Published : 16 Apr 2016 08:45 PM
Last Updated : 16 Apr 2016 08:45 PM

கவுதம் கம்பீர் 90 நாட் அவுட்; சன் ரைசர்ஸை பந்தாடிய கொல்கத்தா

ஹைதராபாதில் நடைபெற்ற ஐபிஎல் 2016, 8-வது போட்டியில் கவுதம் கம்பீர் அருமையாக விளையாடி 90 ரன்கள் எடுக்க சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களையே எடுத்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா மூலம் 12.3 ஓவர்களில் 92 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கண்டது. ராபின் உத்தப்பா 38 ரன்களில் ஆட்டமிழக்க, ஆந்த்ரே ரசல் 2 ரன்களில் வெளியேற கம்பீர் 60 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். பாண்டே 11 ரன்கள் எடுத்து அவருக்கு உறுதுணை அளிக்க கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது.

கவுதம் கம்பீர் 3 போட்டிகளில் 192 ரன்கள் எடுத்து முன்னிலை வகிக்கிறார். கம்பீர் தனது 28-வது ஐபிஎல் அரைசதம் எடுத்தார், இது ஐபிஎல் சாதனையாகும். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை எடுத்த வீரரானார் கம்பீர்.

கொல்கத்தா அணியில் உமேஷ் யாதவ் அருமையாக வீசி பந்துகளை நன்றாக எழும்பச் செய்தார். மோர்னி மோர்கெலும் அவ்வாறே வீசினார். ஆந்த்ரே ரசல் இறுதி ஓவர்களில் அருமையான யார்க்கர்களை வீசி 4 ஓவர்களில் 19 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

ஆட்டத்தின் 2-வது பந்திலேயே மோர்னி மோர்கெல், வார்னரை புல் ஷாட் ஆடச் செய்தார். பந்து ஸ்கொயர்லெக்கில் சாவ்லாவிடம் கேட்ச் ஆனது (தடுமாறிப் பிடித்தார்) ஆனால் மோர்னி மோர்கெலின் அந்தப் பந்து நோ-பால் ஆனது.

ஷிகர் தவண் இன்னும் தனது பேட்டிங் பார்முக்கு வரவில்லை. மோர்னி மோர்கெல் வீசிய பந்துக்கு மேலேறி வர பார்த்தார் தவண், மோர்கெல் ஷார்ட் பிட்ச் ஆக வீசி எழுப்பினார். பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவின் நல்ல கேட்சாக முடிந்தது. தவண் 6 ரன்களில் வெளியேறினார்.

டேவிட் வார்னரை உமேஷ் யாதவ் தனது கட்டரால் கவிழ்க்க அவர் ஷார்ட் கவரில் கேட்ச் கொடுத்து 13 ரன்களில் வெளியேறினார். பிறகு மோய்சஸ் ஹென்ரிக்ஸ் (6) விக்கெட்டையும் அருமையான பந்து ஒன்றில் உமேஷ் யாதவ் எல்.பி. செய்து வெளியேற்றினார். 6 ஓவர்களில் சன் ரைசர்ஸ் 36/3 என்று ஆனது.

ஹூடாவை ரசல் வீழ்த்த 9.4 ஓவர்களில் 50/4 என்ற நிலையில் இயன் மோர்கன், நமன் ஓஜா இணைந்து 5-வது விக்கெட்டுக்காக சுமார் 8 ஓவர்களில் 67 ரன்களைச் சேர்த்து மீட்டனர், ஆனால் 28 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்து மோர்கெலிடம் அவுட் ஆனார். இயன் மோர்கன் 43 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் உமேஷ் யாதவ்விடம் வீழ்ந்தார். ஒருவேளை இவர் 20 ஒவர் நின்றிருந்தால் இன்னும் 10 ரன்கள் கூடுதலாக சன் ரைசர்ஸுக்கு கிடைத்திருக்கலாம். சன் ரைசர்ஸ் 142 ரன்களில் முடிந்தது.

உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோர்னி மோர்கெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா திடமான தொடக்கம் கொடுத்தனர். முதல் 10 ஓவர்களில் 2 ஓவர்கள் நீங்கலாக ஒவ்வொரு ஓவரிலும் இவர்களால் பவுண்டரி அடிக்க முடிந்தது. இருவரும் இணைந்து 72 ரன்களை 10 ஓவர்களில் சேர்த்தனர். பிறகு கரண் சர்மாவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை கவுதம் கம்பீர் அழகாக அடிக்க ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற ரன் விகிதம் தேவைப்படுமாறு மாறியது.

ஆனால் உத்தப்பா, ஆஷிஷ் ரெட்டி அடுத்தடுத்து ஆட்டமிழந்தவுடன் லேசாக சன் ரைசர்ஸுக்கு நம்பிக்கை கீற்று தோன்றியது. ஆனால் அதன் பிறகு கம்பீர், மணீஷ் பாண்டேயுடனான 49 ரன்கள் கூட்டணியில் 7 பவுண்டரிகளை விளாசினார். இதனால் சன் ரைசர்ஸ் ஒன்றும் செய்ய முடியாமல் சரணடைந்தது. ஒரே ஒரு பந்து அருமையான பந்து என்னவெனில் ஆந்த்ரே ரசலை, துல்லியமான யார்க்கரில் முஸ்தபிசுர் ரஹ்மான் மிடில் அண்ட் லெக் ஸ்டம்பை காலி செய்தது மட்டுமே.

ஆட்ட நாயகனாக கம்பீர் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x