Published : 16 Jan 2017 05:24 PM
Last Updated : 16 Jan 2017 05:24 PM

ஓரிரு முறை 350 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டியுள்ளோம், ஆனால் 63/4 என்ற நிலையிலிருந்து அல்ல: விராட் கோலி

கேதர் ஜாதவ் நேற்று 76 பந்துகளில் நொறுக்கிய 120 ரன்களில் ஆச்சரியகரமான சில ஷாட்கள் இருந்தது, அந்த ஷாட்களை தன்னால் நம்ப முடியவில்லை என்று கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து ஆட்டம் முடிந்து விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “இந்த இன்னிங்ஸ் தனித்துவமானது. எந்த ஒருநிலையிலிருந்தும் போட்டியை வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை இன்னொரு வீரரிடம் (ஜாதவ்) இருப்பது எனக்குமே உத்வேகமூட்டுவதாக உள்ளது. யாராவது ஒருவருக்கு வெற்றிக்கான பாராட்டை அளிக்க வேண்டுமென்றால் என்னைப் பொறுத்தவரை அது கேதர் ஜாதவ்வுக்குத்தான்.

இங்கிலாந்து அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் வீசினர், அனைவரையுமே அவர் சிறப்பாக எதிர்கொண்டார். அதே போல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இடமளிக்காமல் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தார். ஜாதவ் ஆடிய சில ஷாட்களை என்னால் நம்ப முடியவில்லை. அவர் தனது இயல்பூக்கமான ஷாட்கள் என்று அதை வர்ணித்தார், ஆனால் அதுதான் அவரது திறமை என்றே நான் கூறுவேன்.

150% ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவிப்பது, அதுவும் அனைத்துமே தெளிவான ஷாட்கள் என்பது தனித்துவமானது. அவர் காட்டடி சுழற்றல் செய்யவில்லை. அவர் ஒரு அசாதாரண வீரர், அதனால்தான் 6-ம் நிலையில் அவரை அணி நம்பிக் களமிறக்குகிறது. நான் கூட்டணி சேர்ந்து ஆடிய ஆட்டங்களில் இது சிறப்பான கூட்டணி ஆட்டமாகும். எதிர்த்தாக்குதல் ஆட்டம் என்பது சரிவரக் கைகூடியது. விழுந்த எந்த விக்கெட்டும் நல்ல பந்துகளில் விழவில்லை என்பதே என் கருத்து. நம் பிழையால் விழுந்த விக்கெட்டுகளாகும் அது.

150-160 ரன்களை இணைந்து கடந்து விட்டால் நமக்கு வாய்ப்பு இருக்கிறது என்ற உள்ளுணர்வு எங்கள் இருவருக்குமே இருந்தது. 2-வது இன்னிங்சில் பேட் செய்ய பிட்ச் இன்னும் நன்றாக இருந்தது. பந்தும் சீறிக் கொண்டு பவுண்டரிக்குச் செல்லும் வகையிலான அவுட் பீல்ட் அமைந்தது. அவ்வப்போது சிக்ஸர்கள் அடித்து எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடிந்தது. 350 ரன்கள் இலக்கை இதற்கு முன்பும் ஓரிருமுறை விரட்டியுள்ளோம் ஆனால் 63/4 என்ற நிலையிலிருந்து அல்ல.

இது உண்மையில் சிறப்பு வாய்ந்தது, இந்த இன்னிங்ஸ், வெற்றி, கூட்டணி ஆகியவை நீண்ட காலம் என் எண்ணத்தில் நீடிக்கும்.

நான் கேதர் ஜாதவ்வுடன் களத்தில் இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது, காரணம் நான் அவரை உற்சாகப்படுத்திக் கொண்டேதான் இருந்தேன். நியூஸிலாந்துக்கு எதிராக அவர் வெற்றி பெற வைக்க முடியாமல் போனதற்காக வருந்திக் கொண்டே இருந்தார். நான் அவரிடம் கூறியதெல்லாம், களத்தில்தான் கற்க முடியும் என்பதையே. வெளியே உட்கார்ந்து கொண்டு அப்படிச் செய்திருக்கலாம், இப்படி ஆடியிருக்கலாம் என்பதி அர்த்தமில்லை என்று அவருக்கு அறிவுறுத்தினேன். நம்மை நாம் இன்னும் கொஞ்சம் அதிகப்படியான நிலைக்குத் தள்ளிக் கொள்ள வேண்டும் அப்படி செய்தால் மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட இன்னிங்ஸை எப்படி ஆடுவது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று கூறினேன்.

அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அப்போதுதான் அவரிடம் எதிர்மறை எண்ணங்கள் துளிர்விடும் வாய்ப்பு உள்ளது, எனவே அப்போதுதான் ஜாதவ்விடம் நான் இவ்வாறு கூறினேன்.

ஒருவர் இத்தகைய நெருக்கடி சூழலை எதிர்கொண்டு ஆட அதிகப் போட்டிகளை ஆடியிருக்க வேண்டிய அவசியமில்லை. களத்தில் கடினமான சூழலில் நம் மூளையை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். நாம் அனைவருமே பந்துகளை அடிப்பதில் வல்லவர்கள், சிக்சர்கல், பவுண்டரிகள் நமக்குப் பிரச்சினையல்ல. ஆனால் ‘நாம் இதனை எப்படி செய்யப்போகிறோம், எனக்கு இது தெரியவில்லையோ என்று ஐயம் கொள்வதை விட பந்தை கவனித்து தங்களிடம் உள்ள உத்தியைக் கொண்டு எந்த ஒரு சூழ்நிலையிலிருந்தும் போட்டியை வெல்ல முடியும்.

அதிகமான போட்டிகள் ஆடினால்தான் ஆட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்ற விதியெல்லாம் ஒன்றுமில்லை. 10 ஒருநாள் போட்டிகளிலேயே ஒருவருக்கு தேவையான புரிதல் ஏற்படும், அதற்கு 60, 70, 80 போட்டிகள் தேவைப்படாது.

நானும் கேதரும் பேட் செய்த போது 5-6 வீரர்கள் பெவிலியனில் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை என்பதை அறிந்து கொண்டோம். ஓய்வறையில் இத்தகைய நம்பிக்கை வளர்ந்துள்ளது. அதாவது சிறப்பாக ஒன்றை சாதிப்போம் என்று நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது.

கிறிஸ் வோக்ஸை அடித்த வாழ்விலே ஒருமுறை ஷாட் பற்றி...

நான் இந்த ஷாட்டை ஆடவில்லை அது எப்படி அடிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை என்று பல தருணங்களில் நான் உணர்ந்ததை இப்போது மீண்டும் நினைக்கிறேன், அதாவது குறிக்கோள் வெற்றி என்று வரும் போது ஆட்டத்தை பற்றி அதிகம் யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது என்றுதான் நான் அனைவரிடமும் பேசி வருகிறேன். அதாவது ஆட்டத்தில் நாம் எங்கு இருக்கிறோம் நம் சொந்த ஸ்கோர் எவ்வளவு போன்ற எண்ணங்கள் தேவையில்லை.

எப்போதும் அணி... அணி.. என்று மனனம் செய்து கொண்டிருந்தால் நாம் நம்ப முடியாத ஷாட்களே நமக்குக் கைகூடும். உத்வேகத்திலும், குறிக்கோளை எட்டுவதில் தீவிர கவனமும் இருந்தால் அத்தகைய ஷாட்கள் கைகூடும்.

பவுலிங்கில் 35 ஓவர்கள் வரை நன்றாக வீசினோம், கடைசி 15 ஓவர்களில் இங்குமங்குமாக வீசினோம், இதைப் பேசி விரைவில் தீர்வு காண்போம்” என்றார் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x