Published : 19 Oct 2016 08:55 PM
Last Updated : 19 Oct 2016 08:55 PM

டெல்லியில் இன்று 2-வது ஒருநாள் போட்டி: வெற்றி முனைப்பில் தோனி குழுவினர்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) பிற்பகலில் நடைபெறுகிறது.

வெற்றி முனைப்பில் இந்திய அணி இந்த ஆட்டத்தை சந்திக்கும் நிலையில், இப்போட்டியில் கேப்டன் தோனி 61 ரன்களை சேர்த்து 9 ஆயிரம் ரன்களை எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. தற்போது அதே ஆதிக்கம் ஒருநாள் போட்டி தொடரில் தோனியின் தலைமையின் கீழ் தொடர்கிறது. வெற்றியின் தருணங்களை இந்திய வீரர்கள் ஒருநாள் போட்டி தொடரிலும் சுமந்த வண்ணம் உள்ளனர்.

5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஹர்திக் பாண்டியா தனது அறிமுக ஆட்டத்திலேயே பந்து வீச்சில் அசாத்திய திறனை வெளிப்படுத்தினார்.

கடைசி டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த விராட் கோலி ஒருநாள் போட்டி தொடரிலும் தனது ஆதிக்கத்தை தொடர்கிறார். முதல் ஒருநாள் போட்டியில் 85 ரன்கள் விளாசிய அவர் தனது சொந்த மைதானமான பெரோஷா கோட்லாவில் மேலும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்.

இந்திய அணியில் இன்று எவ்வித மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. வெற்றி கூட்டணியை அப்படியே தோனி தொடரக்கூடும். முதல் ஆட்டத்தில் தொடக்க பந்து வீச்சில் அசத்திய ஹர்திக் பாண்டியா இந்த தொடர் முழுவதும் அசத்தும் பட்சத்தில் தனது இடத்தை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள முடியும்.

முதல் ஆட்டத்தில் குறைந்த இலக்கு என்பதால் இந்திய அணிக்கு பேட்டிங்கில் அதிக நெருக்கடி இல்லை. டாப் ஆர்டர்கள் ஜொலிக்க தவறினால் நடுக்கள பேட்டிங்கில் மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தோனி ஆகியோருக்கு நெருக்கடி ஏற்படக்கூடும்.

முதல் ஆட்டத்தில் அக் ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விக்கெட்கள் வீழ்த்தவில்லையென்றாலும் ரன்குவிப்பை கட்டுப்படுத்த உதவினர். இதேபோல் பகுதி நேர பந்து வீச்சாளரான கேதார் ஜாதவ் அணிக்கு பலம் சேர்ப்பது கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது. பேட்டிங்கிலும் அவர் கைகொடுக்கும் பட்சத்தில் ரெய்னா இடத்தை நிரப்பக்கூடும். முதல் ஆட்டத்தில் சோபிக்க தவறிய அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா ஜோடி இன்று நிலைத்து நின்று விளையாட முயற்சிக்கும்.

டெஸ்ட் தொடரில் தடுமாற்றம் கண்ட நியூஸிலாந்து அணி முதல் ஒருநாள் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 65 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் டாம் லதாமும், டிம் சவுத்தியும்தான் அணியை சரிவில் இருந்து மீட்க உதவினர்.

நாளைய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும். தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர் ஆகியோர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் இருவரும் தற்போதைய இந்திய சுற்றுப்பணத்தில் ஒரு ஆட்டத்தில் கூட 50 ரன்களை தொடவில்லை.

அவர்கள் நீக்கப்படும் பட்சத்தில் ஆன்டன் டேவ்சிச், மேட் ஹென்றி ஆகியோர் இடம்பெறக்கூடும். பெரோஷா கோட்லா மிதவேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நியூஸிலாந்து அணிக்கு சற்று சாதகமான விஷயமாகவும் கருதப்படுகிறது.

9 ஆயிரம் ரன்கள்

தோனி ஒருநாள் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்கள் மைல் கல்லை நெருங்குகிறார். தற்போது அவர் 8,939 ரன்கள் சேர்த்துள்ளார். இன்னும் 61 ரன்களை அவர் சேர்க்கும் பட்சத்தில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

ரெய்னா இல்லை

முதல் போட்டியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக விளையாடாத சுரேஷ் ரெய்னா தற்போது வலை பயிற்சியை தொடங்கியுள்ளார். எனினும் போட்டியில் விளையாடும் அளவுக்கு அவர் முழு உடல் தகுதியை பெறவில்லை என்பதால் 2-வது ஒருநாள் போட்டியிலும் அவர் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணிகள் விவரம்:

இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே, ஜெயந்த் யாதவ், அக் ஷர் படேல், ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மன்தீப் சிங், அமித் மிஸ்ரா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ்.

நியூஸிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர், டாம் லதாம், லூக் ரான்ஜி, ஜேம்ஸ் நீஷம், கோரே ஆண்டர்சன், டக் பிரேஸ்வெல், ஆன்டன் டேவ்சிச், வாட்லிங், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட், மேட் ஹென்றி.

நேரம்: பிற்பகல் 1.30 | நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

பாண்டியாவுக்கு முழு சுதந்திரம்: அனில் கும்ப்ளே

ஆட்டத்தின் சூழ்நிலையை பொறுத்தே பேட்டிங்கில் முன்னதாகவே களமிறங்குகிறார் தோனி. துரத்தலின் போது அனுபவம் நிச்சயம் வேண்டும். தோனிக்கு போதுமான அனுபவம் உள்ளது.

அவர் போதுமான திறன்களை கொண்டுள்ளதை கடந்தகால போட்டிகளில் காணலாம். பேட்டிங்கில் செட்டில் ஆவதற்கு அவருக்கு நாம் அதிக நேரம் கொடுக்க வேண்டியதில்லை.

ஹர்திக் பாண்டியா முதல் ஆட்டத்திலேயே சிறப்பாக செயல்பட்டார். இளம் வீரரான அவருக்கு நாங்கள் அதிக நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளோம். அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x