Last Updated : 04 Jan, 2017 09:19 PM

 

Published : 04 Jan 2017 09:19 PM
Last Updated : 04 Jan 2017 09:19 PM

ஒருநாள், டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி திடீர் விலகல்

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வீரராக, விக்கெட் கீப்பராக அணித்தேர்வுக்கு தான் தயாராக இருப்பதாக தோனி பிசிசிஐ-க்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மும்பையில் அணித்தேர்வுக்குழுவினர் ஜனவரி 6-ம் தேதி கூடி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணிகளைத் தேர்வு செய்யவுள்ள நிலையில் தோனி விலகுவதாக அறிவித்துள்ளார்.

தோனி விலகல் குறித்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமைச் செயலதிகாரி ராகுல் ஜோஹ்ரி கூறும்போது, “ஒவ்வொரு இந்திய ரசிகர் மற்றும் பிசிசிஐ சார்பாக இந்திய அணியின் கேப்டனாக தோனி ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தோனியின் தலைமையில் இந்திய அணி புதிய உச்சங்களை எட்டியது, இவரது கேப்டன்சி சாதனைகள் இந்திய கிரிக்கெட்டில் எந்நாளும் நீக்கமற நிறைந்திருக்கும்” என்றார்.

டிசம்பர் 2014-ல் தோனி மெல்போர்ன் டெஸ்ட்டிற்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகா திடீர் அறிவிப்பு மேற்கொண்டார். ஆனால் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான கேப்டனாக நீடித்தார். இந்தப் பொறுப்பை அவர் 2007 டி20 உலகக்கோப்பையின் போது ஏற்றுக் கொண்டு அதில் கோப்பையை வென்று பிறகு 2011 உலகக்கோப்பையை வென்று, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் இங்கிலாந்தில் வென்று, இதுவரை கேப்டனாக நீடித்து வந்தார்.

இதுவரை 199 ஒருநாள் போட்டிகளிலும் 72 டி20 போட்டிகளிலும் தோனி இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார். 199 ஒருநாள் போட்டிகளில் தோனி தலைமையில் இந்திய அணி 110-ல் வென்று 74 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது.

அதேபோல் 72 டி20 போட்டிகளில் இவரது தலைமையின் கீழ் இந்திய அணி 41 போட்டிகளில் வென்று 28-ல் தோற்றுள்ளது.

கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் 6,633 ரன்களை 54 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார் தோனி. ஸ்ட்ரைக் ரேட் 86. டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக தோனி 1112 ரன்களை 122.60 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

கேப்டனாக ஏகப்பட்ட சாதனைகளைச் செய்துள்ளார் தோனி. ஆனால் திடீர் விலகலுக்கான காரணங்களை பிசிசிஐ தெரிவிக்கவில்லை. ஒரு வேளை புத்தாண்டில் விராட் கோலிக்கு தோனி அளிக்கும் கேப்டன்சி பரிசாகக் கூட இது இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x