Published : 22 Oct 2015 10:13 PM
Last Updated : 22 Oct 2015 10:13 PM

டிவில்லியர்ஸின் சாகச சதம் வீண்: சென்னையில் இந்தியா அபார வெற்றி

சென்னையில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா 35 ரன்களில் வீழ்த்தி தொடரை சமன் செய்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் டிவில்லியர்சின் அச்சுறுத்தலான, சாகச சதம் தென் ஆப்பிரிக்க வெற்றியை உறுதி செய்யவில்லை. இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. ஏன் சாகச சதம் எனில் இந்திய சுழற்பந்து வீச்சு ஆதிக்கத்தில் இருக்கும் போது எந்தஒரு வீரரும் டிவில்லியர்ஸைத் தவிர இப்படியொரு சதம் அடித்திருக்க முடியாது.

320 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய இந்திய அணியை 299 ரன்களுக்கு மட்டுப்படுத்திய தென் ஆப்பிரிக்கா 300 ரன்கள் இலக்கை விரட்டிய போது 9 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா 264 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

இம்முறை குவிண்டன் டிக் காக், ஹஷிம் ஆம்லா களமிறங்கினர். 3-வது ஓவரின் 3-வது பந்திலேயே அவுட் வாய்ப்புகள் ஏற்பட்டது. டி காக், ஆம்லாவுக்கு இடையே ரன் ஓடுவதில் குழப்பம் ஏற்பட ரோஹித் மிட் ஆனில் இருந்து அடித்த த்ரோ ஸ்டம்பைத் தவிர்த்தது, பிறகு பந்தை எடுத்து பேட்டிங் முனையில் அடிக்க அங்கு ஆம்லா நேரத்தில் கிரீஸுக்குள் மட்டையைக் கொண்டு வந்தார்.

ஆனால் டி காக் அதிரடி முறையில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுக்க முதல் 5 ஓவர்களில் 36 ரன்கள் வந்தது. அப்போது 7 ரன்கள் எடுத்திருந்த ஹஷிம் ஆம்லா, மோஹித் சர்மா பந்தை புல் ஆட மிட்விக்கெட்டில் தவண் சற்றே எம்பி கேட்சை பிடித்தார்.

டுபிளேசிஸ், டி காக் ஜோடி 10 ஓவர்களில் ஸ்கோரை 63க்கு உயர்த்தியது. குமாரை டி காக் அருமையான சிக்சர் ஒன்றை அடித்தார். குமார் பந்துவீச்சு மோசமாக அமைந்தது, ஷார்ட் பிட்ச் பந்துகளை அவர் அதிகம் வீசினார், வேகமும் இல்லை. இதனால் அவர் தனது 5 ஓவர்களில் 35 ரன்களை விட்டுக் கொடுத்தார். மோஹித் சர்மாவும் விதிவிலக்கல்ல அவர் 4 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

ஸ்பின்னர்கள் ஏற்படுத்திய சரிவு:

11-வது ஓவரில் அக்சர் படேல் வீச வந்தார். 2 ரன்களையே டுபிளேசி, டி காக்கால் எடுக்க முடிந்தது. 12-வது ஓவரில் ஹர்பஜன் வீச வந்தார். 35 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து அபாயகரமாக திகழ்ந்த குவிண்டன் டி காக் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். டி காக் டிரைவ் ஆட சபலப்பட்டு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆடினார் எட்ஜ் ஆனது ரஹானே ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தார்.

பிட்சில் ஸ்பின்னுக்கு சற்றே உதவி இருந்தது. இதனால் அக்சர், ஹர்பஜனை அடிக்க முடியவில்லை. டிவில்லியர்ஸ் இறங்கினார். இந்நிலையில் 14-வது ஓவரில் டிவில்லியர்ஸ் ஹர்பஜன் பந்தை மேலேறி வந்து பளார் என்று நேராக அடிக்க, பந்தின் வழியிலிருந்து விலக நினைத்த டுபிளேஸ்ஸிஸ் வலது முழங்கையை பந்து தாக்கியது. டுபிளேஸ்ஸிஸ் வலியில் துடித்தார், மைதானத்தில் சிறிது சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 34 பந்துகளில் 17 ரன்களையே எடுத்த டுபிளேஸ்ஸிஸ் படேல் வீசிய பந்தை ஆஃப் திசையில் தட்டி விட முயன்றார் பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட தோனி கேட்சைப் பிடித்தார், அப்பீல் செய்யாமலேயே அது விக்கெட்தான் என்று அவர் உறுதியாக இருந்தார். டுபிளேஸ்ஸிஸ் அவுட் தீர்ப்பில் திருப்தி அடையவில்லை, ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் அவுட் போல்தான் தெரிந்தது.

15 ஓவர்களில் 79/3 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா. அதாவது 5 ஓவர்களில் 16 ரன்களையே எடுக்க முடிந்த்து. இடது கை அபாய வீரர் டேவிட் மில்லர் 6 ரன்கள் எடுத்து ஹர்பஜன் சிங்கின் சாதுரியமான நேர் பந்துக்கு எல்.பி. ஆனார். 19 ஓவர்கள் முடிவில் 90/4 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா.

பெஹார்டீன், டிவில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு கவலை அளித்தது காரணம், அதிர்ஷ்டம் தென் ஆப்பிரிக்கா பக்கம் இருந்தது. ஏனெனில் டிவில்லியர்ஸுக்கு அமித் மிஸ்ரா வீசிய ஒரு பந்து அதிகம் திரும்ப தோனியையும் கடந்த பந்து ஸ்லிப்பிற்கு வர, டிவில்லியர்ஸ் கிரீஸுக்கு வெளியே இருந்தார், ஸ்லிப் பீல்டரின் த்ரோ முயற்சி நூலிழையில் தவறியது. டிவில்லியர்ஸ் தப்பினார்.

பிறகு பெஹார்டீனுக்கு புவனேஷ் குமார் சரியாகக் கணிக்காமல் ஒரு கேட்ச் வாய்ப்பை விட்டார், டிவில்லியர்ஸ் மீண்டும் அமித் மிஸ்ராவை புல் ஆட பந்து சரியாகச் சிக்காமல் மிட் ஆனுக்கு முன்னால் விழுந்தது. ஆனால் பெஹார்டீன் ரன் ஓடும் முயற்சியில் பந்து சரியாக சேகரிக்கப் படாததால் ரன் அவுட் வாய்ப்பும் தவற விடப்பட்டது.

இப்படியாக இந்த ஜோடி நகர்ந்தது. டிவில்லியர்ஸும் தனது மூர்க்கமான ஸ்ட்ரோக்குகளினால் அச்சுறுத்திக் கொண்டிருந்தார். இடையிடையே டிவில்லியர்ஸின் ஓரிரு ஷாட்கள் பீல்டருக்கு முன்னதாக விழுந்தபடியும் இருந்தது. இந்நிலையில் 32-வது ஓவரில் மிஸ்ரா பந்தில் பெஹார்டீன் எட்ஜ் செய்தார், தோனி கேட்ச் பிடித்தார் ஆனால் நடுவர் நாட் அவுட் என்றார், தோனியும், மிஸ்ராவும் வெறுப்படைந்தனர். ஆனால் அதே ஒவரில் மிஸ்ராவின் நேர் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று கால்காப்பில் வாங்க நடுவர் கையை உயர்த்தினார். அபாய வீரர் பெஹார்டீன் 38 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். டிவில்லியர்ஸ் அப்போது 64 பந்துகளில் 43 நாட் அவுட்.

டிவில்லியர்ஸின் சாகச சதம்:

பெஹார்டீன் அவுட் ஆனவுடன், கிறிஸ் மோரிஸ் களமிறங்க, அதற்கு அடுத்த புவனேஷ் குமார் ஓவரில் டிவில்லியர்ஸ் தனது மூர்க்கத்தை காட்டினார். டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு புல்ஷாட் பவுண்டரி, பிறகு மேலேறி வந்து கவர் திசையில் ஒரு விளாசல் பவுண்டரி மூலம் 66 பந்துகளில் அரைசதம் கடந்தார், பிறகு ஒரு பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு தோனியின் டைவையும் மீறி பைன் லெக் பவுண்டரிக்குப் பறந்தது.

அடுத்ததாக மிஸ்ரா வீச வர, லாங் ஆன் மிட்விக்கெட் இடைவெளியில் ஒரு பவுண்டரி பிறகு ஒரு மூர்க்கமான ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி. பிறகு ஹர்பஜன் சிங்கையும் மிக அற்புதமாக ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி விளாசினார். 84 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் டிவில்லியர்ஸ் 75 ரன்களில் அச்சுறுத்த 38 ஓவர்கள் முடிவில் 185/5 என்று தென் ஆப்பிரிக்கா இருந்தது. ஓவருக்கு 5 ரன்கள் விகிதம் கூட இல்லையென்றாலும் டிவில்லியர்ஸ் சாகசத்துக்கு தயாராக ஒரு முனையில் அச்சுறுத்த ஆட்டம் என்னவாகும் என்று புதிராகவே இருந்தது. அப்போது, மோஹித் சர்மா ஓவரில் மோரிஸ் 9 ரன்களில் ரஹானேயின் அற்புதமான த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

மேலும் டிவில்லியர்ஸ் பந்தை டீப்பில் அடித்து மிக வேகமாக இரண்டிரண்டு ரன்களாகவும் அடித்துக் கொண்டிருந்தார். பாங்கிசோ களமிறங்க இடையில் மிஸ்ரா ஒரு ஓவரை சிக்கனமாக வீசி 4 ரன்களையே கொடுத்தார். 40-வது ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா 200/6, டிவில்லியர்ஸ் 87 நாட் அவுட்.

42-வது ஓவரில் டிவில்லியர்ஸ் ஹர்பஜன் சிங்கை மேலேறி வந்து மிட்விக்கெட்டில் ஒரு அபாரமான சிக்சரை விளாசி 97க்கு வந்தார்.

பிறகு மிஸ்ரா வீசிய அடுத்த ஓவரில் மேலேறி வந்து மிக நேராக கொஞ்சம் தாழ்வான சிக்ஸ் ஒன்றை டிவில்லியர்ஸ் அடித்து 98 பந்துகளில் சதம் கண்டார். இது அவரது 22-வது ஒருநாள் சதம்; இந்தத் தொடரில் 2-வது சதமாகும். 44 ஓவர்கள் முடிவில் 229/6 என்று இருந்தது தென் ஆப்பிரிக்கா. 36 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 71 ரன்கள்.

அப்போதுதான் திருப்பு முனை ஒவரை வீச வந்தார் புவனேஷ் குமார். டிவில்லியர்ஸ் 45-வது ஓவரில் முதலில் 2 அபாரமான 2 ரன்களை முதல் 2 பந்துகளில் எடுத்தார். ஆனால் 3-வது பந்தை பவுன்சராக புவனேஷ் வீச புல் ஆட முயன்றார் டிவில்லியர்ஸ் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு தோனியிடன் தஞ்சமடைந்தது. பெரிய திமிங்கிலத்தை வீழ்த்தினார் புவனேஷ் குமார். 107 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 112 ரன்களில் டிவில்லியர்ஸ் பெவிலியன் திரும்பினார். அசாத்தியமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. சச்சின் டெண்டுல்கர் இருமுறை ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானின் மிகப்பெரிய் இலக்குகளை தனி மனிதனாக விரட்ட மேற்கொண்ட முயற்சிகளை டிவில்லியர்ஸின் இந்த இன்னிங்ஸ் நினைவூட்டியது.

45 ஓவர்களில் 239/7 என்ற நிலைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஒன்றும் செய்ய முடியவில்லை. பேங்கிசோ 20 ரன்களிலும், ஸ்டெய்ன் 9 ரன்களிலும் குமாரிடம் அவுட் ஆக, கடைசியில் 264/9 என்று தென் ஆப்பிரிக்கா முடிந்து போக 35 ரன்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்தியா தரப்பில் புவனேஷ் குமார் 10 ஓவர்களில் 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிவில்லியர்ஸ் விக்கெட் இவரது கைவண்ணமாகும். மோஹித் சர்மா சிறப்பாக வீசி 48 ரன்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்ற, ஹர்பஜன் 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 40 ரன்களுக்கு 1 விக்கெட்டையும், அமித் மிஸ்ரா 55 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆனால் அமித் மிஸ்ராவின் பந்து வீச்சு ரன் விகிதத்தை வைத்து அவரது பந்து வீச்சை எடைபோட முடியாது, டிவில்லியர்ஸை நிறைய முறை பீட் செய்தார் மிஸ்ரா. டிவில்லியர்ஸ் இவர் பந்தில்தான் அதிகம் தடுமாறினார்.

ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x