Published : 15 Feb 2017 05:51 PM
Last Updated : 15 Feb 2017 05:51 PM

ஒரே பந்துக்கு இரண்டு ரிவியூக்கள்: வங்கதேச கடைசி விக்கெட் எழுப்பும் சந்தேகங்கள்

ஹைதராபாத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி முடிந்த விதம் வெற்றிக் கொண்டாட்டங்களினால் நம் கவன ஈர்ப்பை பெறாமல் போயிருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் அது ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு என்று நிபுணர்களால் கருதப்படுகிறது. ஆனாலும் இந்தத் தீர்ப்பு முடிவை மாற்றக்கூடியதல்ல ஏனெனில் ஆட்டம் முடிய இன்னும் 2 மணி நேரங்கள் இருந்தது, கடைசி விக்கெட்தான் வங்கதேசம் கையில் உள்ளது, எனவே இந்தத் தீர்ப்பினால் முடிவு மாறிவிட்டது என்றுகூற முடியாவிட்டாலும், இது எதிர்காலத்தில் மேலும் நெருக்கமான சூழ்நிலைகளில் கடும் சர்ச்சைகளைக் கிளப்பக்கூடிய (தவறான) முன்னுதாரண தீர்ப்பாக அமைந்ததை நாம் கவனிக்க வேண்டும்.

அஸ்வின் அந்தப் பந்தை வீசினார் ஃபுல் லெந்த் பந்து வங்கதேச வீரர் தஸ்கின் அகமதுவின் கால்காப்பில் பட்டு பிடிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் முறையிடு எழுப்பினர். எல்.பி.டபிள்யூக்காகத்தான் முறையீடு செய்தனரா அல்லது பேட்-கால்காப்பு கேட்சிற்கா என்பது உறுதியாகத் தெரியாத விஷயம். பேட்டில் பட்டிருந்தால் எல்.பி. அப்பீல் செல்லாது ஆனால் கேட்ச் அவுட் ஆகியிருக்கும். ஆனால் நடுவர் எராஸ்மஸ் 3-வது நடுவரிடம் பந்து பீல்டரிடம் பிட்ச் ஆகிச் சென்றதா இல்லையா என்று ரிவியூ கேட்டார்.

ரீப்ளேயில் பந்துக்கும் மட்டைக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. ஆனால் பந்து கால்காப்பில் பட்டு பிட்ச் ஆகியே பீல்டர் கைக்குச் சென்றது. நடுவர் எராஸ்மஸ் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டுச் சென்றது என்று நினைத்ததனால் கேட்சிற்கான ரிவியூ செய்தார், பந்து மட்டையில் படவில்லை, தரையில் பட்டே கேட்ச் என்று தெரிந்த போது அது எல்.பி.க்கான ஒரு பந்துதான் என்பது தெரிகிறது.

நடுவர் எராஸ்மஸ் கோரிக்கைக்கு 3-வது நடுவர் நாட்-அவுட் என்று தீர்ப்பளித்தார். ஆனால் உடனேயே விராட் கோலி எல்.பி.க்கான மேல்முறையீடு செய்தார்.

இதுதான் விதிமீறல் என்று கருதப்பட வாய்ப்புள்ளது, காரணம், எந்த ஒரு மேல்முறையீடாக இருந்தாலும் கேப்டன் ஒரு குறிப்பிட்ட விநாடிகளுக்குள் மேல்முறையீட்டுக்கான சமிக்ஞையை காட்ட வேண்டும், ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் எராஸ்மஸ் ஒரு ரிவியூ செய்து அது மைதானத்தின் பெரிய திரையில் காட்டப்பட்டு, அது எல்.பி.தான் என்று தெரிந்து கொண்டு, அவ்வளவு நேரம் கழித்து அதே பந்துக்கு இன்னொரு ரிவியூ அனுமதிக்கக் கூடியாதுதானா என்பதுதான் இப்போதைய கேள்வி.

டிஆர்எஸ் நடைமுறையின் விதி 3.2(டி)-ன் படி, “அடுத்த பந்து வீசுவதற்கு முன்பாகவோ, அல்லது வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேறிய பிறகோ வழக்கமான வேகத்திலோ அல்லது ஸ்லோ மோஷனிலோ ரசிகர்களுக்குபெரிய திரையில் ஆக்‌ஷன் ரீப்ளே காட்டக்கூடாது”

சரி, ஒரே பந்துக்கு நடுவர் மேல்முறையீடு, அணியின் மேல்முறையீடு இரண்டுமே அனுமதிக்கப்படலாம் என்றால் கூட கேப்டன் முறையீடு சில விநாடிகளுக்குளோ மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே விதிமுறை. அதாவது பந்து டெட் ஆன பிறகு சில விநாடிகளில் மேல்முறையீட்டை அணிகள் மேற்கொள்ள வேண்டும். அதாவது வீரர்கள் ரிவியூ உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

ரிவியூவினால் சரியான முடிவுதான் கிடைத்தது, அது எல்.பி.தான் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை, ஆனால் ஒரே பந்துக்கு இருமுறை ரிவியூ செய்யும் போது மைதானத்தில் காட்டப்படும் பெரிய திரை ரீப்ளேயைப் பார்த்த பிறகு ரிவியூ செய்ய எப்படி அனுமதிக்கலாம் என்பது ஒரு கேள்வியாகவே எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x