Published : 06 Oct 2015 05:00 PM
Last Updated : 06 Oct 2015 05:00 PM

டி20-யில் டிவில்லியர்ஸை அதிக முறை வீழ்த்திய அஸ்வின்; மேலும் சில தகவல்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரை இந்தியா இழந்தாலும், அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு டிவில்லியர்ஸை மீண்டும் வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரை இந்தியா இழந்தாலும், ரசிகர்களுக்கு ஆறுதலளிக்கும் சில புள்ளி விவரங்கள் இருக்கவே செய்கின்றன.

அதில் குறிப்பாக, தனது பந்துவீச்சை பெரிய திமிங்கிலங்களை அனாயசமாக வேட்டையாடும் அளவுக்கு அசாத்தியமாக மேம்படுத்திய அஸ்வின் பந்து வீச்சு பற்றியது.

இலங்கை தொடரில் சங்கக்காராவை அனைத்து இன்னிங்ஸ்களிலும் வீழ்த்தினார், அதே போல் கிறிஸ் கெய்லை சிலபல முறைகள் வீழ்த்தியுள்ளார், இந்த வரிசையில் டிவில்லியர்ஸ் தற்போது இணைந்துள்ளார். அஸ்வின், டிவில்லியர்ஸை டி20 கிரிக்கெட்டில் 5 முறை அவுட் செய்துள்ளார். மற்ற பவுலர்கள் அதிகபட்சம் 3 முறையே டிவில்லியர்ஸை வீழ்த்தியுள்ளனர். அஸ்வினுக்கு எதிராக டிவில்லியர்ஸின் பேட்டிங் சராசரி வெறும் 12.40.

டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி இர்பான் பத்தானின் அதிகபட்ச விக்கெட்டுகளான 28-ஐ கடந்தார். அஸ்வினின் டி20 சிக்கன விகிதம் ஓவருக்கு 7.24. இதிலும் அஸ்வின் தற்போது முன்னிலை வகிக்கிறார்.

2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 74 ரன்களுக்குச் சுருண்ட பிறகு தற்போது 92 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அதாவது இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே 100க்கும் குறைவான ரன்களில் இந்தியா ஆட்டமிழந்துள்ளது. அதேபோல் டி20 போட்டிகளில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பது மொத்தமாக 4-வது முறையே.

தொடர்ச்சியாக 4-வது போட்டியில் நேற்று இந்திய தொடக்க வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். முதல் டி20-யில் ஷிகர் தவண் ரன் அவுட் ஆனார். நேற்று ரோஹித் சர்மா, இதற்கு முன்னதாக ஜிம்பாப்வேயிற்கு எதிராக விஜய் மற்றும் ரஹானே ரன் அவுட் ஆகினர்.

தோனியின் கேப்டன்சியின் கீழ் தொடர்ச்சியாக 4-வது டி20 தோல்வியாகும் நேற்றைய தோல்வி. உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் தொடங்கியது இந்த தோல்வி. 2009-ம் ஆண்டிலும் தொடர்ச்சியாக 4 போட்டிகளை தோனியின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணி இழந்துள்ளது என்பதும் கவனிக்கத் தக்கது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற 10 டி20 சர்வதேச போட்டிகளில் விராட் கோலி குறைந்தது 20 ரன்களையாவது எடுத்தார். கடந்த 11 இன்னிங்ஸ்களில் கோலியின் ஒற்றை இலக்க ரன் இதுவே. கடந்த 10 இன்னிங்ஸ்களில் கோலி 484 ரன்களை 5 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். சராசரு 69.14.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x