Published : 16 Jul 2017 12:13 PM
Last Updated : 16 Jul 2017 12:13 PM

இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு: முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கணிப்பு

இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதன் கூறினார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் போட்டிகள் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் விபி திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் செயலாளர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் உரிமையாளரான விபி சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். இதைதொடர்ந்து நிருபர்களிடம் முரளிதரன் கூறியதாவது:

டிஎன்பிஎல் தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு. வீரர்களின் திறனை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஐபிஎல் தொடர், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்ப உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய நிலையில் ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சு ஆலோசகராக பணியாற்றி வருகிறேன். இன்னும் 3 ஆண்டுகள் வரை அந்த அணியில்தான் இருப்பேன். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சென்னை அணியுடன் எதிர்காலத்தில் பணியாற்றுவேன். சென்னை அணி தடைக்கு பின்னர் விளையாட உள்ளது. கடந்த காலங்களில் அந்த அணி பெரும்பாலான வீரர்களை அப்படியே தக்கவைத்துக் கொண்டது. ஆனால் தற்போது மீண்டும் அவர்கள் ஒரு குழுவாக இணைய வேண்டும். இந்த விஷயம்தான் சற்று பின்னடைவாக இருக்கும்.

கடந்த 7 ஆண்டுகளாக நான் இலங்கை கிரிக்கெட்டுடன் தொடர்பில் இல்லை. அதனால் அங்கு என்ன நடைபெறுகிறது என்று தெரியாமல் நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. எல்லா அணிக்கும் உள்ள பிரச்சினை தான் தற்போது இலங்கை அணிக்கும் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் அதை சரிசெய்துகொள்வார்கள். எதிர்வரும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்புகள் உள்ளன. எனினும் கிரிக்கெட்டில் எது வேண்டுமானலும் நடைபெறலாம். கடந்த சில ஆண்டுகளாக சுழற்பந்து வீச்சாளர்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடைசி இரு நாட்களில் அவர்களுக்கு விக்கெட்கள் வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் உலகம் முழுவதும் தற்போது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த திறனுடன் செயல்படுகின்றனர்.

இவ்வாறு முரளிதரன் கூறினார்.

அஸ்வின் பந்தை தொட முடியா?

கடந்த முறை சுற்றுப்பயணத்தின் போது அஸ்வின் பந்து வீச்சை இலங்கை வீரர்கள் தொடக்கூட முடியாத நிலை இருந்தது. தற்போதும் அதேபோன்று நிலை வருமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த முரளிதரன், கிரிக்கெட்டி வரலாற்றில் எந்த ஒரு பந்து வீச்சாளரின் பந்தையும் பேட்ஸ்மேன்கள் தொட முடியாத நிலை என்று ஒன்று இல்லை. கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் முடிந்து போனது விஷயம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x