Published : 30 May 2016 12:05 PM
Last Updated : 30 May 2016 12:05 PM

ஐபிஎல் சாம்பியன் ஹைதராபாத்: இறுதிப் போட்டி 10 துளிகள்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைஸர் ஹைதராபாத் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் ஆனது.

இந்தப் போட்டியில் சில புதிய சாதனைகள் படைக்கப்பட்டு, சில பழைய சாதனைகள் சமன் செய்யப்பட்டன. அவற்றுடன் சில முக்கிய துளிகள் இதோ...

# சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் எடுத்த 208 ரன்களே, ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் முதலில் ஆடிய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் 2011 ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் ஆடி அடித்த 205 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.

# இதுவரை நடந்துள்ள 9 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றுள்ளது

# ஹைதராபாத் அணியின் பென் கட்டிங் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸர் மைதானத்தை தாண்டி 117 மீட்டர் உயர்ந்து வெளியே பறந்தது. இந்த ஐபிஎல் போட்டியில் இதுவே அதிகபட்ச உயரம் சென்ற சிக்ஸர் ஆகும். இதற்கு முன் 110 மீட்டர்களே சாதனையாக இருந்தது.

# ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 24 பந்துகளில் அரை சதம் எடுத்து ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் அதிவேக அரை சதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் அரை சதம் எடுத்திருந்தார்.

# 2016-ஆம் ஆண்டு 28 டி20 போட்டிகளில் விராட் கோலி 18 முறை அரை சதம் கடந்துள்ளார். இதற்கு முன், கிறிஸ் கெயில் 38 டி20 போட்டிகளில் 16 முறை அரை சதம் கடந்ததே சாதனையாக இருந்தது.

# இந்த ஐபிஎல் சீஸனில் விராட் கோலி 973 ரன்கள் குவித்திருந்தார். இதுவே ஒரு சீஸனில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்திருக்கும் அதிகபட்ச ரன்கள் ஆகும். ஹைதராபாத் அணியின் வார்னர் 848 ரன்களோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

# பெங்களூரு அணியின் ஷேன் வாட்சன் 4 ஓவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்திருந்தார். டி20 போட்டிகளில் இதுவரை அவர் கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

# ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்பது இது மூன்றாவது முறை. இதற்கு முன் 2009, 2011 ஆகிய இரண்டு சீஸன்களில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்து தோல்வியடைந்துள்ளது.

# நேற்றைய போட்டியில் இரண்டு அணிகளும் பவர்ப்ளேவின் முடிவில் 59 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது. இரண்டு அணிகளின் பவர்ப்ளே மொத்த ஸ்கோர் 119 ரன்கள். 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதியில், சென்னை - கொல்கத்தா அணிகள் குவித்த 110 ரன்களே இதற்கு முன் ஐபிஎல் இறுதியில் அதிகபட்ச மொத்த பவர்ப்ளே ஸ்கோராக இருந்தது.

# உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி, அண்டர் 19 உலகக் கோப்பை, ஐபிஎல் என கிரிக்கெட்டின் முக்கிய தொடர்களில் விளையாடி கோப்பை வென்ற அணிகளில் யுவராஜ் சிங் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x