Published : 21 Nov 2014 12:28 PM
Last Updated : 21 Nov 2014 12:28 PM

குழந்தைகளுக்கு எந்த வயதில் செஸ் கற்றுக்கொடுப்பது? - செஸ் ‘ராணி’ சூசன் போல்கர் பதில்

ஒன்றல்ல, இரண்டல்ல.. நான்கு முறை மகளிர் உலக செஸ்ஸில் சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் ஹங்கேரியைச் சேர்ந்த சூசன் போல்கர். செஸ் நிபுணர், வர்ணனையாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட போல்கர், திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

11 வயதுக்குட்பட்டோருக்கான புதாபெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தனது 4-வது வயதில் வென்றவர். அதிலிருந்தே அவருடைய புத்திகூர்மையையும், திறமையையும் நாம் அறிந்துகொள்ளலாம். பிரபல செஸ் வீராங்கனை ஜுடித் போல்கரின் சகோதரி. ஆடவர் கோலோச்சிக்கொண்டிருந்த செஸ் விளையாட்டில் ஆளுமை செலுத்திய முதல் பெண் சூசன்.

1990-களில் விஸ்வநாதன் ஆனந்துடன் பல போட்டிகளில் ஆடியிருக்கிறார். உலகில் எங்கு செஸ் போட்டிகள் நடந்தாலும் அதைப் பற்றிய விவரங்களை தன் இணையதளமான >http://susanpolgar.blogspot.in ல் வெளியிடுகிறார். அதில், பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். அதன் தொகுப்பு.

என் மகன் செஸ் விளையாட்டை 6 மாதங்களுக்கு முன்புதான் கற்றுக்கொண்டான். அவனுடைய திறமையை வளர்க்க உங்களின் ஆலோசனை?

நல்ல கேள்வி. மிடில்கேம் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். அடிப்படையான எண்ட்கேமையும் கற்றுக்கொள்ளவேண்டும். இதுதான் செஸ்ஸின் அடிப்படை. உங்கள் மகன் செஸ் புதிர்களை எவ்வளவு விரைவாகக் கற்றுக்கொள்கிறார் என்பதைக் கவனியுங்கள். 2-3 மாதங்கள் கழித்து முன்பை விட இன்னும் வேகமாக புதிர்களுக்குத் தீர்வு சொல்கிறாரா என்று கவனிக்கவும். ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். நன்றாக ஆடும்போது பரிசு அளியுங்கள். தவறுகள் செய்யும்போது உற்சாகம் கொடுங்கள்.

குழந்தைகளுக்கு எந்த வயதில் செஸ் கற்றுக்கொடுக்கலாம்?

இது பொதுவாகக் கேட்கப்படும் கேள்வி. 2,3 வயதில் செஸ் காய்களின் பெயர்களை விளையாட்டுத் தனமாகச் சொல்லிக்கொடுக்கலாம். 4 - 6 வயதுகள், செஸ் கற்றுக்கொள்ள சரியான வயது. இது ஒவ்வொரு குழந்தையைப் பொறுத்தது. சில குழந்தைகள் 4 வயதிலேயே விளையாடும் அளவுக்கு பக்குவமாக இருக்கும்.

ஆரம்ப நிலைக்குப் பிறகு காம்பினேஷன், செக்மேட், அடிப்படை எண்ட்கேம் புதிர்களைக் கற்றுக்கொள்ளலாம். என் மகன் டாமி, நான்கு, ஐந்து வயதில் தினமும் 50-75 செஸ் புதிர்களின் விடைகளைக் கண்டுபிடிப்பான். எந்த வயதாக இருந்தாலும், செஸ் விளையாடுவது என்பது சந்தோஷம் மற்றும் ஊக்கம் அளிப்பதாக இருக்கவேண்டும். அதுதான் முக்கியம்.

என்னுடைய மகனுக்கு 7 வயது. அவனுடைய ரேட்டிங் சுமாராக 1000. அவன் கற்றுக்கொள்ள எது நல்ல ஓபனிங்ஸ்?

ஆரம்பநிலை மாணவர்களுக்கு ஓபனிங்ஸ் கற்றுக்கொடுக்க நான் விரும்பமாட்டேன். ரேட்டிங் 1,800 வரும்வரை ஒருவர் ஓபனிங்ஸூக்காக கூடுதல் நேரம் ஒதுக்கக்கூடாது. மிடில் கேம்ஸ் மற்றும் எண்ட்கேம்ஸில்தான் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

குழந்தைகளுக்கு செஸ் ரேட்டிங் எந்தளவுக்கு முக்கியம்?

ஆரம்ப வயதில் செஸ் ரேட்டிங் என்பது அவ்வளவு அவசியமில்லாதது. பெற்றோர் ரேட்டிங் பற்றி மிகவும் அக்கறைப்படுவதால் பிள்ளைகள் ஒழுங்கான செஸ் கற்றுக்கொள்ள அஞ்சுகிறார்கள். தோற்பதற்குப் பயப்படுவதால் அவர்கள் தோற்காமல் இருப்பதற்காக ஆடுகிறார்கள். வெற்றிக்காக ஆடுவதில்லை. இது அவர்களுடைய செஸ் வளர்ச்சியைப் பாதிக்கும். குறுகியகால ரேட்டிங் பலனை விடவும் நீண்ட காலத் திட்டமே உதவும்.

இண்டர்நெட்டில் செஸ் விளையாடுவதை ஊக்குவிப்பீர்களா? எது நல்ல செஸ் இணையதளம்?

ஆமாம். இணையம் மிகவும் உதவக்கூடியது. ஒவ்வொரு இணையதளமும் ப்ளஸ், மைனஸ் கொண்டவை. அனைவரும் அறிந்த இணையத்தளங்கள். SimpleChess (www.SimpleChess.com), ICC (www.ChessClub.com), Play Chess (www.PlayChess.com), Chess (www.Chess.com)

செஸ் சாஃப்ட்வேர்கள் என் பிள்ளைகளுக்கு உதவுமா?

கண்டிப்பாக. செஸ் விளையாட்டில், 21-ம் நூற்றாண்டின் சிறப்பே இதுதான். பல செஸ் சாஃப்ட்வேர்கள் 2600-3100 ரேட்டிங்கில் ஆடக்கூடியவை. வீட்டில் 24x7 செஸ் கிராண்ட் மாஸ்டருடன் விளை யாடுவது போன்ற அனுபவத்தைத் தரக்கூடி யவை. ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் அறியவேண்டும். உத்திகளில் சிறப்பாக இருந்தாலும். செஸ் புரோகிராம்களால் சில செஸ் பொஸிஷன்களைப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் ஒரு அளவுக்கு மேல் செஸ்ஸைக் கற்றுக்கொண்ட பிறகு உங்கள் பிள்ளையை அருகில் உள்ள தகுதியுள்ள பயிற்சியாளரிடம் சேர்க்க வேண்டும்.

செஸ் உத்திகள் தொடர்பாக நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யுங்கள்.

ஆரம்பநிலை மாணவர்களுக்கு World Champion's Guide to Chess எனும் புத்தகத்தைப் பரிந்துரை செய்வேன். அடுத்தது Chess Tactics for Champions. இந்த இரு நூல்களையும் நான் எழுதியிருக்கிறேன். என் 30 வருட சொந்த மற்றும் கற்றுக்கொடுத்த அனுபவங்களைக் கொண்டு இந்த நூல்களை எழுதியிருக்கிறேன்.

என் பகுதியில் பள்ளி சார்ந்த செஸ் கிளப்புகளை எப்படி ஆரம்பிப்பது?

சம்பந்தப்பட்ட பள்ளியை அணுகி, பள்ளி நேரம் முடிந்தபிறகு பள்ளி சார்ந்த செஸ் கிளப் ஆரம்பிக்க முடியுமா என கேட்டுப் பாருங்கள். பல பெற்றோர்கள் இப்படித்தான் செய்துள்ளார்கள். பள்ளி நேரம் முடிந்தபிறகு நூலகம் அல்லது உணவகத்தில் கூட வைத்துக் கொள்ளலாம். பல பெற்றோர்கள் இதுபோன்ற ஒரு செஸ் கிளப்பை உணவகம், புத்தகக் கடை போன்றவற்றில் ஆரம்பித்துள்ளார்கள்.

என் 6 வயது மகளை, மகளிர் செஸ் போட்டிக்கு அனுப்பலாமா? செஸ்ஸில், ஆடவர்-மகளிர் விகிதம் மிகக்குறைவாக உள்ளதே?

விகிதம் குறைவாக இருப்பதை எந்த மந்திரக்கோல் வைத்தும் மாற்றமுடியாது. உங்கள் மகள், அவரது வயதுடைய பையன்கள் மற்றும் அதிக வயதுடையவர்களுடன் ஆடுவதற்கு மிரளாமல் இருந்தால் அவரை எந்தப் போட்டிக்கும் அனுப்பலாம். ஆனால் தன்னம்பிக்கை குறைவாக இருந்தால், அவருக்கு சூழல் உகந்ததாக உள்ள மகளிர் போட்டிக்கு மட்டும் அனுப்பலாம். ஆடவர்கள், செஸ்ஸை போட்டியாகப் பார்ப்பார்கள். ஜெயிக்க நினைப்பார்கள். பெண்களுக்கு அது ஒரு கலை. வெற்றி/தோல்வி பிறகுதான். புதிய நண்பர்களை உருவாக்கவும் சந்திக்கவும் பெண்கள் பல போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவார்கள்.

சூசனின் செஸ் கொள்கைகள்

# e4, d4, e5 மற்றும் d5 போன்ற சதுரங்கள் உள்ளிட்ட செஸ் போர்டின் நடுப்பகுதியை உங்கள் கட்டுக்குள் வைக்கவும். ஆட்டம் ஆரம்பித்தவுடன் சிப்பாய்களால் நடுப்பகுதியை நிரப்பி, முடிந்தவரை எவ்வளவு சதுரங்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியுமோ அதைச் செய்யுங்கள்.

# குதிரை மற்றும் பிஷப்பை வெளியே கொண்டுவாருங்கள். உங்கள் எதிராளியை செக்மேட் செய்யும்முன்பு, முடிந்தால் 6 அல்லது 7 நகர்த்தலுக்குள்.

# உங்கள் ராஜாவின் பாதுகாப்புக்காக எவ்வளவு சீக்கிரம் காஸ்டல் (Castle) பண்ணமுடியுமோ அதை உடனே செய்துவிடுங்கள். மறக்காதீர்கள். உங்கள் ராஜா பாதுகாப்பாக இருந்தால்தான் நீங்கள் ஜெயிக்கமுடியும். இல்லாவிட்டால் நீங்கள்தான் முதலில் செக்மேட் ஆக்கப்படுவீர்கள்.

# எந்த ஒரு காயையும் தனியே நிற்கவிடாமல் பாதுகாக்கவும். ஒவ்வொரு காயும் மிகவும் மதிப்புமிக்கது. பாதுகாப்பது என்றால் எதிராளி உங்கள் காயை வெட்டினால் அடுத்த நகர்த்தலிலேயே அவர் காயை நீங்கள் வெட்டவேண்டும்.

# செஸ்ஸின் குறிக்கோள் இதுதான். செஸ் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கவேண்டும். சில நேரங்களில் நீங்கள் ஜெயிப்பீர்கள் அல்லது தோற்றுப் போவீர்கள். எல்லாம் விளையாட்டின் ஓர் அங்கம். நீங்கள் ஜெயிக்கும்போது நல்ல விளையாட்டு வீரராக இருங்கள். உங்கள் எதிராளியைக் கேலி செய்யவேண்டாம். மோசமாகப் பேசவேண்டாம். தோற்றுப்போனால் இன்னும் நல்ல விளையாட்டு வீரராக இருங்கள். எதிராளிக்கு வாழ்த்து சொல்லி, கை குலுக்கவும்.

தமிழில்: ச.ந.கண்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x