Published : 23 Oct 2015 03:17 PM
Last Updated : 23 Oct 2015 03:17 PM

இன்னிங்ஸைக் கட்டமைப்பதில் விராட் கோலி அபாரத் திறமையுடையவர்: தோனி புகழாரம்

சென்னையில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமெடுக்க, டிவில்லியர்ஸ் மிரட்ட, கடைசியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இந்த போட்டி பற்றியும், கோலியின் பேட்டிங் பற்றியும் கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

"தொடக்கத்திலிருந்தே, இந்த போட்டி மட்டுமல்ல, அவர் ஒருநாள் போட்டியில் விளையாடத் தொடங்கியது முதல் கூறுகிறேன், ஆட்டத்தை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே செல்வதில் கவனம் செலுத்துபவர் கோலி.

அவர் 50 ரன்களிலிருந்து 60 ரன்களுக்குச் செல்வதும் பிறகு 100லிருந்து 110 மற்றும் அதைத் தாண்டிச்செல்வதையும் பார்த்தோமானால், இந்த ஸ்கோர்களில்தான் நிறைய பேட்ஸ்மென்கள் அவுட் ஆவதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே இதனை அவர் கடந்து விட்டால் எப்போதும் பெரிய இன்னிங்ஸுக்கான மனநிலையை அவரிடம் உள்ளதை கவனித்துள்ளேன்.

அவர் ஒன்று, இரண்டு என்று ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ததும் அபாரம். பெரிய இன்னிங்சை ஆடும் போது இத்தகைய அணுகுமுறை மிக முக்கியமானது. நடு ஓவர்களில் பீல்டர்களுக்கு நெருக்கடி கொடுப்பது அவசியம். பெரிய இன்னிங்சை பெரிய ஷாட்களை மட்டுமே ஆடுவதன் மூலம் கட்டமைக்க முடியாது. அதுவும் சரியான வெயில் அடித்துக் கொண்டிருக்கும் போது, பவுலர்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக பவுலர்கள் எல்லைக் கோட்டருகே பீல்ட் செய்யும் போது, அவர்களை களைப்படையச் செய்ய வேண்டும்.

அதன் பிறகு 2-வது ஸ்பெல்லை அவர்கள் வீச வரும்போது, தவறிழைப்பார்கள், அடிப்பதற்கு சில பந்துகளை போட்டுக் கொடுப்பார்கள். கோலி இன்னிங்ஸை கட்டமைப்பதிலும் ஓவர்கள் முழுதையும் ஆடுவதிலும் அபாரத் திறமையுடையவர் என்றே நான் கருதுகிறேன்.

மேலும், பிட்ச்கள் வித்தியாசமானவை. ஆஸ்திரேலியா தொடரில் அவர் அடித்த சதங்களையும் இதனையும் நீங்கள் ஒப்பிட்டு பாருங்கள். கொஞ்சம் ஈரப்பதம் இருந்தது, பந்துகள் அருமையாக பேட்டுக்கு வந்தது, அந்தப் போட்டிகள் பெரிய அளவில் ரன் குவிக்கப்பட்ட போட்டிகள், 350 ரன்களை இருமுறை வெற்றிகரமாக விரட்டினோம். ஆனால் இங்கு பிட்ச் கொஞ்சம் மந்தம், அதனால்தான் கோலியினுடைய இன்னிங்ஸ் முக்கியத்துவம் பெறுகிறது, இந்தப் பிட்சில் நன்றாக நிலைபெற்று விட்ட பேட்ஸ்மேன் கடைசி வரை நிற்பது முக்கியம், ஏனெனில் புதிய பேட்ஸ்மென்களுக்கு பிட்சில் பந்துகள் வரும் வேகத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வது குறைந்த நேரத்தில் கடினம்.

ஹர்பஜன் சிங் குறித்து...

சில வேளைகளில் நாம் பந்து வீச்சை விக்கெட் வீழ்த்துவதை வைத்து மதிப்பிடுகிறோம். விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர் நன்றாக வீசுகிறார் என்று நினைக்கிறோம். விக்கெட் கீப்பராக எனக்கு சில நன்மைகள் உள்ளன, ஒரு பவுலர் என்ன செய்கிறார் என்பதை விக்கெட் கீப்பராக துல்லியமாக மதிப்பிட முடியும், ஹர்பஜன் இப்போது நன்றாகவே வீசுகிறார்.

குறிப்பாக தொடரின் தொடக்கத்திலேயே அஸ்வின் ஆட முடியாமல் போனது பெரிய பின்னடைவு, ஏனெனில் இந்த பிட்ச்களில் அவர்தான் நம் ஆயுதம். அவரை நான் முதல் 10 ஓவர்களில் பயன்படுத்துவேன், நடு ஓவர்களில் பயன்படுத்துவேன், ஸ்லாக் ஓவர்களிலும் பயன்படுத்துவேன்.

இந்நிலையில் இந்தத் தொடரில் ஹர்பஜன் பந்து வீச்சு நன்றாகவே அமைந்தது. அதனால் நான் அவரை முதல் 10 ஓவர்களில் பயன்படுத்த முடியும், சென்னையில் கடைசி 10 ஓவர்களுக்கு முன்னதாகவும் அவரைப் பயன்படுத்தினேன். அவர் எனது அழுத்தத்தைக் குறைத்தார்.

இவ்வாறு கூறியுள்ளார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x