Published : 18 Jul 2017 10:09 AM
Last Updated : 18 Jul 2017 10:09 AM

டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்து மதிக்கவில்லையா? - மைக்கேல் வான் விமர்சனத்தில் ஜோ ரூட் அதிர்ச்சி

இங்கிலாந்து அணி வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது மரியாதை இல்லை என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் வைத்த விமர்சனம் நடப்பு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பிபிசி டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலில் பேசிய மைக்கேல் வான், இங்கிலாந்து அணியின் மோசமான பேட்டிங் அந்த அணியின் வீரர்களுக்கு டெஸ்ட் போட்டியின் மீது மரியாதை இல்லை என்பதை காட்டுகிறது. “டி20 போட்டிகளில் விளையாடுவது போல் ஆடுகின்றனர்” என்று கடுமையாக விமர்சித்தார்.

2-வது டெஸ்ட் போட்டியில் நேற்று 133 ரன்களில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் வரலாற்றில் ரன்கள் வித்தியாச அடிப்படையில் மிகப்பெரிய தோல்வியை இங்கிலாந்து தழுவியது. இதில் தேவையற்ற ஆக்ரோஷ ஷாட்களில் விக்கெட்டுகள் சரிந்தன.

இதனையடுத்து மைக்கேல் வான் இவ்வாறு தாக்க, வர்ணனையாளர் நாசர் ஹுசைன், “குப்பைக்கூளமான கிரிக்கெட் ஆட்டத்தை ஆடினர்” என்று கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் விமர்சனங்களால் அதிர்ச்சியடைந்த புதிய கேப்டன் ரூட், “இந்த விமர்சனங்கள் நியாயமற்றது. மைக்கேல் வான் இவ்வாறு கூறினார் என்பதை நம்புவதற்கே எனக்கு கடினமாக உள்ளது.

இத்தகைய தொடர்களை வெல்வதில்தான் எங்கள் பெருமை உள்ளது என்பதை அறிவோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தப் போட்டியில் மோசமாக ஆடிவிட்டோம்.

நாங்கள் பேட் செய்த விதம் ஏமாற்றமளிக்கக் கூடியதே. ஒரு தரமான அணி என்பதற்கு இணங்க ஆடவில்லை, எதையும் விட்டுக் கொடுக்காத அணி என்ற மனநிலைக்கேற்ப ஆடவில்லை.

அமைதியாக இருக்க வேண்டும், இன்னும் இந்தத் தொடர் முடிந்து விடவில்லை. நாம் இந்தத் தோல்வியை வைத்து நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்வது நல்லதல்ல. நாம் நல்ல அணி, ஒரு தோல்வியில் அனைத்தையும் இழந்து விட மாட்டோம்.

முதல் இன்னிங்ஸில் சூழ்நிலையைச் சரியாகக் கணிக்கவில்லை. அதிலிருந்து ஆட்டத்திற்குள் திரும்ப முடியாமல் பாதையை இழந்தோம்.

உலக கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் ஒருநாள், டி20, டெஸ்ட் கிரிக்கெட் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுவதில் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. நிறைய ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடியது சிக்கல்தான், ஆனால் வடிவங்களுக்குள் விரைவாக மாறுவது அவசியம்.

இந்த அணுகுமுறை சரிவரவில்லை என்றால் விரைவில் வேறு அணுகுமுறைக்கு மாற வேண்டும், மாறுவோம்” இவ்வாறு கூறினார் ஜோ ரூட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x