Published : 30 Apr 2016 10:23 AM
Last Updated : 30 Apr 2016 10:23 AM

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 17 பந்தில் 51 ரன் விளாசல்: பொல்லார்டுக்கு ரோஹித் சர்மா பாராட்டு

ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது.

காம்பீர் 59, உத்தப்பா 36, ஷாகிப் அல் ஹஸன் 21, சூர்யகுமார் யாதவ் 22, யூசுப் பதான் 19 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியின் பீல்டிங் இந்த ஆட்டத்தில் படுமோசமாக இருந்தது. காம்பீர் 8 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை மெக்லினஹன் தவறவிட்டார். உத்தப்பா, கிறிஸ் லின், யூசுப் பதான் ஆகியோர் கொடுத்த கேட்ச்களையும் மும்பை வீரர்கள் கோட்டை விட்டனர்.

இதையடுத்து 175 ரன்கள் இலக்குடன் விளையாடிய மும்பை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 49 பந்தில், 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68 ரன்னும், பொலார்ட் 17 பந்தில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்னும் விளாசினர்.

13 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்த நிலையிலேயே பொல்லார்ட் களமிறங்கினார். அப்போது வெற்றிக்கு 42 பந்துகளில் 69 ரன்கள் தேவைப்பட்டது. 15-வது ஓவரில் இருந்து அதிரடியை தொடங்கினார் பொல்லார்ட். ஷாகிப் அல் ஹஸன் வீசிய இந்த ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்டினார்.

அடுத்து சதீஷ் வீசிய 16-வது ஓவரில் 3 இமாலய சிக்ஸர்கள் பறக்கவிட அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் குவிக்கப்பட்டது. இரு ஓவர்களில் 33 ரன்கள் விளாசப்பட்டதால் மும்பை அணியின் வெற்றி பாதைக்காக பயணம் எளிதானது.

18-வது ஓவரை வீசிய ஜெயதேவ் உனத்கட் பந்து வீச்சையும் பதம் பார்த்தார் பொல்லார்ட். இந்த ஓவரிலும் அவர் 3 சிக்ஸர்கள் விளாச மும்பை அணி 12 பந்துகள் மீதமிருக்க 178 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சீசனில் கொல்கத்தா அணியை 2-வது முறையாக மும்பை வென்றது. மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. 8 ஆட்டத்தில் விளையாடி உள்ள அந்த அணி 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

வெற்றி குறித்து மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “இது சிறந்த ஆட்டமாக இருந்தது. பொல்லார்ட் பார்ம் மிகவும் முக்கியமானது. அவர் சரியான நேரத்தில் உச்சக்கட்ட நிலைக்கு வந்துள்ளார். மும்பை மைதானத்தில் இது எங்களது கடைசி ஆட்டமாக இருக்க போகிறது. ரசிகர்கள் ஆதரவு இங்கு அபாரமாக இருந்தது. இதற்காக அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

அடுத்தது எங்கள் உள்ளூர் மைதானம் எது என்று தெரியவில்லை. நாங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி விரைவில் தகவமைத்துக்கொள்வோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x