்கிறீர்கள்? ஹார்மோன்களை அடிப்படையாக வைத்து மட்டும் பாலினத்தை நிர்ணயம் செய்வது முற்றிலும் அறிவியல் பூர்வமற்றது. பெண் தன்மையை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள விதிமுறைகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது.

எனவே, சர்வதேச தடகள விளையாட்டு சம்மேளனம், பாலின பரிசோதனை முறை மற்றும் விதிமுறைகள் பற்றி 2 ஆண்டுக்குள் திருப்தி அளிக்கும் வகையில் பதில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில், பாலின பரிசோதனை நடைமுறை ஒட்டுமொத்தமாக நீக்கப்படும்’என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

விளையாட்டுத்துறையைப் பொறுத்தவரையில், ஒரு ஆண் தானொரு ஆண்தான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. ஆனால், பெண்கள் மட்டும் தங்களை பெண் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த விதிமுறையால் சர்வதேச அளவில் இதுவரையில் 75 வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தின் புதிய உத்தரவு மூலம் விளையாட்டுத்துறையில் பாலின சமத்துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது.

டூட்டி சந்திற்கு 2 ஆண்டிற்குள் நீதி கிடைத்துள்ளது. அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தடை விலகிவிட்டது. கடந்த 2006-ம் ஆண்டு இதே விதியின் அடிப்படையில் தான் சாந்தி சவுந்திரராஜனிடம் பதக்கங்கள் பறிக்கப்பட்டதோடு, போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. சாந்திக்கு நியாயம் கிடைக்கவும், அவருடைய பதக்கங்களை பெற்றுத்தரவும் மத்திய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறையில் ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளராக இருக்கிறார் சாந்தி. அவருக்கு பணி நிரந்தரமும் வழங்க வேண்டும்” என்றார்.

சாந்தியின் பதக்கங்களை திரும்பப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியளித்து வரும் அவருக்கு பணி நிரந்தரம் வழங்குவதற்கும் மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆவன செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x