Published : 25 Nov 2014 04:54 PM
Last Updated : 25 Nov 2014 04:54 PM

குழப்பம் ஏன்? கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கோபத்திற்கு ஆளான மைக்கேல் கிளார்க்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிளார்க் விளையாடும் விஷயத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு கிளார்க் எந்த வகையில் பொறுப்பு என்ற விளக்கத்தை அவரிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கேட்டுள்ளது.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் கிளார்க் விளையாடப்போவதில்லை என்பது இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் பிலிப் ஹியூஸ் பவுன்சரில் அடிபட்டு உயிருக்குப் போராடி வருவதால் இந்த அறிவிப்பை இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

பிலிப் ஹியூஸ் அனுமதிக்கப்பட்டுள்ள செயிண்ட் வின்சென்ட் மருத்துவமனையில் ஹியூஸ் குடும்பத்தினருடன் மைக்கேல் கிளார்க் இருந்து வருகிறார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் நோக்கத்தில் காயமடைந்த மைக்கேல் கிளார்க் காட்டிய தீவிரம், கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியதால் அவர்களுக்கு கிளார்க் மீது கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.

அணித் தேர்வுக் குழு தலைவர் ராட்னி மார்ஷ், அன்று முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவிக்கும் போது கேப்டன் மைக்கேல் கிளார்க் பெயரையும் அறிவித்தார். ஆனால் உடற்தகுதி நிரூபிக்கப்பட்டால்தான் அவர் ஆடுவார் என்றும் இந்தியாவுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடி உடற்தகுதியை நிரூபிப்பார் என்றார்.

ஆனால் இவரது கூற்றுக்கு மாறாக, மைக்கேல் கிளார்க், சிட்னியில் உள்நாட்டு கிரிக்கெட் ஒன்றில் விளையாடுவேன் என்றார். இதனால் குழப்பம் ஏற்பட்டது. இது தற்போது விசாரணையில் உள்ளது.

தனது உடற்தகுதியை நிரூபிப்பதில் அணித் தேர்வுக்குழுவின் அறிவிப்பிற்கு முரணாக வேறொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன், கிளார்க் விளக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலிய தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட் விளக்கம் கேட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x