Published : 28 Apr 2016 07:11 PM
Last Updated : 28 Apr 2016 07:11 PM

கிறிஸ் மோரிஸ் இன்னிங்ஸ்: ரெய்னா, ஜாகீர் கான் பாராட்டு

டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 32 பந்துகளில் 82 ரன்கள் விளாசியது பற்றி வெற்றி பெற்ற குஜராத் லயன்ஸ் கேப்டன் ரெய்னா, தோல்வியடைந்த டெல்லி அணி கேப்டன் ஜாகீர் கான் ஆகியோர் பாராட்டினர்.

பந்து வீச்சில் ஒரே ஓவரில் மெக்கல்லம், ரெய்னா ஆகியோரை வீழ்த்தி குஜராத் லயன்ஸ் அதிரடிக்கு செக் வைத்த கிறிஸ் மோரிஸ் பிறகு பேட்டிங்கின் போது 17 பந்துகளில் அரைசதம் அடித்து 3-வது அதிவேக ஐபிஎல் அரைசத சாதனையை நிகழ்த்தி கடைசியில் 32 பந்துகளில் 8 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், நம்ப முடியாத நிலையிலிருந்து வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தார் கிறிஸ் மோரிஸ், ஆனால் பிரவிண் குமார் வீசிய அதிஅற்புத 19-வது ஓவர் மற்றும் பிராவோ வீசிய அருமையான கடைசி ஓவர் ஆகியவற்றினால் குஜராத் லயன்ஸ் 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.

கிறிஸ் மோரிஸ் இறங்கும் போது 56 பந்துகளில் 116 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. அதுவும் 6-ம் நிலையில் களமிறங்கி 2-வது பந்தையே சிக்சருக்குத் தூக்கினார். மோரிஸின் முதல் 2 சிக்சர்களால் 48 பந்துகளில் 101 என்ற இலக்கு 42 பந்துகளில் 85 என்று ஆனது. பிறகு டாம்பேயை ஒரே ஓவரில் 2 சிக்சர்கள் விளாசியதன் மூலம் 5 ஓவர்களில் 57 ரன்கள் என்று குறைந்தது. 17வது ஓவரில் டிவைன் ஸ்மித்தை 3 சிக்சர்களுடன் 21 ரன்கள் எடுக்க 3 ஓவர்களில் 29 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. அதன் பிறகுதான் 19வது ஓவரில் பிரவீன் குமார் யார்க்கர்களின் துல்லியம் பேச 4 ரன்களேதான் வந்தது, கடைசி ஓவரில் பிராவோ அதே பாணியைப் பின்பற்றி குஜராத் லயன்ஸ் அணிக்கு த்ரில் வெற்றி கிட்டியது.

கிறிஸ் மோரிஸின் இந்த இன்னிங்ஸ் பற்றி சுரேஷ் ரெய்னா கூறும்போது, “மோரிஸ் அருமையாக பேட் செய்தார். 15-வது ஓவரிலிருந்து நாங்கள் போட்டியை இழப்பதாகவே கருதினோம். பிரவீண் குமார் அருமையாக வீசினார், பிறகு பிராவோ தனிச்சிறப்பாக வீசினார். பனிப்பொழிவு பிரச்சினை ஏற்படுத்தியது, ரிஷப் பண்டை வீழ்த்தியதற்காக பாக்னரை பாராட்டுவது தகும். டாம்பே 2 ஓவர்கள் வீசியிருக்கலாம் ஆனால் மோரிஸ் அவரை எளிதில் விளாசினார். பிறகு ஸ்மித்திடம் சென்றேன் அவரும் அடி வாங்கினார். பிரவீண் குமார் யார்க்கர்களை சிறப்பாக வீசி வருகிறார். தவால் குல்கர்னியும் நன்றாக வீசினார். பந்து வீச்சாளர்களுடன் கடுமையாக உழைத்த ஹீத் ஸ்ட்ரீக்குக்கு நன்றி” என்றார்.

ஜாகீர் கான் கூறும்போது, “அருமையான போட்டி, இதிலிருந்து நிறைய தன்னம்பிக்கை அம்சங்களை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். டிவைன் ஸ்மித், மெக்கல்லம் காட்டடி அடித்த பிறகு ஆட்டத்தைத் திருப்பியது சிறப்பு வாய்ந்தது. மோரிஸ் பேட் செய்ததைப் பார்க்கும் போது வெற்றி நிச்சயம் என்றே நினைத்தோம். ஜே.பி.டுமினி அருமையாக பேட் செய்தார். மந்தமாகத் தொடங்கி நெருக்கமாக வந்தோம். பீல்டிங்கில் சில வாய்ப்புகளை உருவாக்கினோம் ஆனால் சில விஷயங்கள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. பந்து வீச்சிலும் மோரிசின் அந்த ஒரு ஓவர் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. பேட்டிங்கில் அவரும், டுமினியும் கூட்டு சேர்ந்து எடுத்த ரன்கள் எங்களை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு வந்தது. இந்தத் தொடரில் இன்னும் செல்ல வேண்டியுள்ளது, ஆனால் அணியில் உற்சாகம் குன்றவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x