Published : 19 Mar 2015 09:50 AM
Last Updated : 19 Mar 2015 09:50 AM

உகோ காலிறுதி: இந்தியா - வங்கதேசம் போட்டி பதிவுகள்

தொடரும் ஆதிக்கம்: அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

ஆட்ட நாயகனாக, தன் வாழ்நாளில் மிக முக்கியமான தருணத்தில் சதம் அடித்துக் கொடுத்து வெற்றிக்கு வித்திட்ட ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

தோனியின் கேப்டன்சியில் ஒருநாள் போட்டிகளில் இந்தியா பெறும் 100-வது வெற்றி.

மேலும், நடப்பு உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் இந்தியா 70 விக்கெட்டுகள், அனைத்து அணிகளையும் இந்தியா ஆல் அவுட் செய்துள்ளது. | வாசிக்க - அலசல்: >ஆஸி., நியூஸி.யை அச்சுறுத்தும் இந்தியாவின் ஆதிக்க வெற்றி |

வெற்றிக் கணம்: உமேஷ் யாதவ் 4வது விக்கெட்டைக் கைப்பற்றினார் வங்கதேசம் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்டத்தின் 45-வது ஓவரில் உமேஷ் யாதவ் ரூபல் ஹுசைன் மற்றும் சபிர் ரஹ்மான் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சரிந்து வரும் வங்கதேச அணி தனது 9-வது விக்கெட்டை இழந்தது. ரூபல் ஹுசைன் ரன் எடுக்கும் முன்பே ஸ்கொயர் லெக் திசையில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், உமேஷ் யாதவ் 3-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். வங்கதேசம் 193/9.

மோர்டசா விக்கெட்டை வீழ்த்தினார் மோஹித் சர்மா

ஆட்டத்தின் 44-வது ஓவரில் வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசா விக்கெட்டை மோஹித் சர்மா கைப்பற்றினார், வங்கதேசம் 8-வது விக்கெட்டை இழந்தது. அருமையாக சற்றே அவுட் ஸ்விங் ஆன பந்து மட்டையின் விளிம்பில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது, மோர்டசா 1 ரன்னில் அவுட். வங்கதேசம் 192/8. மோஹித் சர்மாவின் முதல் விக்கெட்.

ஜடேஜா 2-வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அருமையாக ஆடி வந்த நசிர் ஹுசைன் 34 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் பந்தை ஷாட் கவர் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வங்கதேசம் 43 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள்.

303 ரன்கள் இலக்கைத் துரத்தி வரும் வங்கதேசம் 43 ஓவர்களில் 7விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள்.

அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை. அவருக்கு விக்கெட் விழாததற்குக் காரணம் ஷிகர் தவன். இவர் நசிர் ஹுசைன் கொடுத்த எளிதான கேட்சை பாயிண்டில் நழுவ விட்டார்.

39-வது ஓவரில் ஷமி 4 ரன்கள் கொடுத்தார். 38-வது ஓவரில் உமேஷ் யாதவ் 2 ரன்களை மட்டும் கொடுத்தார்.

உமேஷ் யாதவ் பந்தில் முஷ்பிகுர் ரஹிம் 27 ரன்களில் அவுட். தோனிக்கு எளிதான கேட்ச்

பவர் பிளே வருகிறது. வங்கதேசத்துகு தேவை ஓவருக்கு 10.93 ரன்கள்.

ஷாகிப் அல் ஹசன் விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா

ஆட்டத்தின் 29-வது ஓவரை ஜடேஜா வீச, 2-வது பந்தை, ஷார்ட் ஆக விழுந்த பந்தை, கட் செய்தார் ஷாகிப், பந்து நேராக ஷார்ட் தேர்ட் மேன் திசையில் நின்று கொண்டிருந்த ஷமியிடம் சென்றது. எளிதான கேட்ச். வங்கதேசம் 5-வது விக்கெட்டை இழந்தது. நல்ல களவியூகம்.

303 ரன்கள் இலக்கைத் துரத்தி வரும் வங்கதேசம் 28 வது ஓவரில் ஷாகிப் (10) விக்கெட்டை ஜடேஜாவிடம் இழந்தது. 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் 7 பேட்டிங்.

17-வது ஓவரில் ஷிகர் தவன் பிடித்த அசாத்திய கேட்சிற்குப் பிறகு மீண்டும் ஒரு அருமையான கேட்சை தோனி பிடித்து வங்கதேச வீரர் சவுமியா சர்க்காரை வெளியேற்றினார்.

தோனியின் ‘டைவ்’ கேட்ச்:

ஷமி வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை சவுமியா சர்க்கார் கட் செய்ய பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு கிட்டத்தட்ட 2-வது ஸ்லிப்பிற்குச் சென்ற கேட்சை இடது புறம் டைவ் அடித்து ஒரு கையில் கேட்ச் எடுத்தார் தோனி. வங்கதேசம் 4-வது விக்கெட்டை இழந்தது. சவுமியா சர்க்கார் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷமியின் 2-வது விக்கெட் இது. வங்கதேசம் 4 விக்கெட்டுகளை இழந்தது.

தவன் பிடித்த அசாத்திய கேட்ச்: மஹமுதுல்லா அவுட்

உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் 303 ரன்கள் இலக்கைத் துரத்தி வரும் வங்கதேசம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்முதுல்லா 21 அவுட். சர்க்கார் 25 பேட்டிங், ஷாகிப் அல் ஹசன் 5.

303 ரன்களைத் துரத்தி வரும் வங்கதேசம் அதன் 2 சத நாயகன் மஹமுதுல்லாவை ஷிகர் தவண் பிடித்த அசாத்திய கேட்சிற்கு இழந்தது.

ஆட்டத்தின் 17-வது ஓவர் முகம்மது ஷமியை அழைத்தார் தோனி. 6-வது பந்து பவுன்சர். அதனை மஹமுதுல்லா அருமையாக ஹூக் செய்தார். பந்து சிக்சருக்குச் சென்றது. ஆனால் டீப் ஸ்கொயர்லெக் திசையில் பவுண்டரி அருகே எம்பிப் பிடிக்க முயன்ற தவண் முதலில் விட்டார் பிறகு பிடித்தார். ஆனால் எல்லைக்கோட்டுக்குள் வெளியே சென்று விடுவோம் என்று தெரிய பந்தை கையிலிருந்து தூக்கி விட்டார். எல்லைக்கோட்டைக் கடந்து செல்லும் போது பந்து அவர் கையில் இல்லை. பிறகு பவுண்டரியிலிருந்து உள்ளே வந்து கேட்ச் பிடித்தார்.

மிகவும் அசாத்தியமான கேட்ச். ஷமியின் 16-வது விக்கெட். மஹமுதுல்லா இன்னும் 2 ரன்கள் அடித்திருந்தால் இந்த உலகக்கோப்பையில் ஷிகர் தவன் எடுத்த ரன்களைக் கடந்திருப்பார்.

ரெய்னா வீசிய 16-வது ஓவரில் 8 ரன்கள். மோஹித் வீசிய 15-வது ஓவரில் 2 ரன்கள். ரெய்னா வீசிய 14-வது ஓவரில் 7 ரன்கள்.

13-வது ஓவர்: மோஹித் சரமா வீசிய ஓவரில் 8 ரன்கள் அடிக்கப்பட்டது. ரெய்னா தனது முதல் ஓவரை மெய்டனாக வீசினார். அஸ்வின் பந்து வீச வந்துள்ளார். முதல் ஓவரில் 2 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

303 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடி வரும் வங்கதேசம் சற்று முன் வரை 6.4 ஓவர் முடிவில் 33 ரன்கள் எடுத்து தமிம் இக்பால், இம்ருல் கயேஸ் ஆகிய தொடக்க வீரர்கள் விக்கெட்டை இழந்தது.

உமேஷ் யாதவ் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கரை அவர் தொட மட்டையின் விளிம்பில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது. தோனி முன்னால் வந்து கேட்ச் பிடித்ததால் சற்று சந்தேகம் எழுந்தது. ரிவியூவில் கேட்ச்சை தோனி சரியாக பிடித்ததாக தீர்ப்பானது தமிம் 25 பந்துகளில் 25 ரன்களில் அவுட்.

அதே ஓவரில் புதிதாகக் களமிறங்கிய சவுமியா சர்க்கார் பந்தை ஜடேஜாவிடம் அடித்து விட்டு வேடிக்கைப் பார்க்க இம்ருல் கயேஸ் ஓடி வந்தார். ஆனால் அவர் திருப்பி அனுப்பப்பட ஜடேஜா நேராக த்ரோவை யாதவ்விடம் அடிக்க ரன்னர் முனையில் ரன் அவுட் ஆனார் கயேஸ். அவர் 5 ரன்னில் அவுட்.

முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீச கடைசி பந்து இம்ருல் கயேஸின் மட்டையின் அடியில் பட்டுச் சென்றது போல் தெரிந்தது. ஆனால் முறையீடே செய்யவில்லை. ஸ்லிப்பில் தவண் மட்டும் கையை உயர்த்தி அப்பீல் செய்தார். அது அவுட்டாக இருக்கலாம் என்று தெரிகிறது.

ரோஹித், ரெய்னா அபாரம்: இந்தியா 302 ரன்கள் குவிப்பு

உலகக் கோப்பை 2-வது காலிறுதிப் போட்டியில், வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள். ஜடேஜா 23 நாட் அவுட். அஸ்வின் 3 நாட் அவுட்.

ரோஹித் சர்மா, ரெய்னா ஆகியோரின் அபார ஆட்டத்தின் துணையுடன், வங்கதேச அணிக்கு 303 ரன்கள் என்ற சற்றே கடினமான இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.

பீல்டிங்கில் இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள்

உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா 302 ரன்களைக் குவித்தது. எளிதாக குவித்தது என்று கூற முடியாது. ஏனெனில் முதல் 10 ஓவர்களில் 51 ரன்களை எடுத்த இந்திய அணி அடுத்த 25 ஓவர்களில் 104 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 3 விக்கெட்டுகளையும் இழந்தது. 35-வது ஓவர் முடிவில் பவர் பிளேயின் போது இந்தியா 155 ரன்களையே எடுத்திருந்தது.

குறிப்பாக கோலி, ரஹானே ஆட்டமிழந்த பிறகு வங்கதேசத்தின் கை ஓங்கி இருந்தது. 8.2-வது ஓவரில் பவுண்டரி வந்த பிறகு 15-வது ஓவரில் ஒரு சிக்ஸர். அதன் பிறகு வங்கதேசம் அருமையாக பீல்ட் செய்து, பவுலிங் செய்து இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். அடுத்த பவுண்டரி சுமார் 11 ஓவர்கள் கழித்தே வந்தது.

ஆனால் ரெய்னா, களமிறங்கிய பிறகு ஆட்டம் திருப்புமுனை கண்டது. அவர் அனாயசமாக ஆடத் தொடங்கினார். ரோஹித் சர்மா மிகப்பெரிய இன்னிங்ஸ் ஒன்றை ஆடிக் கொடுத்துள்ளார். இருவரும் இணைந்து பவர் பிளே உட்பட விளாசி ரன்களைக் குவிக்க 15.5 ஓவர்களில் 4-வது விக்கெட்டுக்காக 122 ரன்களை இருவரும் குவித்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து விளாசிய பிறகு வங்கதேசம் நிறைய தவறுகளைச் செய்யத் தொடங்கினர். கள வியூகத்தில் தவறுகள் செய்தனர். இதனால் கடைசி 15 ஓவர்களில் ரோஹித் சதத்துடன் 147 ரன்களை இந்தியா குவித்தது. ஜடேஜா கடைசியில் 10 பந்துகளில் 23 ரன்கள் விளாசியதும் உதவியது.

இந்த மைதானத்தில் இவ்வளவு ரன்களை இதுவரை எந்த அணியும் துரத்தியதில்லை. இன்று காலை ஷேன் வார்ன் கூறும் போது விளக்கு வெளிச்சத்தில் பந்துகள் எகிறும், கொஞ்சம் ஸ்விங் ஆகும் என்று கூறியிருந்தார்.

இந்தியா மிக மோசமாக ஆடினாலே தவிர அரையிறுதிக்குச் செல்வதை வங்கதேசம் தடுக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. வங்கதேச அணியில் டஸ்கின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் நசீர் ஹுசைன், ரூபல் ஹுசைன் சிக்கனமாக வீசினர்.

அஸ்வின், ஜடேஜா, ஷமி, உமேஷ் பந்து வீச்சில் நெருப்புப் பொறி பறந்தால் வங்கதேசம் அதனை முறியடிப்பது கடினம். கேட்ச்களை பிடிக்க வேண்டும். மேலும் பெரிய மைதானம் என்பதால் 1 ரன் என்பது 2 ஆகும், 2 என்பது 3 ஆகும். இதனை தடுத்து நிறுத்தி, பெரிய பார்ட்னர்ஷிப் கொடுக்காமல் வீசினால் போதும் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு நிச்சயம் என்று கூறலாம். இருந்தாலும் கிரிக்கெட் ஆட்டம் என்பது ‘நிச்சயமின்மைகளின் ஆட்டம்’ என்று கூறப்படுவதுண்டு. - முத்துக்குமார், கிரிக்கெட் ஆர்வலர்

தோனி 6 ரன்களில் அவுட்

டஸ்கின் அகமட் பந்தை அடிக்க நினைத்தார் ஆனால் ஆஃப் திசையில் கேட்ச் ஆனது. நீண்ட நேரம் தோனிக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை.

137 ரன்கள் அதிரடிக்குப் பிறகு ரோஹித் சர்மா அவுட்

ஆட்டத்தின் 47-வது ஓவரில் ரோஹித் சர்மா தனது ஃபுல் ஃபார்மில் இருந்தார். 3-வது பந்தை ஒரு அருமையான சிக்ஸ் அடித்தார். டஸ்கின் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அவர் லாங் ஆனில் அருமையாக சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்து ஸ்லோ ஷார்ட் பிட்ச் இம்முறை ஸ்கொயர்லெக்கில் புல் ஷாட்டில் பவுண்டரி. அதே ஓவரின் கடைசி பந்து யார்க்கராக அமைய பவுல்டு ஆனார். தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்தார். பந்து உள்ளே ஸ்விங் ஆனது. பவுல்டு ஆனார். உலகக்கோப்பையில் முக்கியமான ஆட்டத்தில் ஒரு அருமையான சதம் எடுத்த ரோஹித் 126 பந்துகளில் 14 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 137 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

ரெய்னா 65 ரன்களில் அவுட்

ஆட்டத்தின் 44-வது ஓவரை மஷ்ரபே மோர்டசா வீச 5-வது பந்தை ரெய்னா ஒரு மிகப்பெரிய சுழற்று சுழற்றினார் பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் ரஹீமிடம் கேட்ச் ஆனது. ரெய்னா 57 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரும் ரோஹித் சர்மாவும் இணைந்து 95 பந்துகளில் 122 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

ரோஹித் சர்மா அபார சதம்

உலகக்கோப்பை காலிறுதியில் ரோஹித் சர்மா சதம் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவரது 7-வது சதம். 108 பந்துகளில் சதம் கண்ட ரோஹித் சர்மா அதில் 10 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ரோஹித்தின் முதல் சதம்.

2003 உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் அப்போதைய கேப்டன் கங்குலி அடித்த சதத்துக்குப் பிறகு நாக்-அவுட் சுற்றில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அடைந்தார் ரோஹித் சர்மா.

சர்ச்சைக்குரிய நோ-பால் தீர்ப்பில் தப்பித்த ரோஹித் சர்மா:

ஆட்டத்தின் 40வது ஓவரை ருபல் ஹுசைன் வீச 4-வது பந்து ஃபுல்டாஸ் ஆக ரோஹித் அதனை அடிக்க பந்து டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனது. ஆனால் நடுவரோ பந்து இடுப்புக்கு மேல் சென்ற பந்து என்று நோ-பால் என்று தீர்ப்பளித்தார். ரீப்ளேயில் சற்றே இடுப்புக்கு மேல் போன்று தெரிந்தது என்று கூறப்படுகிறது. ஆனால், இது நிச்சயம் ஒரு சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே ஓவரில் ரெய்னா ஒரு பந்தை தூக்கி அடிக்க பந்து ஆளில்லாத திசையில் விழுந்தது. இந்த ஓவர் இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு அதிர்ஷ்டம் வாய்ந்த திருப்பு முனையே.

39-வது ஓவர் டஸ்கின் அகமது வீசினார்: 3-வது பந்து ஆஃப் ஸ்டம்பில் வர ரொஹித் சர்மா அதனை ஆட முயன்றார் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் இல்லாத திசையில் பவுண்டரி சென்றது. ஸ்லிப் நிறுத்தியிருக்கலாம். ஆனால் இது பவர் பிளே என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஓவரில் 10 ரன்கள்

ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டு ஆட்டம் சற்று நேரத்தில் தொடங்கியது.

உலகக் கோப்பை 2-வது காலிறுதிப் போட்டியில், வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக வீரர்கள் அனைவரும் பெவிலியன் சென்றனர், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.மழை பெய்யக்கூடும் என்று ஏற்கெனவே கணிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா 96 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்சருடன் 83 ரன்களுடனும், ரெய்னா 38 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிச்கருடன் 38 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இந்திய அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. பேட்டிங் பவர் பிளேயில் 3.1 ஓவர்களில் 31 ரன்கள் விளாசப்பட்டுள்ளது.

38-வது ஓவர் ரூபல் ஹுசைன் வீசினார். 3-வது பந்தை ரூபல் ஹுசைன் லெக் திசையில் வீச ரெய்னா அதனை அழகாக பேட்டை வைத்தார் பைன் லெக் திசையில் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 9 ரன்கள்.

37-வது ஓவர் ஷாகிப் அல் ஹசன் வீசிய முதல் பந்தை மேலேறி வந்து ரெய்னா லாங் ஆனில் மிகப்பெரிய சிக்சரை அடித்தார். அற்புதமான ஷாட். பெரிய பவுண்டரி ஆனாலும் பந்து எளிதில் கடந்தது. பிறகு ரோஹித் சர்மா கடைசி பந்தை அருமையாக ஸ்வீப் செய்து டீப் ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 11 ரன்கள்.

தப்பித்தார் ரெய்னா:

34-வது ஓவரில் மஷ்ரபே மோர்டசா பந்தை லெக் திசையில் ஆட முயன்றார் ரெய்னா பந்து கால்காப்பில் பட ஒரு முறையீடு எழுந்தது. நடுவர் நாட் அவுட் என்றார். மோர்டசா உடனே ரிவியூ செய்தார். பந்து ஸ்டம்பில் பட்டிருக்கலாம். ஆனால் எல்.பி. விதிகளின் படி பந்து லேசாக லெக் ஸ்டம்புக்கு வெளியே சற்றே பிட்ச் ஆனதால் அவுட் கொடுக்க முடியாது. 3-வது நடுவர் நாட் அவுட் என்றார் ரெய்னா தப்பித்தார். அடுத்த பந்தே பீட் ஆனார் ரெய்னா, அதற்கு அடுத்த பந்து ரோஹித் சர்மாவும் ஒரு எட்ஜ் பவுண்டரி அடித்தார். வங்கதேசத்துக்கு துரதிர்ஷ்டம், இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்.

கிரிக்கெட் ஆர்வலர் முத்துக்குமார் பார்வை:

| இந்த நிலையிலிருந்து இந்தியா மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் பவர் பிளேயில் 45-50 ரன்களை எடுப்பது அவசியம். பிறகு கடைசி 10 ஓவர்களில் 80-90 ரன்களை எடுத்தால் 290 ரன்கள் என்ற இலக்கை எட்டலாம்.

மெல்போர்னில் கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் சராசரி முதல் பேட்டிங் ரன் எண்ணிக்கை 290 ரன்கள். இதில் முதலில் பேட் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா 50 ஓவர்கள் வரை நிற்பது அவசியம். அப்படி நின்றால் 300 ரன்களையும் எடுக்க வாய்ப்பிருக்கிறது. |

குளிர் பான இடைவேளை: 31 ஓவர்களில் இந்தியா 132/3. ரோஹித் சர்மா 60 பேட்டிங்; ரெய்னா 1 எட்ஜ் பவுண்டரியுடன் 8 பேட்டிங்.

ரோஹித் சர்மா சற்று முன் தன் அரைசதத்தை எடுத்து முடித்தார். 70 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அவர் அரைசதம் கண்டார். அதன் பிறகு டஸ்கின் அகமதை அவர் மிட்விக்கெட்டில் ஒரு அபார பவுண்டரி அடித்து 56 ரன்களில் ஆடி வருகிறார்.

அஜிங்கிய ரஹானே சற்றே மெதுவாக ஆடி வந்தார். இந்நிலையில் ஆட்டத்தின் 28வது ஓவரில் டஸ்கின் அகமது பந்தை தூக்கி அடிக்க முயன்று ரஹானே 37 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தரையோடு ஆடும் இவர் பெரிய பவுண்டரி மைதானத்தில் தேவையில்லாமல் தூக்கி அடித்து ஆட்டமிழந்துள்ளார்.

28 ஓவர்களில் இந்தியா 115/3. ரெய்னா களமிறங்கியுள்ளார். இந்தியா 10 ஓவர்களில் 51/0 பிறகு தற்போது 28வது ஓவர் முடிவில் 115/3. வங்கதேசம் அருமையாகக் கட்டுப்படுத்தி நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது.

8.2 ஆவது ஓவரில் ஷிகர் தவன் பவுண்டரி அடித்த பிறகு 15-வது ஓவரில் ரோஹித் சர்மா அபாரமான ஒரு சிக்சர் அடிக்கிறார். அதன் பிறகு 26-வது ஓவரில்தான் பவுண்டரி வந்தது. 28-வது ஓவரில் ரோஹித் சர்மா ஒரு பவுண்டரி அடித்தார் அதன் பிறகுதான் ரஹானே தேவையில்லாமல் மிட் ஆஃப் மேல் தூக்கி அடிக்க முயன்று அவுட் ஆனார். பந்து சரியாகச் சிக்கவில்லை. ஷாகிப் அல் ஹசன் கேட்ச் பிடித்தார்.

தவண், கோலி விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி

17.4-வது ஓவரில் ரூபெல் உசேனின் பந்துவீச்சை எதிர்கொண்ட கோலி ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ரஹிம் தவறவிடாமல் கேட்ச் பிடித்தார். கோலி 8 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் 16.3-வது ஓவரில் ஹசன் பந்துவீச்சில் அற்புதமாக ஸ்டம்பிங் முறையில் கீப்பர் ரஹிம் ஆட்டமிழக்கச் செய்தார். இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. தவண் 50 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சற்றே ஏறி விளையாட முயற்சி செய்தபோது தனது விக்கெட்டை தவண் இழக்க வேண்டியதாகிவிட்டது.

முன்னதாக, 15.4-வது ஓவரில் ரூபெல் உசேன் ஒரு பவுன்சர் போட்டார். அதை தவண் எதிர்கொண்டார். பேட்டில் பந்து பட்டு கீப்பரில் கேட்ச் ஆனதாக உசேன் கொண்டாட ஆரம்பித்தார். ஆனால், நடுவரிடம் அவருக்கு சாதகமான ரியாக்‌ஷன் இல்லை. பின்னர், ரிவ்யூ போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போகவில்லை. அது, பேட்டில் பந்து படவில்லை என்பது தெளிவானது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

லீக் சுற்றில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, 2007 உலகக் கோப்பையில் வங்கதேசத்திடம் கண்ட அதிர்ச்சி தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும்.

இந்திய அணிக்கு அதிக வெற்றி வாய்ப் பிருப்பதாக கருதப்பட்டாலும், வங்கதேச அணியையையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. லீக் சுற்றில் பலம் வாய்ந்த பந்துவீச்சைக் கொண்ட நியூஸிலாந்துக்கு எதிராக 250 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே அணி வங்கதேசம்தான் என்பதும் கவனிக்கத்தக்கது.

*

எப்படி இருக்கிறது இந்த ஆட்டத்தின் போக்கு?- கருத்துப் பகுதியில் விவாதிக்கலாம் வாருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x