Published : 05 Aug 2014 09:22 PM
Last Updated : 05 Aug 2014 09:22 PM

ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரம்: மேல்முறையீட்டிற்கு பிசிசிஐ கோரிக்கை

ஜடேஜா-ஆண்டர்சன் மோதல் விவகாரத்தில் ஆண்டர்சன் மீது தவறில்லை எனக்கூறி அவரை விடுவித்த கார்டன் லீவிஸ் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது பிசிசிஐ.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவை தள்ளிவிட்டதாகப் புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் ஆண்டர்சனுக்கு 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகள் வரை தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக கடந்த 1-ம் தேதி விசாரணை நடத்திய ஐசிசி விசாரணை அதிகாரி கார்டன் லீவிஸ், இருவர் மீதும் எந்தத் தவறும் இல்லை எனக்கூறி இருவரையும் விடுவித்தார். இதனால் ஆண்டர்சன் தண்டனையிலிருந்து தப்பினார்.

இதைத் தொடர்ந்து கார்டன் லீவிஸ் வழங்கிய தீர்ப்பின் நகல் வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்போது ஐசிசியை நாடியிருக்கிறது பிசிசிஐ. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஐசிசி மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்பதால், ஐசிசியை அணுகியிருக்கிறது பிசிசிஐ.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், “கார்டன் லீவிஸின் தீர்ப்பு முற்றிலும் தவறானது என அணி நிர்வாகம் உள்ளிட்ட நாங்கள் அனைவரும் கருதுகிறோம். அதனால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு திங்கள்கிழமை இரவு இ-மெயில் மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

லீவிஸின் தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்ய முடியாது. ஐசிசி மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்பதால் ரிச்சர்ட்சனுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இது தொடர்பாக அடுத்த 48 மணி நேரத்தில் முடிவெடுக்கப்படும் என நம்புகிறேன்.

ஜடேஜாவை தள்ளிவிட்டதாக ஆண்டர்சனே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியிருக்கையில் அவர் குற்றமற்றவர் என எப்படிக்கூற முடியும். என்னைப் பொறுத்தவரையில் ஆண்டர்சன் ஐசிசியின் பல்வேறு விதிமுறைகளை மீறியிருக்கிறார் என்றார் பட்டேல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x