Last Updated : 21 Feb, 2017 10:43 AM

 

Published : 21 Feb 2017 10:43 AM
Last Updated : 21 Feb 2017 10:43 AM

ஐபிஎல் டி20 தொடர் 10-வது சீசன்: இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரூ.14.50 கோடிக்கு ஏலம்; டைமல் மில்ஸை ரூ.12 கோடிக்கு வளைத்து போட்டது பெங்களூரு

ஐபிஎல் டி20 தொடருக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரூ.14.50 கோடிக்கு ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. அவருக்கு அடுத்தப்படியாக வேகப்பந்து வீச்சாளரான டைமல் மில்ஸை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.12 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதவிர உள்ளூர் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 10-வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பல்வேறு அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

39 இந்திய வீரர்கள்

ஏலப்பட்டியலில் மொத்தம் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் இருந்து 8 அணிகளின் உரிமையாளர்களும் மொத்தம் ரூ.91.15 கோடி செலவிட்டு 66 வீரர்களை ஏலம் எடுத்தனர். இந்த 66 வீரர்களில் 39 இந்திய வீரர்களும், 27 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் அர்மானை ரூ.4 கோடிக்கும், இதே நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டரான முகமது நபியை ரூ.30 லட்சத்துக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.

நடராஜன்

இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடாத தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இவரது அடிப்படை தொகை ரூ.10 லட்சமாக இருந்த நிலையில் சுமார் 30 மடங்குக்கு கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்ட மற்ற முன்னணி வீரர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதேபோல் ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சிராஜ் ரூ.2.6 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ராஜஸ்தானை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் அனிகெட் சவுத்திரியை ரூ.2 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வளைத்து போட்டது.

கர்நாடகாவை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான கிருஷ்ணப்பா கவுதமை ரூ.2 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. இந்திய அணிக்காக ஒருசில ஆட்டங்களில் விளையாடி உள்ள வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோனை ரூ.2.8 கோடிக்கு பஞ்சாப் அணியும், சுழற்பந்து வீச்சாளரான கரண் சர்மாவை ரூ.3.2 கோடிக்கு மும்பை அணியும் ஏலம் எடுத்துள்ளன.

மவுசு குறைந்த நெகி

இடது கை சுழற்பந்து வீச்சாளரான பவன் நெகியை ரூ.1 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது. இவரது அடிப்படை தொகை ரூ.30 லட்சமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டில் பவன் நெகியை ரூ.8.5 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்திருந்தது. எதிர்பார்த்த அளவுக்கு அவரிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படாததால் டெல்லி அணி அவரை கழற்றி விட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சீண்டப்படாத வீரர்கள்

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா, வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் எந்த அணியினராலும் ஏலம் எடுக்கப்படவில்லை. இஷாந்த் சர்மாவின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகவும், புஜாராவின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதேபோல் இர்பான் பதானையும் எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை.

சமீபத்தில் ஐசிசி-யின் தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டி மற்றும் டி20-ல் முன்னணி பந்து வீச்சாளரான தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரன் தகிரும் விற்பனையாகாத வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றார். இம்முறை நடைபெற்ற ஏலமானது இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்தது.

பென் ஸ்டோக்ஸ்

ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை ரூ.14.50 கோடிக்கு ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஸ்டோக்ஸை ஏலம் எடுப்பதில் 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகள் ரூ.10.50 கோடி வரை ஸ்டோக்ஸை ஏலம் கேட்டன. இதன் பின்னர் மும்பை அணி ஒதுங்கிக் கொண்ட நிலையில் ஹைதராபாத் அணியும் சேர்ந்து மல்லுக்கட்டியது.

இதனால் ஸ்டோக்ஸின் மதிப்பு ரூ.12.5 கோடி வரை சென்றது. அந்த சமயத்தில் இறுதியாக ரூ.14.50 கோடிக்கு ஸ்டோக்ஸை தங்கள் பக்கம் இழுத்தது புனே அணி. 25 வயதான ஸ்டோக்ஸ் இதுவரை தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது இல்லை. தற்போதைய நிலையில் உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் ஸ்டோக்ஸின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 134-க்கும் அதிகமாக உள்ளது. அதேவேளையில் பந்து வீச்சு விகிதம் 8.60 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டைமல் மில்ஸ்

வேகப்பந்து வீச்சாளரான டைமல் மில்ஸை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.12 கோடிக்கு வளைத்து போட்டது. மில்ஸ் இதுவரை 55 டி20 போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். பந்து வீச்சு விகிதம் 7.47 வைத்துள்ளார்.

இவர்கள் தவிர கிறிஸ் வோக்ஸ் ரூ.4.2 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியாலும், ஜேசன் ராய் ரூ.1 கோடிக்கு குஜராத் லயன்ஸ் அணியாலும் ஏலம் எடுக்கப்பட்டனர். சுவாரசியமாக இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் மோர்கன் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

மற்ற வெளிநாட்டு வீரர்களில் இலங்கையின் மேத்யூவ்ஸ் ரூ.2 கோடிக்கும், நியூஸிலாந்தின் கோரே ஆண்டர்சனை ரூ.1 கோடிக்கும் டெல்லி அணி ஏலம் எடுத்துள்ளது. இவர்கள் இருவரும் அடிப்படை விலைக்கே வாங்கப்பட்டுள்ளனர்.

ரபாடாவுக்கு ரூ.5 கோடி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவை பலத்த போட்டிகளுக்கு இடையே டெல்லி அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ரூ.5 கோடிக்கு கொல்கத்தா அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

உரிமையாளர்கள் கருத்து

புனே அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயங்கா கூறும்போது, "ஏலத்தில் ஸ்டோக்ஸின் விலை அதிகமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். அவர் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் தான் அணிக்கு தேவை. கேப்டன் ஸ்மித், பயிற்சியாளர் பிளமிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்திதான் ஏலத்தில் ஸ்டோக்ஸை எடுத்துள்ளோம். 14 லீக் ஆட்டங்களில் அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அணியை வலுவாக கட்டமைத்து சிறந்த இடத்தை பிடிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்" என்றார்.

140 கிலோ மீட்டர் வரை பந்து வீசும் திறன் கொண்ட டைமல் மில்ஸை, மிட்செல் ஸ்டார்க்குக்கு பதிலாக தேர்வு செய்துள்ளது பெங்களூரு அணி. அந்த அணியின் உரிமையாளர் அம்ரித் தாமஸ் கூறும்போது, "பெங்களூரு மைதானம் மிகச்சிறியது. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரி 199 மற்றும் 2-வது பேட் செய்யும் அணியும் 190 ரன்களை கூட எட்டக்கூடிய அளவில்தான் உள்ளது. இதனால் தான் ஸ்டார்க் போன்ற பந்து வீச்சாளர்களை விரும்பினோம். கடைசி நேரத்தில் அவர் விலகியதால் டைமல் மில்ஸை ஏலம் எடுத்துள்ளோம். பெங்களூரு மைதான நிலைக்கு அவர் பொருத்தமாக இருப்பார்" என்றார்.

மும்பை அணியின் உரிமையாளரான நீடா அம்பானி கூறும்போது, பென் ஸ்டோக்ஸ், டைமல் மில்ஸ் ஆகியோரை ஏலம் எடுக்க முடியாமல் போனதில் எந்தவித ஏமாற்றமும் இல்லை. ஏலத்தில் பங்கேற்க நுழையும் போதே ஏமாற்றத்தை அறைக்கு வெளியே விட்டுவிட வேண்டும். சுழற்பந்து வீச்சாளர் அணிக்கு தேவை என்பதால் தான் கரண் சர்மாவை ரூ.3.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x