Published : 28 Dec 2016 07:45 PM
Last Updated : 28 Dec 2016 07:45 PM

டெஸ்ட் கிரிக்கெட்டின் 10,000-மாவது எல்.பி.டபிள்யூ அவுட்: ஆம்லாவை வீழ்த்திய நுவான் பிரதீப்

டெஸ்ட் கிரிக்கெட் இன்று 10,000-வது எல்.பி.டபிள்யூ. தீர்ப்பைக் கண்டுள்ளது.

போர்ட் எலிசபத் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை ஆடி வருகிறது.

அந்த அணியின் ஹஷிம் ஆம்லா, தேநீர் இடைவேளைக்கு முன்னர் 53 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் பந்தில் நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார்.

இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10,000-மாவது எல்.பி.அவுட் ஆகும். நுவான் பிரதீப்பும் ஹஷிம் ஆம்லாவும் புள்ளிவிவரப்பட்டியலில் இதன் மூலம் இடம்பெற்றனர்.

தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்ஸில் 286 ரன்களை எடுக்க, சுரங்க லக்மல் அபாரமாக வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 205 ரன்களுக்குச் சுருண்டது, அந்த அணியில் அதிகபட்சமாக டி.எம்.டிசில்வா 43 ரன்களை எடுத்தார். வெர்னன் பிலாண்டர் 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைல் அபாட் 3 விக்கெட்டுகளையும், ரபாடா, மஹராஜ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

81 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா தேநீர் இடைவேளை வரை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது, தொடக்க வீரர் ஸ்டீபன் குக் 108 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x