Published : 13 Apr 2016 03:05 PM
Last Updated : 13 Apr 2016 03:05 PM

ஐபிஎல்: பவர் பேட்டிங்கினால் ராயல் சாலஞ்சர்ஸ் வெற்றி

பெங்களூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தங்களுடைய பவர் பேட்டிங்கினால் ராயல் சாலஞ்சர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் விராட் கோலி தனது அருமையான டி20 பார்மைத் தொடர, டிவில்லியர்ஸ் 7 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என்று பவர் ஹிட்டிங்கில் ஈடுபட கடைசியில் சர்பராஸ் கான் 10 பந்துகளில் 35 ரன்களையும், வாட்சன் 8 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 19 ரன்களையும் விளாச 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது பெங்களூரு. தொடக்கத்தில் நன்றாக வீசிய புவனேஷ் குமார் 4 ஓவர்களில் 55 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நெஹ்ரா 2.1 ஓவர்களில் காயமடைந்து வெளியேறினார்.

வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான் மட்டுமே சன் ரைசர்ஸ் அணியில் நன்றாக வீசி 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விராட் கோலி, டிவில்லியர்ஸ் மிகப்பெரிய கூட்டணி:

பரபரப்பாக எதிர்பார்த்த கிறிஸ் கெயில் புவனேஷ் குமார் பந்தில் பவுல்டு ஆகி வெளியேற ஆட்டம் டிவில்லியர்ஸ், விராட் கோலி கைக்கு மாறியது. கிறிஸ் கெயில் ஒன்றுமில்லாத பந்தில் பவுல்டு ஆனார். அவ்வளவுதான் கெயில் அவுட் ஆனதையே கோலியும் டிவில்லியர்ஸும் மறக்கடித்து விட்டனர். இருவரும் இணைந்து 87 பந்துகளில் 157 ரன்களை விளாசினர். இருவரும் மரியாதை போன்று யாருக்காவது அளித்தார்கள் என்றால் அது அறிமுக ஐபிஎல் போட்டியில் ஆடும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவர்களிலேயே. இவரும் தனது கட்டர்களால் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். இவரது 2 ஓவர்கள் முடிந்தவுடன் கோலியும், டிவில்லியர்ஸும் சாத்துமுறைக்குத் திரும்பினர்.

ஹென்ரிக்ஸ், கரண் சர்மா, ஆஷிஷ் ரெட்டி, புவனேஷ் குமார் என்று ஒருவரும் ஏ.பி.டி., விராட் கோலி ஆகியோரின் விரைவு கதியில் சுழற்றப்பட்ட மட்டைக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கோலி 51 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசி 75 ரன்கள் எடுத்து 16-வது ஓவரில் புவனேஷ் குமாரிடம் ஆட்டமிழந்தார்.

டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 82 ரன்கள் விளாசி முஸ்தபிசுர் ரஹ்மானிடம் ஆட்டமிழந்தார். ஷேன் வாட்சன் கரண் சர்மாவை தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் விளாசினார். சர்பராஸ் கான் முழுதும் புதிது புதிதான ஷாட்களை ஆடினார், துடுப்பு ஸ்வீப், அதையே எதிர்திசையில் ரிவர்ஸ் துடுப்பு ஸ்வீப் என்று அவர் அசத்தினார், இதனால் கடைசி 10 ஓவர்களில் 139 ரன்களை விளாசி 227 ரன்களை எட்டியது ராயல் சாலஞ்சர்ஸ்.

தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணியில் டேவிட் வார்னர் வாணவேடிக்கைக் காட்டினார். 5 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் அவர் 25 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஷிகர் தவண் 8 ரன்களில் காஷ்மீர் ஆஃப் ஸ்பின்னர் பர்வேஸ் ரசூலிடம் பவுல்டு ஆனார். ஆனால் வார்னர் அதிரடியில் 8 ஓவர்களில் 83 ரன்களை எடுத்திருந்தது சன் ரைசர்ஸ்.

ஆனால் வார்னர், நமன் ஓஜா, ஹென்ரிக்ஸ், தீபக் ஹுடா ஆகியோர் 17 பந்துகள் இடைவெளியில் வெளியேறினர். யஜுவேந்திர சாஹல் இதில் 2 விக்கெட்டுகளையும், மில்ன, வாட்சன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். கடைசியில் மோர்கன், ஆஷிஷ் ரெட்டி, கரன் சர்மா ஆக்ரோஷம் காண்பித்தும் ஆர்.சி.பி. அணி நிர்ணயித்த இலக்கு சன் ரைசர்ஸுக்கு மிக அதிகமாகப் போய்விட்டது. ஆட்ட நாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x