Last Updated : 24 Feb, 2017 07:43 PM

 

Published : 24 Feb 2017 07:43 PM
Last Updated : 24 Feb 2017 07:43 PM

ஒரேயொரு நாள் மோசமாக அமைந்தது: விமர்சனங்களிலிருந்து அணியைக் காத்த அனில் கும்ப்ளே

புனே டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத விதமாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 105 ரன்களுக்குச் சுருண்டதையடுத்து, ‘ஒரேயொரு தினம் மோசமாக அமைந்துள்ளது” என்று சரிவை அடக்கி வாசித்தார் அனில் கும்ப்ளே.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அனில் கும்பேளே, “நீங்களே கூறியது போல் ஒரேயொரு தினம் மோசமாக அமைந்தது. ஆனால் இது ஏமாற்றமளிகிறது. ராகுல், ரஹானே பேட் செய்த போது ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்தோம். ராகுல் ஆட்டமிழந்த பிறகு 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்தோம். இதனால் பின்னடைவு ஏற்பட்டது, ஓரிரு விக்கெட்டுகள் சடுதியில் விழுந்த விவகாரம் மட்டுமே இது.

இந்தப் பிட்ச் நிச்சயம் சவாலானதே, எனவே 2-வது இன்னிங்ஸில் இன்னும் கட்டுப்பாட்டுடன், தலையைத் தொங்கப் போட்டு ஆட வேண்டும், அப்படி ஆடினால் இலக்கை எட்டலாம். ராகுல் ஆட்டமிழந்தது துரதிர்ஷ்டமே, அங்குதான் ஆட்டத்தை இழக்கத் தொடங்கினோம்.

சவாலான பிட்ச்தான் ஆனால் இதிலும் நாம் நம்மை எப்படி ஈடுபடுத்திக் கொள்கிறோம் என்பது உள்ளது, ஆக்ரோஷம் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. இன்று எங்கள் நாளல்ல. ஆஸ்திரேலிய பவுலர்களைப் பாராட்ட வேண்டும். நாளை மீதமுள்ள 6 விக்கெட்டுகளை எப்படி வீழ்த்தப் போகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த பிட்சில் நாம் அதற்குத் தக்கவாறு மாற வேண்டும் இதில்தான் சோடை போனோம். முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தொடக்கத்தில் 80 ரன்களையும் கடைசியில் 60 ரன்களையும் எடுத்தது ஆஸ்திரேலியாவை எந்த ஸ்கோருடன் நிறுத்த வேண்டும் என்ற அணியின் விருப்பத்துக்கு மாறாக அமைந்தது.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் நாம் நினைத்தபடி ஆட முடியாமல் போகும் நியதி எப்போதுன் உள்ளது.பின்கள வீரர்கள் சமீபகாலமாக நன்றாக பங்களிப்பு செய்தனர், இன்று இல்லை. இன்னும் இந்தப் போட்டியில் ஆட வேண்டியது நிறைய இருக்கிறது, நாளை மற்றுமொரு நாளே.

இத்தகைய பிட்ச்களில் ஷாட்களை ஆட வேண்டும். நாம் ராகுலை இதற்காக குற்றம்சாட்ட முடியாது. ராகுல் தனது இடது தோள்பட்டையில் காயமடைந்தார். இவரது உடல் நிலை தற்போது சரியாகிவிட்டது. பொதுவாக இவ்வகை காயங்கள் 24 மணிநேரத்தில் மீண்டும் ஏற்படக்கூடியதே, எனவே நாளை வரை அவரது உடல் நிலையை கூர்மையாக கவனித்து வருகிறோம்.

ஆஸ்திரேலிய அணி பெரிய அளவில் முன்னிலை பெறாமல் மட்டுப்படுத்த வேண்டும், நாம் சில கேட்ச்களை நழுவ விட்டோம், கடந்த காலங்களில் இது அணியைக் காயப்படுத்தியது, இந்தப் போட்டியில் அரை வாய்ப்பாக இருந்தாலும் அதனை பிடிக்க வேண்டும். ஆனால் ஸ்டீவ் ஸ்மித்துக்கு 3 கேட்ச்களை விட்டோம். நாளை காலை விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்கள் மீது நெருக்கடியை மீண்டும் சுமத்துவோம்.

ஓகீஃப் கட்டுக்கோப்புடன் வீசினார், சீராக நல்ல இடங்களில் பந்தை பிட்ச் செய்தார். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் இரண்டு அவுட்கள் தேவையில்லாமல் ஆனதே. ஜடேஜா ஒவ்வொரு ஓவரிலும் மட்டையை 3 முறை பீட் செய்தார், இன்று எட்ஜ் எடுக்கவில்லை, இன்னொரு நாளில் இவை எட்ஜ் ஆகியிருக்கும்” என்றார் நம்பிக்கையை விடாத அனில் கும்ப்ளே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x