Published : 07 Sep 2014 04:49 PM
Last Updated : 07 Sep 2014 04:49 PM

உலகக் கோப்பையை வெல்ல இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கே வாய்ப்பு: இயன் சாப்பல்

2015ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையை வெல்ல இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகளுக்கே அதிக வாய்ப்புளது என்று இயன் சாப்பல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:

"உலகக் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கே அதிக வாய்ப்பிருக்கிறது. வெற்றி அணி இந்த 3 அணிகளிலிருந்துதான் வரும் என்று எதிர்பார்க்கலாம். இங்கிலாந்து சுத்தமாக மடிந்து விட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியை நம்ப முடியாது. அவர்கள் வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம்.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வெல்வதற்கான வாய்ப்பு ஏன் அதிகம் என்றால், இந்த அணித்தலைவர்கள் வலுவானவர்கள். தோனிக்கு டெஸ்ட் போட்டிகளில் நிறைய பிரச்சினைகள் உள்ளது. ஆனாலும் ஒருநாள் போட்டிகளில் இன்றளவில் அவரை விடவும் சிறப்பான கேப்டன்கள் உருவாகிவிடவில்லை.

இந்திய அணி கடந்த முறை சாம்பியன் என்ற தகுதியுடன் களமிறங்கினாலும் ஆஸ்திரேலியாவின் பந்துகள் எகிறும் பிட்ச்களில் அந்த அணியின் திறமை மீது சந்தேகம் இருக்கிறது. அவர்களது பேட்டிங் இத்தகைய தேவைகளை உணர்ந்திருக்கிறதா, அல்லது பந்து வீச்சில் இந்தப் பிட்ச்களில் பரிமளிக்கும் வேகம் உள்ளதா என்பது பெரிய கேள்விதான்.

நியூசிலாந்தில் ஸ்விங் பந்து வீச்சு போதும், ஆனால் ஆஸ்திரேலியாவில் கடினம். 2015 உலகக் கோப்பையில் இந்தியா நிலைத்திருக்குமானால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் அரையிறுதியில் மோதும் என்று எதிர்பார்க்கலாம்.

இது அந்த அணிக்கு தொடர்ச்சியாக உலகக் கோப்பை இறுதியில் நுழையும் வாய்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

உலகிலேயே ஆஸ்திரேலிய அணியில்தான் இப்போதைக்கு அதிரடி பேட்டிங் வரிசை உள்ளது. வார்னர், வாட்சன், மிட்செல் மார்ஷ், ஏரோன் ஃபின்ச், கிளென் மேக்ஸ்வெல் என்று அதிரடிப் பட்டாளம் வேறு எந்த அணியிலும் இல்லாத அளவுக்கு உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் முத்தரப்பு தொடர்களைத் தாண்டி உலகக் கோப்பை வரை கிளார்க் வருவது அவரது உடல் தகுதியைப் பொறுத்ததே.

தென் ஆப்பிரிக்கா ஒரு சிறந்த அணியாக விளங்குகிறது. ஜாக் காலிஸ் போன்ற தலைசிறந்த ஆல்ரவுண்டரின் சேவைகளை அந்த அணி இழந்துள்ளது. மேலும் ஆம்லா, டுபிளேசி, டிவிலியர்ஸை நம்பி பேட்டிங் உள்ளது. பந்து வீச்சில் எப்போதும் டேல் ஸ்டெய்ன் எடுக்கும் விக்கெட்டுகளே வெற்றியில் பங்களிப்பு செய்கிறது.

ஆகவே நாக்-அவுட் சுற்றில் ஒரு மோசமான நாள் அந்த அணிக்கு ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க ஆகிய 3 அணிகளுக்கே கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார் இயன் சாப்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x