Last Updated : 13 Dec, 2016 01:46 PM

 

Published : 13 Dec 2016 01:46 PM
Last Updated : 13 Dec 2016 01:46 PM

கோலி பேட்டிங் குறித்த ஆண்டர்சன் விமர்சனத்துக்கு இன்சமாம் பதிலடி

கோலி பேட்டிங் குறித்து இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறிய விமர்சனத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய அணித் தேர்வுக்குழு தலைவருமான இன்சமாம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலி பேட்டிங் பற்றி கூறும்போது, ஸ்விங், பவுன்ஸ் இல்லாத இந்திய பிட்ச்களில் கோலியின் பேட்டிங் உத்திகளில் உள்ள போதாமைகள், குறைபாடுகள் தெரிவதில்லை. உள்நாட்டு பிட்ச்கள் அவரது குறைபாடுகளை மறைத்து விடுகிறது என்றார்.

“அவர் பேட்டிங் மாறிவிட்டதாக நான் கருதவில்லை. அவரது ஆட்டத்தில் உள்ள கோளாறுகள் இந்தப் பிட்ச்களில் தெரிவதில்லை. இந்தப் பிட்ச்கள் அவரது உத்திகளில் உள்ள போதாமைகளை எளிதாக மறைத்து விடுகிறது. மட்டையின் விளிம்பைப் பிடிக்கும் பிட்ச்கள் இங்கு இல்லை, இங்கிலாந்தில் கோலியை அப்படித்தான் வீழ்த்தினோம். ஆனால் இத்தகையப் பிட்ச்கள் அவருக்கு பொருத்தமாக உள்ளது.

கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகச்சிறந்த பேட்ஸ்மென். நாங்கள் அவரிடம் பொறுமை காத்தோம். ஆனால் அவரும் பொறுமை காத்துக் கொண்டேதான், உண்மையில் நன்றாக ஆடினார்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த இன்சமாம் உல் ஹக், “கோலியின் திறமையையும் அவர் எடுத்து வரும் ரன்களையும் ஆண்டர்சன் கேள்விக்குட்படுத்தியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அவர் இந்தியாவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.

அதாவது, இங்கிலாந்தில் ரன்கள் எடுத்தால் மட்டுமே ஒருவர் தரமான பேட்ஸ்மென் என்ற சான்றிதழ் கிடைக்கும் என்று ஆண்டர்சன் கூற வருகிறாரா? ஆங்கில, ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் துணைக்கண்டத்தில் தடுமாறுகிறார்களே! இதற்காக அவர்கள் மோசமான் வீரர்களா? அல்லது அணி மோசமான அணியாகிவிடுமா? எங்கு ரன்கள் சேர்க்கிறோம் என்பது முக்கியமல்ல, டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ரன்கள் என்றால் ரன்கள்தான்.

ஒரு பேட்ஸ்மென் எடுக்கும் ரன்கள் எத்தனை முறை அணியை வெற்றிக்கு இட்டுச் செல்கிறது என்பதை வைத்துதான் நான் பேட்ஸ்மெனைப் பற்றி மதிப்பீடு செய்வேன். ஒருவர் 80 ரன்கள் எடுக்கிறார் அதனால் அணி வெற்றி பெறுகிறது என்பதுதான் முக்கியமே தவிர ஒரு பேட்ஸ்மென் 150 ரன்கள் எடுக்கிறார் ஆனால் அணி தோல்வி அடைகிறது என்றால் என்ன பயன் இருக்க முடியும்?

நாம் நம் வீர்ர்களின் திறமைகளையே சுலபமாக குறைகூறி விடுகின்றோம்.ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் அவர்கள் தங்கள் வீரர்களை கடுமையாக ஆதரிக்கின்றனர். ஆஸ்திரேலியா இலங்கையிடம் 3-0 என்று தோல்வியடைந்ததை நாம் மறக்கக் கூடாது. யு.ஏ.இ.யில் இங்கிலாந்தை 3-0 என்று வீழ்த்தியுள்ளோம்.

விரேந்திர சேவாக் பற்றி...

சேவாக் மிக அபாயகரமான வீரர். ஏனெனில் அவர் 80 ரன்களை எடுக்கிறார் என்றால் அந்த அணி ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களை கடந்து விடும். அவர் அதிகம் நிற்க நிற்க பவுலர்களின் உத்வேகத்தை தன் பேட்டிங் மூலம் பாழாக்கி விடுவார். ஒரு கேப்டனாக எனக்கு இது மிகுந்த கவலையளிக்கும் விஷயமாக இருந்தது, என்றார் இன்சமாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x