Published : 30 Apr 2016 09:13 PM
Last Updated : 30 Apr 2016 09:13 PM

கருண் நாயர், பில்லிங்ஸ், ஜாகீர் கான் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, டெல்லி டேர் டெவில்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர் முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்தார், டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது. உத்தப்பா மட்டுமே 52 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்து ஒரு முனையில் போராடினார். டெல்லி அணியில் ஜாகீர் கான் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளையும் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முன்னதாக பேட்டிங்கில் 11 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் குவித்து ஆல்ரவுண்ட் திறமைகாட்டிய பிராத்வெய்ட் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

முதல் ஓவரிலேயே ஆந்த்ரே ரசல் அசத்தினார். அதிரடி வீரர்கள் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் குவிண்டன் டி காக்கை வீழ்த்தினார். 2/2 என்று டெல்லி அணி தடுமாறிய போது சஞ்சு சாம்சன் இறங்கி 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்தார், ஆனால் அவரும் சுனில் நரைனிடம் எல்.பி.ஆக 5-வது ஓவர் முடிவில் டெல்லி 32/3 என்று ஆனது.

கருண் நாயரின் அற்புதமான பேட்டிங் மற்றும் பில்லிங்ஸின் அரைசதம்:

பவர் பிளே முடிவில் 37/3 என்று இருந்த டெல்லி அணியை கருண் நாயர் தனது அற்புதமான ஆட்டத்தினால் நிலைநிறுத்தினார், நைட் ரைடர்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களான ஹோல்டர், யாதவ் ஆகியோரின் லெக் திசை பந்து வீச்சினால் 3 பவுண்டரிகளை ஏற்கெனவே அடித்து செட்டில் ஆன கருண் நாயர், பவர் பிளே முடிந்து சுனில் நரைன் வீசிய பந்தை அருமையாக ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பவுண்டரி அடித்தார். மறுமுனையில் பில்லிங்ஸ் ரன் இல்லாத பந்தே இல்லாமல் ஆடினார். 12-வது ஒவரில் பில்லிங்ஸ், பியூஷ் சாவ்லாவை 2 பவுண்டரிகள் விளாசினார். 15-வது ஓவரை சுனில் நரைன் வீச சக்தி வாய்ந்த ஸ்வீப் ஷாட்கள், ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் 3 பவுண்டரிகளை அடித்து அரைசதத்தைக் கடந்தார் கருண் நாயர்.

அடுத்த 2 ஓவர்களில் பில்லிங்ஸ், கருண் நாயர் இருவரும் ஆளுக்கொரு சிக்சரை அடித்தனர். உமேஷ் யாதவ் இந்நிலையில் கருண் நாயர் (68 ரன்கள், 9 பவுண்டரி 1 சிக்சர்), மற்றும் கிறிஸ் மோரிஸ் (0) ஆகிய இருவரையும் 17-வது ஓவரில் வீழ்த்தினார். பிராத்வெய்ட் இறங்கியவுடனேயே உமேஷ் யாதவ் இரண்டு மோசமான பந்துகளை வீச 2 பவுண்டரிகளை அதே ஓவரில் அடித்து தொடங்கினார். 18-வது மற்றும் 20-வது ஓவர்களுக்கு இடையே பிராத்வெய்ட், பில்லிங்ஸ் ஆகியோர் 4 சிக்சர்களை அடித்தனர். கடைசி 5 ஓவர்களில் 66 ரன்கள் சேர்க்கப்பட்டது, பிராத்வெய்ட் 11 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்தார். பில்லிங்ஸ் 34 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுக்க டேர் டெவில்ஸ் அணி 186 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் ரஸல், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, நரைன் சிக்கனமாக வீசி 22 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஜாகீர் கான், பிராத்வெய்ட் அபாரம்:

187 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 8 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த கம்பீர் விக்கெட்டை ஜாகீர் கானிடம் 3-வது ஓவரில் இழந்தது. கம்பீர் புதிதாக கண்டுபிடித்துக் கொண்ட லெக் திசை ஆட்டத்தினால் ஜாகீர் கானின் சாதுரியம் புரியாமல் லெக் திசையில் ஒரு பந்தை ஆட நினைக்க அது முன் விளிம்பில் பட்டு ஆஃப் திசையில் ஐயரிடம் கேட்ச் ஆனது. சாவ்லா இறங்கி 2 பவுண்டரிகளுடன் (ஒன்று எட்ஜ்) 8 ரன்கள் எடுத்து ஜாகீர் கானின் அருமையான பந்துக்கு எல்.பி.ஆகி வெளியேறினார்.

யூசுப் பதான் மோசமான ஷாட்டுக்கு 10 ரன்களில் பிராத்வெய்ட்டின் முதல் விக்கெட்டாக வெளியேறினார், லெக் திசையில் வீசப்பட்ட வேகம் குறைந்த ஷார்ட் பிட்ச் பந்தை ஒரே சாத்து சாத்துவதற்குப் பதிலாக பலவீனமாக ஆடி ஷார்ட் பைன் லெக்கில் கேட்ச் கொடுத்தார் யூசுப் பத்தான். சூரியகுமார் யாதவ், சதிஷ் ஆகியோரையும் பிராத்வெய்ட் காலி செய்ய 13.3 ஓவர்களில் 107/5 என்று ஆனது கொல்கத்தா, உத்தப்பா மட்டும் இருந்தார்.

ஒரு நேரத்தில் ஒரே ஓவரில் 5 ரன்கள் வரும் நோபால் ஒன்றை வீசி 22 ரன்களை ஒரே ஓவரில் பிராத்வெய்ட் விட்டுக் கொடுத்த போது கொல்கத்தா பக்கம் ஆட்டம் இருந்தது.

பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளைச் சாய்க்க ஆட்டம் உத்தப்பா, ரஸல் கைகளுக்கு வந்தது. விக்கெட்டுகள் சரிய 19 பந்துகளில் பவுண்டரியே காணாத உத்தப்பா, ரஸல் இறங்கியவுடன் அமித் மிஸ்ராவைக் குறிவைத்தார். மிஸ்ரா வீசிய 15-வது ஓவரில் உத்தப்பா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். ஆனாலும் ஜாகீர் கான் 17-வது ஓவரை அமித் மிஸ்ராவிடமே கொடுத்தார். கொல்கத்தாவுக்கு 4 ஒவர்களில் 51 ரன்கள் தேவை. இதே ஓவரில் உத்தப்பாவும், ரசலும் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தனர். ஆனால் 6-வது பந்தை ரஸல் அதிரடியாக மிஸ்ராவின் முகத்துக்கு நேராக அடித்தார், எப்படியோ இதனை கேட்ச்சாக்கினார் அமித் மிஸ்ரா ரஸல் அவுட் ஆனவுடன் ஹோல்டர், உத்தப்பா, நரைன், உமேஷ் யாதவ் ஆகியோர் சடுதியில் வெளியேற 159 ரன்களில் முடிந்தது கொல்கத்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x