Published : 06 Sep 2015 12:31 PM
Last Updated : 06 Sep 2015 12:31 PM

களத்தடுப்புக்கு இடையூறு செய்ததாக அவுட் கொடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ்: கடும் சர்ச்சை

லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 2-0 என்று முன்னிலை வகுத்தாலும், இங்கிலாந்து துரத்தலின் போது பென் ஸ்டோக்ஸுக்கு அவுட் கொடுக்கப்பட்ட விதம் அணிகளுக்கு இடையே கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

நடந்தது இதுதான்: இங்கிலாந்து துரத்தலில் 26-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். அப்போது ஸ்டார்க் பந்து ஒன்றை ஸ்டோக்ஸ் அவரிடமே டிரைவ் செய்து ஓரிரு அடிகள் ரன்னுக்காக கிரீஸை தாண்டி வெளியே வந்தார், பந்தை தடுத்த பவுலர் ஸ்டார்க் நேராக ஸ்டம்பை நோக்கி அடித்தார்.

ஆனால் இடையில் ஸ்டோக்ஸ் அதனை தனது இடது கையால் த்ரோவை தடுத்தார், தனக்கு அடிபட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் அப்படி செய்தாரா, அல்லது ரன் அவுட் பயத்தில் செய்தாரா என்பதெல்லாம் எளிதில் விளங்காத விஷயம். ஆஸ்திரேலியர்கள் கடும் முறையீடு எழுப்ப கள நடுவர்கள் அதனை ஏற்கவில்லை, ஆனால் 3வது நடுவர் பந்தை ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே தடுத்து இடையூறு செய்ததாகக் கணித்து அவுட் என்று தீர்ப்பளித்தனர். இது இரு கேப்டன்களிடையேயும் வார்த்தைப் பரிமாற்றங்களுக்கு வித்திட்டது. 3வது நடுவர் ஜோ வில்சன் அவுட் கொடுத்தார்.

கிரிக்கெட்டில் 7-வது பேட்ஸ்மெனாக ஸ்டோக்ஸ் இம்முறையில் ஆட்டமிழந்தார்.

இதுகுறித்த விதிமுறை 37 கூறுவது என்னவெனில், ஒரு பேட்ஸ்மென் வேண்டுமென்றே ஸ்டம்புக்கு வரும் த்ரோவை தடுத்தால் அவுட் என்கிறது, ஆனால் தன் மீது பந்து பட்டு காயம் ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக தடுத்தால் அது அவுட் இல்லை.

ஆனால் ஸ்டோக்ஸ் விஷயத்தில் என்ன நடந்தது எனில், பந்தை ஸ்டார்க் விட்டெறிந்தவுடன் ஸ்டோக்ஸ் வினையாற்றியது வேண்டுமென்றே தடுப்பது என்ற விளக்கத்துக்கு ஆட்படாதது என்று ஒரு புறம் தெரிந்தாலும், பந்து அவரை விட்டு தள்ளி சென்றதும், அவர் இடது கையை நீட்டி தடுத்ததால் அவுட் கொடுக்கலாம் என்பது போலும் தெரிந்தது. எப்படியோ ஸ்டோக்ஸ் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, இங்கிலாந்து ரசிகர்கள், வீரர்கள், கேப்டன் மோர்கன் ஆகியோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்த சர்ச்சைகள் கிளம்பியது, ஆஸ்திரேலியர்களை இங்கிலாந்து ரசிகர்கள் ஆட்டம் முடிந்த பின்பும் கூட கேலி செய்தனர்.

இது குறித்து பிற்பாடு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கூறும்போது, “விக்கெட் கீப்பர் வேட் இதனை நன்றாகப் பார்த்துள்ளார். நேரடியாக பந்து ஸ்டம்பைத் தாக்கவிருந்தது, ஆனால் ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே தடுத்தார் என்று வேட் கூறினார், என்னைப் பொறுத்தவரை ஸ்டோக்ஸ் கிரீசைத் தாண்டி வந்து விட்டார், அவர் கையை நீட்டி வேண்டுமென்றேதான் தடுத்தார். அதுதான் விதிமுறையும் கூறுகிறது, 3வது நடுவர் அவுட் கொடுத்தார் அவ்வளவே.

எனவே அந்த விவகாரத்தை அத்துடன் முடித்து ஆட்டத்தை தொடர்ந்திருக்க வேண்டும்” என்றார்.

ஆனால் இங்கிலாந்து கேப்டன் மோர்கனோ, ஸ்டோக்ஸுக்கு 5 அடி அருகிலிருந்து ஸ்டார்க் த்ரோ அடிக்கும் போது இயல்பாக என்ன செய்ய முடியுமோ அதனையே ஸ்டோக்ஸ் செய்தார். என்னைப்பொறுத்த வரையில் ஸ்டோக்ஸ் இயல்பாகவே செயல்பட்டார், அது அவுட் கொடுக்கப்படவேண்டியதில்லை” என்றார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் இது பற்றி கூறும்போது, “லார்ட்ஸில் என்ன நடந்தது என்பது விரும்பத்தகாதது, ஸ்டோக்ஸுக்காக வருந்துகிறேன்” என்றார். வார்னும் ஸ்டோக்ஸ் அவுட்டை அவ்வாறு வாங்கியிருக்கக் கூடாது என்றே கருதுகிறார்.

ஸ்மித் தன் முறையீட்டை வாபஸ் பெற்றிருக்கலாம் என்றே இதில் பெரும்பாலான கருத்துகள் எழுந்துள்ளது.

ஆனால், இந்த சம்பவத்தினால் மோர்கன் எழுச்சி பெற்றார், 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்து விட்ட நிலையில் மோர்கன் அடித்து ஆடத் தொடங்கினார். கமின்ஸ், மார்ஷ் வீசிய 5 பந்துகளில் 3 சிக்சர்களை விளாசினார் மோர்கன். அவரது கூட்டாளி லியாம் பிளங்கெட் கமின்ஸின் அடுத்த ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். இங்கிலாந்து வெற்றி பெறத் தேவையான ரன் விகிதம் 10.54லிருந்து 8.50 ஆக குறைந்தது.

ஆனால் பிளங்கெட்டை 24 ரன்களில் ஸ்டார்க் பவுல்டு செய்ய, மோர்கன் 87 பந்துகளில் 85 ரன்களில் கமின்ஸிடம் கடைசியாக ஆட்டமிழந்தார், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஆனால் ஸ்டோக்ஸ் அவுட் கொடுக்கப்பட்டது கிரிக்கெட்டில் தவறான முன்னுதாரணமாக அமையும் என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x