Last Updated : 11 Apr, 2016 09:46 AM

 

Published : 11 Apr 2016 09:46 AM
Last Updated : 11 Apr 2016 09:46 AM

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாப் - குஜராத் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று மொஹாலியில் நடக்கும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் குஜராத் லயன்ஸ் அணி மோதுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல் களம் இறங்கும் பஞ்சாப் அணி, தங்கள் வெற்றிக்கு கேப்டன் மில்லரையே பெரிதும் நம்பியுள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும், மனன் வோராவும் களம் இறங்குவார்கள் என்று கருதப்படுகிறது.

அதிரடியில் கலக்கும் மில்லருடன் மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், முரளி விஜய் ஆகியோர் கைகோர்த்தால் நல்ல ஸ்கோரை எட்டலாம் என்பது அந்த அணியின் நம்பிக்கை. பந்துவீச்சை பொறுத்தவரை வேகப்பந்தில் ஜான்சன், கெயில் அபாட் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல், மேக்ஸ்வெல் ஆகியோரையும் அந்த அணி சார்ந்துள்ளது. சர்வதேச போட்டிகளில் அணியை வழிநடத்திய அனுபவம் இல்லாத மில்லர் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருப்பது அதன் பலவீனமாக கருதப்படுகிறது.

மறுபுறத்தில் புதிதாக உருவாகியுள்ள குஜராத் லயன்ஸ் அணி, புனே அணியைப் போன்று தங்கள் முதல் ஆட்டத்திலேயே வெற்றிபெற்று முத்திரை பதிக்கும் எண்ணத்துடன் களம் இறங்குகிறது. அந்த அணியில் கேப்டன் ரெய்னா, மெக்கல்லம், பிஞ்ச், பிராவோ, ரவீந்திர ஜடேஜா என்று நட்சத்திர வீரர்கள் பலர் வரிசைகட்டி நிற்கிறார்கள். பேட்டிங்கில் வலிமையாக உள்ள அந்த அணிக்கு பலவீனமாக இருப்பது பந்துவீச்சுதான். வேகப்பந்து வீச்சில் டேல் ஸ்டெயினைத் தவிர நட்சத்திர பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. சுழற்பந்து வீச்சிலும் அமித் மிஸ்ராவைத் தவிர சர்வதேச போட்டிகளில் அனுபவமுள்ள வீரர்கள் யாரும் இல்லாதது அந்த அணிக்கு பலவீனமாக கருதப்படுகிறது.

இரு அணிகளும் வெற்றிக் கணக்குடன் இந்த ஐபிஎல் தொடரை தொடங்கும் எண்ணத் துடன் இருப்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x