Published : 13 Jan 2017 05:45 PM
Last Updated : 13 Jan 2017 05:45 PM

தனித்தனி கேப்டன்கள் பயனளிக்காது என்பதே பதவி விலகக் காரணம்: மனம் திறந்த தோனி

டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் விராட் கோலி ஸ்திரமடைவதற்காக காத்திருந்ததாக தோனி தனது கேப்டன்சி விலகல் பற்றி முதல் முறையாக நீண்ட பேட்டி அளித்துள்ளார்.

புனேயில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறியதாவது:

“தொடக்கம் முதலே, நான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியதிலிருந்தே, ஒவ்வொரு வடிவத்திற்கும் வேறு கேப்டன்கள் என்பது இந்திய அணியைப் பொறுத்தவரை ஒத்து வராது என்றே கருதினேன். நம் அமைப்பில் அது பயனளிக்காது.

நான் சரியான தருணத்திற்காக காத்திருந்தேன். டெஸ்ட் வடிவத்தில் விராட் கோலி சவுகரியமான ஒரு ஸ்திர நிலையை எட்டட்டும் என்று காத்திருந்தேன். தற்போது அவர் அனைத்து வடிவங்களுக்கும் கேப்டன் பொறுப்பேற்க தயாராகிவிட்டதாகவே நான் முடிவெடுத்தேன். இதில் தவறில்லை, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவுதான் இது. இதுதான் தருணம் என்று நான் உணர்ந்தேன்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று மேலும் நகர வேண்டும் இதற்கு விராட் கோலிக்கு வழிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன். சாம்பியன்ஸ் டிராபி வரை நான் கேப்டனாக நீடித்திருந்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது.

ஆஸ்திரேலியாவில் பாதி தொடரிலேயே நான் ஏன் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கலாம், ஆனால் நாம் பெரிய புலத்தை யோசிக்க வேண்டும். எது அணிக்குப் பயனளிக்கும் என்பதை யோசிக்க வேண்டும். இன்னொரு போட்டி என்ற எனது எண்ணிக்கையால் பெரிய வித்தியாசம் ஒன்றும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

சஹா ஆஸ்திரேலியாவில் இருந்தார், அவர் ஆஸ்திரேலியாவில் இன்னொரு டெஸ்ட் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும். எனவே அனைத்தும் நன்றாகச் சென்றால் அயல்நாட்டு தொடர்களுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு அவர்தான் விக்கெட் கீப்பராகச் செல்லப் போகிறார். அவருக்கு அதற்கு ஆஸ்திரேலியாவில் அனுபவம் பெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், அதே போல் விராட் கோலிக்கும்தான்.

அணியில் விக்கெட் கீப்பர்தான் அறிவிக்கப்படாத துணை கேப்டன், களவியூகம் அமைப்பது துணைக் கேப்டன் அல்லது விக்கெட் கீப்பரிடம் வழக்கமாக அளிக்கப்படுவதுதான். இந்த இடத்தில் இனி எனது பணி என்னவெனில் கேப்டன் என்ன விரும்புகிறார் என்பதை நான் நெருக்கமாக கவனிக்க வேண்டும். அவருக்கு தேவையான களவியூகம் என்னவென்பதையும் கவனிக்க வேண்டும்.

நான் விராட் கோலியிடம் இது குறித்து ஏற்கெனவே பேசியுள்ளேன், களவியூகம் எப்படி அமையவேண்டும், பீல்டர்களை எங்கு நிறுத்த வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்பதை கலந்தாலோசித்துள்ளேன். உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில் தேர்ட் மேன் நிலையை அவர் எப்படி விரும்புகிறார். ஷார்ட் தேர்ட் மேனா? கொஞ்சம் வைடாக வேண்டுமா? என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். என்னைப்பொறுத்தவரையில் ஷார்ட் தேர்ட் மேன், அல்லது ஷார்ட் பைன் லெக் எனக்கு சற்று அருகில் இருக்க வேண்டும் அதுதான் பேட்ஸ்மெனுக்கு கடினமாக இருக்கும் என்று நினைப்பேன். இதற்கெல்லாம் நான் மாற்றிக்கொள்ள வேண்டும், ஆனால் ஒட்டுமொத்தமாக பெரிய மாற்றங்கள் இருக்காது.

தேவைப்படும்போது, விராட் கோலிக்கு என்னால் முடிந்த அறிவுரைகளை வழங்குவேன். களவியூகமே நான் அதிகம் கவனம் செலுத்தும் இடம். நான் கோலியுடன் ஆலோசனை செய்ய வேண்டும், நான் இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் அதுதான் உத்தி ரீதியாக சரியானது என்று அவர் நினைக்கும் போது நான் என் இஷ்டப்படி நகர்ந்து கொண்டிருக்கக் கூடாது, ஆனால் இதெல்லாம் பெரிய விஷயமில்லை. எப்படியிருந்தாலும் சில ஆட்டங்களுக்கு களவியூகம் மீது என் கவனம் இருக்கும்.

ஒரு வீரரின் திறமை என்னவாக இருந்தாலும் அதனை 100% பயன்படுத்திக் கொள்வதுதான் எனது கேப்டன்சி அணுகுமுறை. 90% முதல் 110% வரை சாதித்தால் உண்மையில் நன்றாக ஆடுவதாகவே அர்த்தம்.

80% திறமை உள்ள வீரரிடமிருந்து 150% ஆட்டத்திறனை நாம் எதிர்பார்க்க முடியாது. இங்குதா நடைமுறை ரீதியாக நாம் சிந்திக்க வேண்டும், நேர்மையாக சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக கையாள வேண்டும், சிலருக்கு ஓரிரு வார்த்தைகளே போதும் சிலருக்கு கடுமையான வார்த்தைகள் தேவைப்படும். சிலருக்கு பார்வை ஒன்றே போதும். ஒரு தருணத்தில் ஒருவருக்கு என்ன தேவை என்பதை புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.

அணியின் திறன் என்னவென்பதை அறிந்திருந்தால் அவர்கள் தங்கள் திறனுக்கேற்ப ஆடுவதை உறுதி செய்ய முடியும். சில வேளைகளில் பிரச்சினை ஏற்படும், 2-3 பேட்ஸ்மென்கள் ரன்கள் எடுக்காமல் இருப்பார்கள், கஷ்டப்படுவார்கள். இது ஒரு பெரிய தடைதான். ஆனால் நாம் பெரிய தொடர்களை கருத்தில் கொள்ள வேண்டும், ஐசிசி உலகக்கோப்பை போன்ற தொடர்களில் நாக்-அவுட் சுற்றில் யார் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வார்கள் என்பதை கண்டறிய வேண்டும். ஆனால் முடிவில் ஒரு தனிப்பட்ட வீரருக்கு சில ஆட்டங்களே அளிக்க முடியும். ஒட்டுமொத்தமாக இதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது, இதற்குமே வீர்ர்கள் மீது நம்பிக்கை வைப்பது அவசியம்.

நான் கேப்டன்சி ஏற்றபோது அணியில் நிறைய மூத்த வீரர்கள். ஆனால் அவர்கள் ஒருகட்டத்தில் ஓய்வு பெற வேண்டி வந்தது. எனவே மாறும் அணியை இயல்பாக்குவது முதல் கடமை. ஒரு நல்ல விஷயம் என்னவெனில், மூத்த வீரர்கள் போன பிறகு அணிக்கு வந்த இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக ஆடிவருகின்றனர் எனப்தே.

நாம் அவர்களில் முதலீடு செய்துள்ளோம், இவர்கள்தான் இந்திய கிரிக்கெட் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார்கள். எனவே இதைப் பார்ப்பதற்கு திருப்திகரமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தப் பயணத்தை நான் நேசித்தேன். இந்த திருப்திதான், அது வெற்றிகாலங்களாக இருந்தாலும் தோல்வி காலங்களாக இருந்தாலும், நம் முகத்தில் புன்னகையை வரவழைப்பது. பயணம் என்பதே முக்கியம்.

இவ்வாறு பேசினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x