Published : 20 Oct 2016 06:09 PM
Last Updated : 20 Oct 2016 06:09 PM

கேன் வில்லியம்சன் அபார சதம்: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 243 ரன்கள்

டெல்லியில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட நியூஸிலாந்து அணி வில்லியம்சன் சதத்துடன் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தத் தொடரில் நியூஸி. சார்பாக முதல் சதத்தைப் பதிவு செய்த கேன் வில்லியம்சன் 128 பந்துகளில் 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 118 ரன்கள் எடுத்து மிஸ்ரா பந்தில் ஆட்டமிழந்த பிறகு நியூஸிலாந்து அணி மடமடவென சரிந்தது. முன்னதாக தொடக்க வீரர் டாம் லேதம் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் சகிதம் 46 ரன்கள் எடுத்து கேதர் ஜாதவ் பந்தில் எல்.பி.ஆனார், ஆனால் இது அவ்வளவு திருப்திகரமாக, ஐயமற்ற தீர்ப்பாகத் தெரியவில்லை. லெக் ஸ்டம்பை அடித்திருக்கலாம் என்பது போல் தெரிந்ததே தவிர நிச்சயமாக லெக்ஸ்டம்பை அடித்திருக்கும் என்று கூற முடியவில்லை, சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மெனுக்குத் தந்திருந்தால் கூட ஒன்றும் விஷயமாகியிருக்காது.

ஜாதவ் 21-வது ஓவரில் நன்றாக செட்டில் ஆன லேதமை வீழ்த்துகிறார், ஆனால் அடுத்த ஓவர் அவருக்குத் தரப்படவில்லை. மீண்டும் 33-வது ஓவர் அவருக்குத் தரப்படுகிறது. 2 ஓவர்களில் 11 ரன்கள்தான் விட்டுக் கொடுத்து முக்கியமான விக்கெட்டையும் கைப்பற்றினார். ஆனால் 2-வது ஓவர் இல்லை. ஆம், நாளை ஜடேஜாவோ, ரெய்னாவோ வந்தால் வெளியே உட்கார வேண்டிய வீரர்! என்ன செய்வது? கடந்த போட்டியிலும் இவர் அடுத்தடுத்த பந்துகளில் 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விக்கெட் எடுத்த அடுத்த ஓவரை ஒரு பவுலருக்கு கட் செய்வதும் ஒருவேளை ‘அருமையான கேப்டன்சி’ என்றும் அழைக்கப்படலாம்.

மார்டின் கப்திலுக்கு வந்து நின்றவுடனேயே அப்படி ஒரு பந்து விழுந்தால் என்ன ஆகுமோ அதுதான் நடந்தது பவுல்டு ஆனார். அதனால்தான் பிரெண்டன் மெக்கல்லம் முதல் பந்திலிருந்தே மேலேறி வந்து ஆடுவார் காரணம், இந்தமாதிரி விளையாட முடியாத பந்து விழுந்து விடக்கூடாதே என்பதற்காகத்தான். ஆனால் கப்தில் சுத்தமாக பார்மில் இல்லை.

ராஸ் டெய்லர் உடனடியாக மட்டையும் கையுமாக நல்ல பயிற்சியாளரைச் சந்திப்பது நல்லது. 42 பந்துகளில் அவர் வேதனையுடன் ஆடி 21 ரன்களை எடுத்து திட்டமிட்ட களவியூகம் மற்றும் மிஸ்ராவின் பந்து வீச்சுக்கு பலியானார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே மிஸ்ரா வேகமாக ஒரு பந்தை வீச அதனை வாரிக்கொண்டு ஸ்லாக் ஸ்வீப் செய்தார் பந்து ரோஹித் சர்மாவிடம் எல்லையில் கேட்ச் ஆனது.

கேன் வில்லியம்சன் உமேஷ் யாதவ்வை அருமையாக மிட்விக்கெட்டில் ‘கிளாஸ் பிளிக்’ செய்து பவுண்டரியுடன் தொடங்கினார். பாண்டியாவை 3 பவுண்டரிகளும் பும்ராவை ஒரு பவுண்டரியையும் அடித்த அவர், அக்சர் படேலை மிட்விக்கெட் பவுண்டரி, லாங் ஆன் சிக்ஸ், பிறகு ஷார்ட் பிட்ச் வீசுவார் என்று தெரிந்து பின்னால் சென்று கல்லி வழியாக ஒரு பவுண்டரி என்று அந்த ஓவரில் 15 ரன்களை எடுத்தார். பிறகு மிஸ்ராவை ஸ்வீப் செய்து 56 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்சருடன் அரைசதம் கடந்தார். பிறகு அருமையாக மிஸ்ராவின் பந்தை புல்டாஸாக மாற்றி அதே ஓவரில் ஒரு பவுண்டரி விளாசினார்.

பிறகு மேலும் 5 பவுண்டரிகள் அடித்து 109 பந்துகளில் தனது 8வது சர்வதேச ஒருநாள் சதம் எடுத்தார் வில்லியம்சன். மிகவும் அருமையான ‘கிளாஸ் இன்னிங்ஸ்’.

ஆனால் இவர் அவுட் ஆன பந்தும் அருமை, இவரது ஷாட்டும் அருமை, அதனை லாங் ஆனில் நகர்ந்து பிடித்ததும் அருமை. வில்லியம்சன் மேலேறி வர மிஸ்ரா பந்தை சற்றே இழுத்து பிடிக்க அவர் நேராக ஷாட்டை ஆட ரஹானே அருமையாகப் பிடிக்க நல்ல ஒருநாள் சதம் முடிவுக்கு வந்தது. .கோரி ஆண்டர்சன் முன்னதாக 21 ரன்களில் மிஸ்ராவிடம் ஆட்டமிழந்தார்.

வில்லியம்சன் ஆட்டமிழந்த போது ஸ்கோர் 213/5 அதன் பிறகு 50 ஓவர்களில் 242/9. இந்தியத் தரப்பில் மிஸ்ரா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x