Last Updated : 21 Nov, 2016 08:21 PM

 

Published : 21 Nov 2016 08:21 PM
Last Updated : 21 Nov 2016 08:21 PM

கோலியின் ரன்களை கழித்து விட்டுப்பாருங்கள்: தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் குக்

விசாகப்பட்டணம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது குறித்து கேப்டன் அலஸ்டைர் குக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது, கோலி இந்த டெஸ்ட்டில் எடுத்த ரன்கள் 248, இங்கிலாந்து தோற்ற ரன்கள் வித்தியாசம் 246, இதனைக் குறிப்பிட்டு கேப்டன் கூறியதாவது:

“விராட் எடுத்த ரன்களை எடுத்துவிட்டுப் பாருங்கள்- ஒரு பேச்சுக்காக- நாங்கள் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது தெரியவரும். இந்த 10 நாட்கள் கிரிக்கெட் எனக்கு என்ன அறிவுறுத்துகிறது என்றால், இந்திய நிலைமைகளில் நாங்கள் சவாலாகவே திகழ்ந்துள்ளோம். சரி! நாங்கள் பெரிய் ரன் வித்தியாசத்தில் தோற்றுள்ளோம், இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆடி கூடுதல் ரன்களை எடுத்திருந்தால் 150 ரன்களில் தோற்றிருப்போம். ஆனால் நாங்கள் அவ்வழி சென்றோம்.

இந்த 2 டெஸ்ட் போட்டிகளின் சாதக அம்சங்களை நோக்கினால் அடில் ரஷீத் 2 போட்டிகளிலும் அருமையாகச் செயல்பட்டார். ஆண்டர்சன் மீண்டும் வந்து அருமையாக வீசினார். அனைத்து அம்சங்களையும் நாங்கள் ஒன்று திரட்டினால் இந்தியாவை வீழ்த்தலாம். மொஹாலியில் இந்திய அணியை வீழ்த்திவிட்டால் நிச்சயம் இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்துவோம்.

டாஸில் தோற்றது மிகப்பெரிய விஷயம்தான். ஆனால் சில தருணங்களில் நாங்கள் அருமையான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். நாங்கள் இன்னும் இந்தத் தொடரை இழந்து விடவில்லை. இரண்டு டாஸ்களை வென்றால் நிலைமைகள் மாறிவிடும். இதில் சந்தேகமேயில்லை.

இருந்தாலும் டாஸில் வென்றால் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையும் என்று நான் கூறவில்லை. இத்தகைய பிட்ச்களில் டாஸ் வெல்வதும் முக்கியம். முதல் நாள்தான் பேட் செய்ய சிறந்த நாள். முதல் நாளுக்குப் பிறகே ரன் எடுக்கும் விகிதம் குறைவதை நீங்கள் பார்க்கலாம். ரன் எடுப்பது கடினமாகி விடும்.

இந்த டெஸ்ட்டில் 455 ரன்களை கொடுத்த பிறகு 80/5 என்றால் மீள்வது கடினம். இந்த பிட்ச் நிலைமைகளில் முதல் இன்னிங்சை கோட்டை விட்டால் மீள்வது கடினம். ஆனாலும் நாங்கள் எங்கள் திறமையை வெளிப்படுத்தி சவால் அளித்தோம்” என்றார் குக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x