Published : 29 Jun 2014 03:00 PM
Last Updated : 29 Jun 2014 03:00 PM

உருகுவேயை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது கொலம்பியா!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இன்று நள்ளிரவு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உருகுவேயை கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது கொலம்பியா.

மெஸ்ஸி, நெய்மார், முல்லர், வான் பெர்சி என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில் அமைதியாக ஒரு வீரர் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர்தான் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸ். 22 வயதான இந்த இளம் வீரர் முதல் பாதியிலேயே அபாரமான கோலை அடித்தார். பிறகு 2வது கோலையும் அடித்த இவர் இந்த உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்து முன்னிலை வகிக்கிறார்.

சிறத தனிநபர் திறனுக்கு மூசாவைப் போன்று இவரும் ஒரு உதாரணம். முதல் கோல் அடித்த விதத்திலேயே இவர் ஒரு பெரிய வீரர் என்பது தெரிந்தது. அடுத்த சனிக்கிழமை இந்த ரோட்ரிகஸை பிரேசில் காலிறுதியில் எதிர்கொள்ளவேண்டும். ஆனால் பிரேஸில் ஹை வோல்டேஜ் போட்டையையே வென்று விட்ட பிறகு கொலம்பியாவுக்கு நிச்சயம் பெரும் கடினம்தான். ஒரு கடினமான சவாலை ஏற்படுத்துவது கூட கடினமே. ஏனெனில் பிரேசிலின் உணர்வு நிலை இப்போது அந்த உற்சாகத்தில் இருக்கும்.

அனைவரும் சுவாரேஸின் கடி, தடை அதன் விளைவு என்று பேசி வந்த நிலையில், கொலம்பியாவின் உலகின் சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவரான ரடமெல் ஃபால்கோ அணியில் இல்லாதது பற்றி ஒருவரும் கண்டு கொள்ளவில்லை.

ஆட்டம் தொடங்கும் விசில் ஊதப்பட்டவுடனேயே கோல் கீப்பர் உட்பட கொலம்பியாவின் அனைத்து வீரர்களும் சுறுசுறுப்படைந்தனர். அனைவரையும் பயன்படுத்தும் அபாரமாஅன உத்திக் கையாளப்பட்டது.

மாறாக உருகுவே தடுப்பாட்டத்தில் இறங்கியது. மைதானத்தின் ஸ்கோர் போர்டு பந்து 70% கொலம்பியாவிடமே இருந்தது என்று காண்பித்தபோது கொலம்பிய ரசிகர்கள் வெற்றி பெருமிதம் காண்பித்தனர்.

அரைமணி நேரத்திற்கு சற்று முன்னால் தலையால் பந்தை முட்டி டென்னிஸ் போல் மாறி மாறி ஆட ஜேம்ஸ் ரோட்ரிகஸ் ஒரு பந்தை அபாரமாக மார்பினால் கட்டுப்படுத்தி திரும்பி பந்து ஃபுல்டாஸாக இருக்கும்போதே அப்படியே இடது காலால் மிக ஸ்டைலாக உதைத்தார். பந்து கோல் ஆனது. ஒருவரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த உலகக் கோப்பையின் ஸ்டைலிஸ்க் கோல் இது என்றால் மிகையாகாது.

கொலம்பியா பெரும்பாலும் ஸ்பெயின் போலவே முக்கோண வடிவமைப்பில் ஷார்ட் பாஸ்களைச் செய்து விளையாடியட்யு. தேவைப்படும்போது லாங் பாஸ்களையும் செய்தது. கொலம்பியாவின் கோல் உருகுவேயை சற்றே எழுச்சியுறச் செய்தது.

ஆனாலும் பயனில்லை. கொலம்பியப் பகுதிக்குள் நுழைய முடிந்தாலும் ஷாட்டில் எந்த வித உத்வேகமும் கிடைக்கவில்லை. கவானி மட்டும் ஓரிரு முறை அச்சுறுத்தலாக இருந்தார். அவர் தலையால் அடித்த ஷாட் ஒன்றை கொலம்பிய கோல் கீப்பர் டேவிட் ஆஸ்பீன தாவித் தட்டிவிட்டார்.

இடைவேளையின் போது கொலம்பியா 1- 0 என்று இருந்தது. சுவாரேஸ் இல்லாததால் உற்சாகம் குன்றிக் காணப்பட்ட உருகுவே அணிக்கு இடைவேளைக்குப் பிறகு 50வது நிமிடத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.

இந்தத் தருணத்தில் கொலம்பிய வீரர்கள் பந்தை இடது வலது புறம் என்று மாறி மாறி பாஸ் செய்து வந்தனர் சுமார் 3வது பாஸில் கொலம்பியாவின் ஆர்மீரோ இடது புறம் மார்க் செய்யப்படாமல் சுதந்திர ஜீவியானார், அவர் லாங் ஷாட்டை அடித்தார் அங்கு தடுப்பு வீரராக நின்று கொண்டிருந்த குவாடிராடோ தலையால் முட்டி மைதானத்தின் மையத்திற்கு அனுப்பினார்.அப்போது மீண்டும் ரோட்ரிகஸ் வந்து காலியாக இருந்த வலையில் கோலைச் செலுத்தினார். இதுவே பின்பு வெற்றி கோலாக அமைந்தது. இந்த உலகக் கோப்பையில் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் அடிக்கும் 5வது கோல் ஆகும் இது.

64வது நிமிடத்தில் இடது உள்புறத்திலிருந்து உருகுவே வீரர் கிறிஸ்டியன் ரோட்ரிக்ஸ் சீறிப்பாய்ந்து வந்தார் பந்தை ஆக்ரோஷமாக வலது புறம் கீழாக கோல் நோக்கி அடித்தார். ஆனால் கொலம்பியாவின் ஆஸ்பீனோ மீண்டும் பாய்ந்து தட்டி விட்டார். உருகுவே இந்த ஆட்டத்தில் செய்த சிறந்த கோல் முயற்சி இதுவே.

கடைசி வரை உருகுவேயின் முயற்சிகள் நிறைவேறவில்லை. கொலம்பியா முதன் முதலாக உலகக் கோப்பை காலிறுதிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்தது.

மேலும் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் தோல்வியடையாமல் தனது சாதனையை சமன் செய்துள்ளது. காலிறுதியில் பிரேசிலைச் சந்திக்கிறது கொலம்பியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x