Published : 16 Jan 2017 03:49 PM
Last Updated : 16 Jan 2017 03:49 PM

கோலியின் அதி துணிச்சல் ஆட்டம்: ஓர் அலசல்

இங்கிலாந்துக்கு எதிராக புனே ஒருநாள் போட்டியில் 64/4 என்ற நிலையிலிருந்து இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்ற கோலி மற்றும் கேதர் ஜாதவ்வின் சதங்களில் கோலியின் ஆட்டம் வேறு ஒரு துணிச்சல் பரிமாணத்தை எட்டியுள்ளது.

கேதர் ஜாதவ்வின் வேகமான அதிரடி சதமும் கோலியின் துணிச்சலுக்கு இணையாக அமைந்தது.

ஆரம்ப கால சச்சின், பிறகு சேவாக், லாரா, கில்கிறிஸ்ட், ஜெயசூரியா, இன்றும் தொடரும் கிறிஸ் கெய்ல், கெவின் பீட்டர்சன் ஆகியோரது அதி துணிச்சல் ரக அலாதியான ஷாட்களை கோலி தனது 122 ரன்களில் ஆடியது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய ரகத்தில் டிவில்லியர்ஸை சேர்க்க முடியாது, காரணம் அவர் 360 டிகிரி சுழன்று நம்பமுடியாத ஷாட்களை ஆடிக்காட்டியவர். மேற்கூறிய பட்டியலிலிருந்து விலக்கி வைத்துப் பார்க்க வேண்டிய ஒரு தனிச்சிறப்பான ஆட்டம் டிவிலியர்சுடையது.

மேற்கூறிய ஆக்ரோஷ மனநிலை வீரர்களை நாம் ஒப்பிட முடிந்தாலும் கோலியின் ஆட்டம் பெரும்பாலும் டெஸ்ட் ஆகட்டும், ஒருநாள் ஆகட்டும் ரிக்கி பாண்டிங்கை நினைவூட்டுகிறது. ரிக்கி பாண்டிங் திடீரென ஒரு இனம்புரியாத கோபாவேசத்தில் சில ஒருநாள் போட்டிகளில் ஆடி சதம் கண்டுள்ளார், அதில் குறிப்பாக 2003 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அடித்த அதிரடி சதம், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு முறை 150 ரன்களை எடுக்கும் போது ஆலன் முல்லாலே என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் வீசும்போதெல்லாம் கிரீஸில் நிற்க மாட்டேன் என்று பாண்டிங் அவரை அடித்து நொறுக்கியதும் நேற்று கோலியின் இன்னிங்ஸைப் பார்க்கும் போது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

பொதுவாக கோலி தனது கட்டுக்கோப்பான ஆட்ட உத்தியின் மூலம் தேவைப்படும் ரன் விகிதத்தை தனது முறையான கிரிக்கெட் ஷாட்களிலேயே பராமரிப்பவர். அது டி20-யாக இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டாக இருந்தாலும் அவரது பாணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது, சிறுசிறு திடீர் ரக ஷாட்கள் இருக்கும்.

அவர் இதற்கு முன்னால் 52 பந்துகளில் சாதனை சதம் எடுத்த போது கூட மிட்செல் ஜான்சனை 90 கிமீ வேகப்பந்தை இறங்கி வந்து பவுன்ஸ் ஆன பந்தை கவரில் அடித்த ஷாட் நீங்கலாக அதிக ஷாட்களை மேலேறி வந்து அந்த இன்னிங்ஸில் அடித்தாலும் நேற்றைய அளவுக்கு அதி துணிச்சல் இல்லை என்றே கூற வேண்டும். அது ஒரு ஆக்ரோஷ சதம், இந்திய சாதனை அதிவேக சதம், ஆனாலும் அன்று ஜெய்பூர் பிட்ச் அதற்கு கை கொடுத்தது. பாக்னர், மெக்காய் ஆகியோர் சரியாக வீசவில்லை, மேக்ஸ்வெல், டோஹெர்ட்டி, வாட்சன் என்று அனைவரும் வாங்கிக் கட்டிக் கொண்டனர். அந்த இன்னிங்ஸில் கோலி 26 ஓவர்களில் 176/1 என்ற நிலையில் களமிறங்கினார், எனவே அடித்து நொறுக்குவதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. வந்து வெளுத்துக் கட்டினார்.

ஆனால் நேற்று இங்கிலாந்துக்கு எதிராக தவண் ஆட்டமிழந்த பிறகு கோலி இறங்கினார், ஆனால் இவர் கண்ணெதிரிலேயே ராகுல், யுவராஜ், தோனி என்று விக்கெட்டுகள் சரிந்தவண்ணம் இருந்தன. 12 ஓவர்களில் 63/4 என்று கிட்டத்தட்ட 38 ஓவர்களில் 288 ரன்கள் பக்கம் அடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் கோலியும், கேதர் ஜாதவ்வும் இணைந்து சுமார் 24 ஓவர்களில் 200 ரன்களை விளாசித்தள்ளி வெற்றிக்கு வித்திட்டனர்.

கோலி இறங்கி வோக்ஸின் 2 நல்ல பந்துகளை எதிர்கொண்டார். பிறகு 3-வது பந்திற்கே கோலி நடந்து வரத் தொடங்கினார், மிட் ஆஃபில் ஹேல்ஸ் டைவ் அடித்து பீல்ட் செய்யாவிடில் பந்து பவுண்டரிக்கு பறந்திருக்கும் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.

பிறகு தான் எதிர்கொண்ட 5-வது பந்தை மேலேறி வந்து ஸ்பின்னரை அடிப்பது போல் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.ஜே.வில்லேயை லாங் ஆனில் அடித்த சிக்ஸ், 2003 உலகக்கோப்பை இறுதியில் ஆஷிஷ் நெஹ்ராவை ரிக்கி பாண்டிங் வெளுத்ததையும் ஆலன் முல்லாலேயை பாண்டிங் பிறிதொரு தருணத்தில் அடித்ததையும் நினைவூட்டியது.

பிறகு கிறிஸ் வோக்ஸ் பந்தை சற்றே ஒதுங்கிக் கொண்டு, இடது கை ஸ்பின்னரை அடிப்பது போலவே அல்லது லெக் ஸ்பின்னரை அடிப்பது போலவே ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தே கோலியின் இயல்பை மீறிய லெக் திசை ஷாட் பவுண்டரிக்குப் பறந்தது. மணிக்கட்டின் வலுவினால் அந்த ஆஃப் திசை பந்து மிட் ஆன் பவுண்டரிக்குப் பறந்தது. பால் வீசிய பந்தை தேர்ட்மேனில் சிக்ஸ் அடித்ததும், கோலியின் இயல்பு மீறிய ஷாட்தான். இடையில் ஸ்டோக்ஸ் பந்தை தரையோடு தரையாக நேர் பவுண்டரிக்கு ஒரு ஷாட் மட்டும் கோலியின் நேர் பேட், இயல்புமீறாத ஷாட்.

பிறகு ஆஃப் திசையில், லெக் திசையில் என்று மாறி மாறி இயன் மோர்கனின் களவியூகத்தை கேலிக்குள்ளாக்கினார் கோலி. முதல் ஸ்கோரிங் ஷாட்டில் மேலேறி வந்து வில்லேயை சிக்ஸ் அடித்தது போல் சதம் எடுக்க வோக்ஸை மேலேறி வந்து மிட் ஆனில் பிளாட் சிக்ஸ் அடித்தார்.

ஆனால் இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு ஷாட் ஆடினாரே பார்க்கலாம் கோலி, நம் கண்களை சிறிது நேரம் நம்பத்தான் முடியவில்லை. ஒரு நிமிடம் அங்கு அவர் நின்ற இடத்தில் சச்சின்தான் கண்முன்னே தோன்றினார். 33-வது ஓவரின் முதல் பந்தை கிறிஸ் வோக்ஸ் வீசினார். வேகம் குறைக்கப்பட்ட பந்து லெந்துக்கு குறைவான இடத்தில் பிட்ச் ஆகி சற்றே எழும்புகிறது. எந்த ஒரு ஷாட்டுக்கும் அங்கு இடம் கிடையாது. மற்ற பேட்ஸ்மென்கள் அதை தட்டி விட்டு சிங்கிள்தான் எடுப்பார்கள். ஆனால் கோலியோ அதிக இடமில்லாத அந்தப் பந்தை சற்றே பின்னால் சென்று லாங் ஆனுக்கு மேல் மிகப்பெரிய சிக்ஸராக்கினார். இந்த ஷாட்டை அவர் ஆடும் போது முழுதும் நேர் மட்டையாகவும் இல்லை முழுதும் கிடைக்கோட்டு மட்டையாகவும் இல்லை, இரண்டுக்கும் நடுப்பட்டதாக மட்டை இருந்தது கலவையான ஒரு மட்டை நிலை. மிகவும் கடினமான முயற்சி! ஷாட்டைப் பார்த்தால் அவர் ‘செக்’ செய்தது போல்தான் தெரிந்தது.

இப்படி ஒரு ஷாட்டை அந்தப் பந்துக்கு யோசிப்பதே கடினம். ஆனால் கோலி அனாயாசமாக, மட்டையிலிருந்து பந்து சீறிச் சென்ற போதே, சிக்ஸ் என்பதாக ஆடினார். மிகவும் அரிதான ஒருஷாட். சச்சின் டெண்டுல்கர், ஒரு காலத்தில் காஸ்பரோவிச்சை இதுபோன்று அடிப்பார், ஆனால் அந்தப் பந்துகள் கூட வேகம் குறைவாக வீசப்பட்டாலும் ஓரளவுக்கு ஃபுல் லெந்த் ஆக இருக்கும். மட்டையை ஒரு முழு சுற்று சுற்ற காலம்/ இடம் இருக்கும். ஆனால் வோக்ஸின் இந்தப் பந்து எந்த ஒரு சவுகரியத்தையும் அளிக்காதது, ஆனால் விக்கெட் எடுக்கும் பந்தும் அல்ல, 1 ரன் பந்தை, கோலி அரிதான, நம்ப முடியாத ஷாட்டினால் சிக்ஸருக்குத் தூக்கினார். இந்த ஷாட்டைப் பற்றித்தான் வர்ணனை அறையில் நேற்று பேச்சாக இருந்தது.

ஒரு முறை 2008-ம் ஆண்டு விபி தொடர் இறுதிப் போட்டியில் பிரெட் லீ நோபால் வீச, அடுத்த ஃப்ரீ ஹிட் பந்தை ராபின் உத்தப்பா சிக்ஸ் அடித்ததும் ஒரு மறக்க முடியாத அரிய வகை ஷாட்தான், இதில், பிரெட் லீ பந்தை வேகமாக வீசி எழுப்ப பின்னால் சென்ற உத்தப்பா டென்னிஸ் ஷாட் அடித்து நேர் பவுண்டரிக்கு சிக்ஸ் அடித்தார், இதில் வேகமும், பந்தை அடிப்பதற்கான டைமிங் வாய்ப்பும் இருந்தது, ஆனாலும் உத்தப்பா தேர்ந்தெடுத்த ஷாட் அரிதானது. இப்படிப்பட்ட டென்னிஸ் ஷாட்களை ஆடம் கில்கிறிஸ்ட், மகாயா நிடினிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தியுள்ளார்.

ஆனால் கோலி அடித்தது மிகவும் அரிதான ஒரு ஷாட், சிக்ஸ் அடிக்கக் கடினமான பந்து அது, அனைத்தையும் விட அந்த ஷாட்டை அவர் ஆடிய போது எந்த ஒரு சமனிலை குலைவும் ஏற்படவில்லை. நின்றார்... வென்றார் ரக ஷாட் ஆகும் அது. உண்மையில் நம்பமுடியாத ஷாட்தான் அது. வாழ்விலே ஒருமுறை ஷாட் ஆகும் அது. ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் அதே வேகம் குறைந்த ஷார்ட் பிட்ச் பந்தை வீச ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயிருந்து புல் ஆட முயன்று டாப் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தார். அதுவும் கவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிறைய நேரம், இடம் இருந்தும் கோலி இதனை சரியாக அடிக்க முடியாமல் போனது, ஆட்டமிழந்தார்.

வோக்ஸ் பந்தை அவர் அரிதாக அடித்த அந்த சிக்சர் ஷாட்டும் இப்படி கேட்ச் ஆகக்கூடிய வாய்ப்புள்ள பந்துதான், ஆனால் அது சிக்ஸ் ஆனது, ஸ்டோக்ஸ் பந்து கேட்ச் ஆனது, இதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் ஆச்சரியகரமான நிர்ணயமின்மை. ஆட்டத்தை வென்ற பிறகு கோலி கூறும்போது, “கேதர் ஜாதவ் ஆடிய சில ஷாட்கள் நம்பமுடியாதவை” என்று பாராட்டியது ஜாதவ்வுக்கு உற்சாகமூட்டுவதற்காக. உண்மையில் கிறிஸ் வோக்ஸை இவர் அடித்த அந்த குறிப்பிட்ட ஷாட் வாழ்விலே ஒருமுறை ஷாட் என்பதில் ஐயமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x