Published : 20 Feb 2017 11:21 AM
Last Updated : 20 Feb 2017 11:21 AM

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஷாகித் அப்ரிடி ஓய்வு

பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான ஷாகித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச அரங்கில் அவரின் 21 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

36 வயதான அப்ரிடி, முன்னதாக 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2015-ல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் 20-20 கிரிக்கெட்டில் விளையாடிய அப்ரிடி, 2016 உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்தார்.

அதைத் தொடர்ந்து போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பார் என்று எல்லோரும் நினைத்த வேளையில், அப்ரிடி தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் பின்னர் ஓய்வு பெற விரும்பிய அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற தொடரில் தனக்கு பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தி வழியனுப்பு விழா நடத்த வேண்டும் என விரும்பினார். ஆனால் கிரிக்கெட் வாரியம் இதனை ஏற்க மறுத்தது. இதையடுத்து அவர் தேசிய அணியில் இடம்பெறுவது அரிதானது.

1996-ல் அப்ரிடி தனது 2-வது ஆட்டத்திலேயே இலங்கை அணிக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை நிகழ்த்தியதை கிரிக்கெட் உலகம் அவ்வளவு எளிதில் மறந்துவிடாது. இந்த சாதனையானது 18 வருடங்கள் முறியடிக்கப்படாமலேயே இருந்தது.

அப்ரிடியின் சாதனையை 2014-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நியூஸிலாந்தின் கோரே ஆண்டர்சன் முறியடித்தார். அவர் 36 பந்துகளில் சதம் அடித்தார். அடுத்த ஆண்டே இந்த சாதனையை டி வில்லியர்ஸ் தகர்த்தெறிந்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர் 31 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசினார்.

சர்ச்சைகளுக்கும் அப்ரிடி சளைத்தவர் அல்ல. 2005-ம் ஆண்டு பைசலாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்தை காலால் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கினார். இதில் அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அப்ரிடி, பந்தை பற்களால் கடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் அவருக்கு இரண்டு டி20 ஆட்டங்களில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

கிரிக்கெட் வாழ்க்கையில் அப்ரிடி, தனது 2-வது கட்டத்திலேயே ஆல்ரவுண்டராக உருவெடுத்தார். அதிலும் 2009-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பட்டம் வென்றதில் அப்ரிடியின் பங்கு அதிகம் இருந்தது.

சர்வதேச கிரிக்கெட்டை முடித்துக்கொண்டுள்ள அப்ரிடி 27 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற 1,176 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 156 ஆகும். 48 விக்கெட்களும் கைப்பற்றி உள்ளார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 398 ஆட்டங்களில் 8,064 ரன்கள் குவித்துள்ளார். அதிக பட்ச ஸ்கோர் 124 ஆகும். இவற்றுடன் 395 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். டி20-ல் 98 ஆட்டங்களில் விளையாடி உள்ள அப்ரிடி 1,405 ரன்கள் சேர்த்துள்ளார். 97 விக்கெட்களை வேட்டையாடி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஷார்ஜாவில், பாகிஸ்தான் சூப்பர் லீக் விளையாட்டில் பெஷாவருக்காக விளையாடி 28 பந்துகளில் 54 ரன்களைக் குவித்த அப்ரிடி, ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''சர்வதேச கிரிக்கெட்டுக்கு நான் குட்பை சொல்லிவிட்டேன். என்னுடைய ரசிகர்களுக்காக நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களுக்கு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவேன். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.

இப்போது என்னுடைய அறக்கட்டளை மிகவும் முக்கியமாக இருக்கிறது. என்னுடைய நாட்டுக்காக சிறப்பாகவும், தீவிரமாகவும், உரிய முறையிலும் விளையாடினேன்'' என்று தெரிவித்துள்ளார்.

'பூம் பூம்' என்று அழைக்கப்பட்ட அப்ரிடி:

‘பூம் பூம்’ என்று அவரது அதிரடியை பாராட்டும் ரசிகர்களுக்கு அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். 1996-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் அதிவேக அதிரடி சதம் கண்டு உலக சாதனை நிகழித்தி கிரிக்கெட் உலகில் பரபரப்பை நிகழ்த்தியவர். 18 ஆண்டுகள் இந்தச் சாதனையை உடைக்க முடியவில்லை. பிறகு டிவில்லியர்ஸ் மே.இ.தீவுகளுக்கு எதிராக 31 பந்துகளில் சதம் கண்டு அப்ரிடியை பின்னுக்குத் தள்ளினார்.

அருமையான லெக்ஸ்பின் பந்துவீச்சினால் கடினமாக நடுக்கள வீரர்களை அவர் வீழ்த்தி பாகிஸ்தானை பல போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளார்.

27 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அப்ரீடி 1,176 ரன்களை எடுத்தார். அதிகபட்ச ஸ்கோர் 156, விக்கெட்டுகள் 48.

398 ஒருநாள் போட்டிகளில் 8.064 ரன்களுடன் 395 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 124 அதிகபட்ச ஸ்கோராகும்.

டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 98 போட்டிகளில் 1,405 ரன்களையும் 97 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x