Published : 13 Mar 2016 12:46 PM
Last Updated : 13 Mar 2016 12:46 PM

டி 20 உலக கோப்பை தொடர்: 30 வயதை கடந்த 43 வீரர்கள்

ஆறுவது டி 20 உலக கோப்பை தொடரில் விளையாடும் அணிகளில் 30 வயதை கடந்த 43 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சூப்பர் 10 சுற்றில் விளையாடும் அணிகளில் உள்ள வீரர்கள் குறித்த தகவல்கள் சில.....

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா 37 வயதை நெருங்குகிறார். உமேஷ் யாதவ், வருண் ஆரோன், இஷாந்த் சர்மா ஆகியோர் திறம்பட செயல்படாத நிலையில் டி 20 அணியில் இடம் பெற்றுள்ளார் நெஹ்ரா.

சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பிய போதும் தனது ஸ்விங் பந்து வீச்சால் முத்திரை பதித்து வருகிறார். ஹர்பஜன்சிங் 35, தோனி 34, யுவராஜ்சிங் 34, ஷிகர் தவண் 30 வயதுடனும் உலக கோப்பை தொடரை சந்திக்கின்றனர்.

ஆஸி. அணியில் அதிக வயதான வீரராக வாட்சன் இடம் பிடித்துள் ளார். 34 வயதான அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் உள்ளதால் அந்நாட்டு வாரியம் அவரை பயன்படுத்திக் கொண்டுள்ளது. வாட்சனுக்கு இது கடைசி உலக கோப்பை என்பதாலும், ஆஸ்திரேலிய அணி இதுவரை டி 20 உலக கோப்பையை கைப்பற்றியதில்லை என்பதாலும் தனது சிறப்பான பங்களிப்பை அவர் அளிக்கக்கூடும்.

நடப்பு சாம்பியனான இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தில்ஷானுக்கு 39 வயதா கிறது. சூப்பர் 10 சுற்றில் இடம் பிடித்துள்ள அணிகளில் அதிக வயதுடையவர் இவர் தான். இந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹராத் 37 வயதை கடந்த வர் ஆவார். தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் அணிக்கு இவர்கள் புதுத் தெம்பு அளிக்க முயற்சிக்கக் கூடும்.

பாகிஸ்தான் அணியில் 30 வயதை கடந்த வீரர்கள் 7 பேர் உள்ளனர். இவர்களில் அப்ரீடிக்கு 36 வயதாகிறது. தேர்வுக்குழுவினர், பயிற்சியாளருடன் மோதல் போக்கு மற்றும் மோசமான தோல்விகள் ஆகியவற்றால் அப்ரீடியின் கேப்டன் பதவி கேள்விக்குறியாக உள்ள நிலையில் நெருக்கடியுடன் அவர் உலக கோப்பையை எதிர்கொள்கிறார். மற்ற வீரர்களில் ஹாலித் லத்திப் 30, முகமது ஹபீஸ் 35, முகமது இர்பான் 33, முகமது சாமி 35, ஷோயிப் மாலிக் 34, வஹாப் ரியாஸ் 30 வயதுடன் போட்டிகளை எதிர்கொள்கின் றனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் அதிக வயதுடைய வீரராக இம்ரன் தகிர் உள்ளார். அவருக்கு 36 வயதாகிறது. டி வில்லியர்ஸ், ஆம்லா, ஸ்டெயின், பெஹார்தின் ஆகியோர் 32 வயதை கடந்தவர்கள். வைஸ் 30, டுமினி 31, டுபிளெஸ்ஸி 31 வயதுடன் உலக கோப்பை தொடரை சந்திக்கின்றனர். இவர்களில் டி வில்லியர்ஸ் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றும் திறன் கொண்டவர்.

அதிகபட்சமாக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் 30 வயதை கடந்த 9 வீரர்கள் இடம் பிடித்துள் ளனர். சிக்ஸருக்கு பெயர் பெற்ற கெய்லுக்கு 36 வயதாகிறது. அவருக்கு அடுத்தப்படியாக மார்லோன் சாமுவேல்ஸ் 35 வயது டனும், டேரரன் சமி 32 வயதுடனும் தொடரை எதிர்கொள்கின்றனர்.

நியூஸிலாந்து அணியில் 4 வீரர்கள் 30 வயதை கடந்தவர் களாக உள்ளனர். அந்த அணியின் ராஸ் டெய்லர் 31, லூக் ரோன்ஜி 34, நாதன் மெக்கலம் 35, கிராண்ட் எலியாட் 36 வயதில் களம் காண்கின்றனர். இங்கிலாந்து அணியில் 30 வயதை கடந்த ஒரே வீரர் லயாம் புளுங்கெட் மட்டுமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x