Last Updated : 04 Aug, 2016 08:15 AM

 

Published : 04 Aug 2016 08:15 AM
Last Updated : 04 Aug 2016 08:15 AM

ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகின்றன: விழாக்கோலம் பூண்டது ரியோ நகரம்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு ரியோ நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நாளை (5-ம் தேதி) தொடங்குகின்றன. இப்போட்டியில் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். தொடக்க விழா நிகழ்ச்சிகள் நாளை (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணி) தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஒலிம்பிக் கிராமத் துக்கு வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை பிரேசில் மக்கள் தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி வரவேற்று வருகின்றனர். இதனால் ரியோ நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்திய வீரர்களுக்கு வரவேற்பு

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரேசிலின் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 45 நிமிடங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது இந்திய தேசியக் கொடி ஒலிம்பிக் கிராமத்தில் ஏற்றிவைக்கப்பட்டது. இதில் இந்திய விளையாட்டு வீரர் கள் வெள்ளை நிற டிராக் சூட்களை அணிந்து கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் என்.ராமச்சந்திரன், இந்திய குழு வின் தலைவர் ராகேஷ் குப்தா ஆகியோர் ஒலிம்பிக் கிராமத்தின் மேயரான ஜானெத் அர்கெயினுக்கு இரண்டு வெள்ளி யானைச் சிலைகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட மயிலின் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினர்.

கூடுதல் நாற்காலிகள்

ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய ஹாக்கி வீரர்கள் தங்கியுள்ள அபார்ட்மென்ட்களில் போதிய நாற்காலிகள் இல்லை என்று அணியின் பயிற்சியாளர் ஓல்ட்மான்ஸ் புகார் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் தங்கும் அறைகளுக்கு கூடுதல் நாற்காலிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ராகேஷ் குப்தா கூறும்போது, “போட்டி அமைப் பாளர்கள் போதிய நாற்காலி களுக்கும் தொலைக்காட்சிப் பெட் டிகளுக்கும் ஏற்பாடு செய்யாத தால், பிரேசிலில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவற்றை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ரியோ நகரில் செய்து கொடுக்கப்படும்” என்றார்.

நர்சிங் யாதவுக்கு அனுமதி

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 74 கிலோகிராம் மல்யுத்த பிரிவில் கலந்துகொள்ள இந்திய வீரர் நர்சிங் யாதவுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக ஊக்கமருந்து சோதனையில் இருந்து விடுவிக்கப்பட்ட நர்சிங் யாதவை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று உலக மல்யுத்த கூட்டமைப்புக்கு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தது. இந்தக் கடிதத்தை தொடர்ந்து நர்சிங் யாதவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் ஷரண் இத்தகவலை தெரிவித்தார். இருப்பினும் ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் பங்கேற்க இன்னும் உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் அனுமதியையும் பெறவேண்டும். இது தொடர்பாக அந்த அமைப்பு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் விளக்கத்தைக் கேட்டுள்ளது.

தரம்பீருக்கு சிக்கல்

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களில் நர்சிங் யாதவ், இந்தர்ஜித் சிங் ஆகியோரைத் தொடர்ந்து தடகள வீரர் தரம்பீர் சிங்கும் சிக்கியுள்ளார். இவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டிருந் தார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்த தரம்பீருக்கு நடத்தப்பட்ட ரத்த சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள் ளதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரை ரியோ நகருக்கு அனுப்புவது தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பல்பீர் சிங் விருப்பம்

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்று முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் கூறியுள்ளார். 92 வயதான இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரரான அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் இதுபற்றி கூறும்போது, “இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய அணி மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நான் இறப்பதற்குள் மீண்டும் ஒருமுறை இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லவேண்டும் என்று விரும்புகிறேன். இதுவே எனது கடைசி ஆசையாகும்” என்றார்.

படங்கள்: ராய்ட்டர்ஸ், ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x