Published : 26 Nov 2015 02:40 PM
Last Updated : 26 Nov 2015 02:40 PM

இந்தியா 173 ரன்களுக்கு ஆல் அவுட்; தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 310 ரன்கள்

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தன் 2-வது இன்னிங்சில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று தென் ஆப்பிரிக்கா தனது மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் இழந்து 79 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி இம்ரான் தாஹீரின் (5 விக்கெட்) சுழலுக்கு சிக்கி 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நாக்பூர் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இதுவரை 18 விக்கெட்டுகள் விழுந்துள்ளன.

தேநீர் இடைவேளையின் போது 108/5 என்ற நிலையில் 244 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது இந்திய அணி.

உணவு இடைவேளைக்குப் பிறகு முரளி விஜய் 5 ரன்கள் எடுத்து மோர்னி மோர்கெலின் மெதுவான ஆஃப் கட்டரை தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்தார், பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆம்லாவிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

ஷிகர் தவண், புஜாரா ஜோடி இணைந்தனர், இதில் புஜாரா சற்றே ஆக்ரோஷமாக ஆடினார். 45 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். மோர்கெலை ஒரு கவர் டிரைவ் பவுண்டரியுடன் அவர் தொடங்கினார். பிறகு ஹார்மர் பந்து ஒன்று பவுன்ஸ் ஆக எட்ஜ் ஆனது ஆனால் ஸ்லிப்புக்கு முன்னால் விழுந்தது பந்து. பிறகு ரபாதா ஓவரில் மட்டையின் உள் விளிம்பில் பட்டு பவுண்டரியும், அருமையான பிளிக் ஷாட்டில் ஒரு பவுண்டரியும் வந்தது.

அதன் பிறகு டுமினி இரண்டு மகா ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச லெக் திசையில் 2 பவுண்டரிகளை அடித்தார் புஜாரா. கடைசியில் டுமினியின் அதே ஓவரில் திரும்பாத பந்து ஒன்றில் பீட் ஆகி பவுல்டு ஆனார்.

ஷிகர் தவண் கடினமான சில பந்துகளை சந்தித்தாலும் நின்று விட்டார். அவர் சந்தித்த 26-வது பந்தில்தான் ஹார்மரை ஸ்வீப்பில் தன் முதல் பவுண்டரியை அடித்தார். 11 ரன்களில் இருந்த போது ஹார்மரை மீண்டும் ஸ்வீப் செய்ய முயன்றார் மட்டையில் சரியாக சிக்காமல் டாப் எட்ஜ் எடுத்தது. லெக் திசையில் டீன் எல்கர் வாய்ப்பை நழுவ விட்டார்.

பிறகு டுமினி மீண்டும் ஒரு ஓவரை சொதப்பலாக வீச 3 பவுண்டரிகளை விளாசினார் தவண். பிறகு ஹார்மரின் ஒரு ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்த தவண், 78 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று விலாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

விராட் கோலி முழுக்கட்டுப்பாட்டுடன் ஆடி 16 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிரை லாங் ஆஃபில் தூக்கி அடித்து டுபிளெஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ரஹானே இறங்கியவுடனேயே பெரிய முறையீடு எழுந்தது, ஆனால் எட்ஜ் ஆனதா என்பது சரியாக தெரியவில்லை, ஆனால் அவர் அதிக நேரம் நீடிக்கவில்லை அவர் 9 ரன்களில் இம்ரான் தாஹிரின் கூக்ளிக்கு அதன் பவுன்ஸ் காரணமாக ஷார்ட் தேர்ட் மேனில் டுமினியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரஹானே ஆட்டமிழந்த பிறகு இறங்கிய விருத்திமான் சஹா 7 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் பந்தை துடுப்பு ஸ்வீப் ஆட முயன்றார். பந்து சஹாவின் கிளவ்வில் பட்டு விலாஸின் பூட்சில் பட்டு ஆம்லாவிடம் கேட்ச் ஆனது. ஜடேஜா இறங்கி ஒரு பவுண்டரி அடித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மரின் பந்தை கட் செய்ய முயன்றார் பந்து அதிகம் திரும்பாததால் கட் ஷாட் ஆடுவதில் சிரமம் ஏற்பட பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது.

ரோஹித் சர்மா இறங்கி ஒரு அபாரமான பவுண்டரி மற்றும் ஒரு அருமையான லாங் ஆன் சிக்ஸ் மூலம் 39 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து மோர்கெல் பந்தில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அஸ்வின் பேட்டிங் திறன் என்னவானது? அவர் 7 ரன்களில் மோர்கெலின் ரிவர்ஸ் ஸ்விங்குக்கு எல்.பி.ஆகி வெளியேறினார். அமித் மிஸ்ரா 2 பவுண்டரிகளுடன் ஆக்ரோஷம் காட்டி 18 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹீரின் அருமையான பந்தில் பவுல்டு ஆனார். இசாந்த் சர்மா 1 ரன் நாட் அவுட். இந்தியா 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மோர்கெல் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 38 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

310 ரன்கள் வெற்றி இலக்குடன் இன்று 14 ஓவர்களைச் சந்திக்க தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x