Last Updated : 03 Dec, 2015 10:17 AM

 

Published : 03 Dec 2015 10:17 AM
Last Updated : 03 Dec 2015 10:17 AM

டெல்லியில் இன்று முதல் 4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது. எனவே இப்போட்டியில் எப்படியும் வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

அதே நேரத்தில் இதில் தோற்றால் அது இந்திய அணிக்கு எதிராக ஒரு தொடரில் தென் ஆப்பிரிக்கா பெற்ற மிகப்பெரிய தோல்வியாக இருக்கும். அதனால் இப்போட்டியில் தோல்வியைத் தவிர்ப்பதில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களே அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளனர். இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் வீழ்ந்த 50 தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் அஸ்வின் மிக அதிகபட்சமாக 24 விக்கெட்டுகளையும், ஜடேஜா 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி யுள்ளனர். அமித் மிஸ்ராவுக்கு 7 விக்கெட்டுகள் கிடைத்துள்ளன. எனவே இந்த போட்டியிலும் சுழற்பந்து வீச்சாளர்களையே இந்திய அணி பெருமளவில் நம்பியுள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சு ஆறுதலளிக்கும் அதே வேளையில் அணியின் பேட்டிங் கொஞ்சம் சொதப்பலாகவே உள்ளது. இத்தொடரில் முரளி விஜய் (195 ரன்கள்), புஜாரா (160 ரன்கள்) ஆகிய இருவரின் பேட்டிங் மட்டுமே ஓரளவு சொல்லிக்கொள்ளும்படி உள்ளது. மற்ற வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்திய கேப்டன் விராட் கோலி மிக மோசமாக ஆடிவருவது கவலையளிப்பதாக உள்ளது.

இன்று போட்டி நடக்கவுள்ள பெரோஷா கோட்லா மைதானத்தின் ஆடுகளத்தில் பந்து தாழ்வாகவும், மெதுவாகவும் எழும்பும் என்று கூறப்படுகிறது. இடது கை சுழற்பந்து வீச்சுக்கு இது ஓரளவு சாதகமாக இருக்கும் என்பதால் அமித் மிஸ்ராவின் பந்துவீச்சு இந்த மைதானத்தில் நன்றாக எடுபடும் என்று கணிக்கப்படுகிறது.

டேல் ஸ்டெயின்

தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின் இப்போட்டியில் ஆடுவது சந்தேகமாக உள்ளது. அதனால் அந்த அணி பந்துவீச்சில் மோர்ன் மோர்கலையே பெருமளவில் நம்பியுள்ளது.

பேட்டிங்கை பொறுத்தவரை அந்த அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் (173 ரன்கள்) மட்டுமே ஓரளவு ரன்களை எடுத்துள்ளார்.

இருப்பினும் கடந்த டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் டுபிளெஸ்ஸி, ஹசிம் ஆம்லா ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடியுள்ளது அந்த அணிக்கு சற்று தன்னம்பிக்கையை அளித் துள்ளது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x