Last Updated : 30 May, 2015 02:32 PM

 

Published : 30 May 2015 02:32 PM
Last Updated : 30 May 2015 02:32 PM

என் கால்கள் தரையில்தான் உள்ளது: ஐபிஎல் பெங்களூரு வீரர் சர்பராஸ் கான்

ஐபிஎல்-8 தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சில முக்கியமான அதிரடி இன்னிங்ஸ்களை ஆடிய 17-வயது மும்பை வீரர் சர்பராஸ் கான் ஐபிஎல் கிரிக்கெட் தனக்கு பெரும் தன்னம்பிக்கையை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

உ.பி.யில் உள்ள தங்களது மூதாதையர் வாழ்ந்த பாசுபூர் கிராமத்திற்கு வந்த சர்பராஸ் கான் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“6-ம் நிலையில் விளையாடுவது எனக்கு கிடைத்த கவுரவம். பொதுவாக அந்நிலையில் மூத்த, அனுபவமிக்க வீரர்களே களமிறங்குவார்கள். ஏனெனில் அந்த நிலையில் களமிறங்குவது அழுத்தங்களை எதிர்கொள்வதற்காகவே. அந்த இடத்தில் நான் களமிறக்கப்பட்டது என் அதிர்ஷ்டம்தான்.

அது எனக்கு பெரிய தன்னம்பிக்கை அளித்தது, அதற்காக நான் பறக்கவில்லை, என் கால்கள் தரையில்தான் இருக்கிறது. எப்போதும் இருக்கும்.” என்று தன்னம்பிக்கையை தன்னடக்கத்துடன் சர்பராஸ் கான் வெளிப்படுத்தினார்.

மும்பை வீரரான சர்பாராஸ் கானை ஆர்சிபி அணி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நல்ல பந்து வீச்சுக்கு எதிராக 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தது பற்றி சர்பராஸ் கூறும் போது, “கெய்ல், கோலி, டிவில்லியர்ஸ் எனது பேட்டிங்கை வலுப்படுத்த நிறைய ஆலோசனைகளை வழங்கினர்.

வெகுவிரைவில் அவர்களது ஆலோசனைகள் எனது பேட்டிங்கில் எதிரொலிக்கும். குறிப்பாக விராட் கோலி நிறைய உதவிகள் புரிந்தார். அவர் ஒரு நண்பராகவே செயல்பட்டார், கேப்டன் அல்லது வழிகாட்டி என்பது இரண்டாம்பட்சமே” என்றார்.

இந்தியாவுக்காக ஆடும் கனவு பற்றி கூறும்போது, “அது எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை கணிப்பது கடினம், ஆனால் நான் உழைக்கும் விதம், நிச்சயம் இந்திய அணிக்காக என்னை ஆடவைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சர்பராஸின் தந்தையும், பயிற்சியாளருமான நவுஷத் கான் கூறும் போது, “நான் சர்பராஸை கிரிக்கெட்டுக்கு ஒப்புக் கொடுத்து விட்டேன். சர்பராஸின் தாயார் காலையில் நாலறை மணிக்கு எழுந்து எங்களுக்கு சமையல் செய்து கொடுத்து விடுவார். நாங்கள் வீட்டிலிருந்து 5 மணிக்கு கிளம்புவோம். 7 மணி முதல் பயிற்சியில் ஈடுபடுவோம். இரவு 8 மணியளவில்தான் வீடு திரும்புவோம்.

இரவு உணவை முடித்து விட்டு 9 மணிக்கெல்லாம் உறங்கி விடுவோம். இந்தப் பழக்கம் தொடர்ச்சியாக எங்களிடம் இருந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x