Last Updated : 26 Sep, 2015 08:01 AM

 

Published : 26 Sep 2015 08:01 AM
Last Updated : 26 Sep 2015 08:01 AM

இம்ரான் தாஹிர் பந்துவீச்சை எச்சரிக்கையாக எதிர்கொள்ளுங்கள்: இந்திய வீரர்களுக்கு சச்சின் அறிவுரை

தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பந்துவீச்சை எச்சரிக்கையாக எதிர்கொள்ளுங்கள் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சச்சின் மேலும் கூறியதாவது: இம்ரான் தாஹிர் தலைசிறந்த பந்துவீச்சாளர். அவருடைய பந்துவீச்சை முறையாகவும், எச்சரிக்கையாவும் எதிர்கொள்ள வேண்டும். இம்ரான் தாஹிர் வரும் தொடரில் முன்னணி பவுலராக திகழ வாய்ப்புள்ளது.

நம்முடைய இந்திய அணியும் அற்புதமான அணிதான். இந்திய அணியில் மிகத்திறமையான வீரர்களும், அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடக்கூடிய வீரர்களும் இருக்கிறார்கள். நம்முடைய வீரர்களைப் பற்றி நிறைய விஷயங்களை சொல்லலாம். ஆனால் கிரிக்கெட் என்று வரும்போது குறுக்கு வழி எதுவும் கிடையாது. இந்திய அணி சிறந்த அணி என்பது எனக்குத் தெரியும்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே டி20 தொடர், ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் ஆகிய 3 தொடர்கள் நடைபெறவுள்ளன. அதனால் இந்தத் தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெஸ்ட் தொடரை பார்ப்பதற்காக மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன். இரு அணிகளும் சமபலம் கொண்டவையாகும்.

நான் ஒருபோதும் பலவீனமான தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடியதில்லை. அந்த அணி எப்போதுமே மிகமிக வலுவான அணியாகவே இருந்திருக்கிறது. இப்போதும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏ.பி.டிவில்லியர்ஸ், ஹசிம் ஆம்லா போன்ற வலுவான வீரர்கள் இருக்கிறார்கள். இதேபோல் டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல் ஆகியோரையும் மறந்துவிட முடியாது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x