Last Updated : 30 Aug, 2016 08:54 AM

 

Published : 30 Aug 2016 08:54 AM
Last Updated : 30 Aug 2016 08:54 AM

இந்த ஆண்டு டெஸ்ட் சீசன் முடிவில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும்: ஒரு நாள் போட்டி கேப்டன் தோனி நம்பிக்கை

இந்த ஆண்டு சீசன் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும் என ஒருநாள் போட்டிக்கான கேப்டன் தோனி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் மாதங்களில் சொந்த மண்ணில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது டெஸ்ட் தர வரிசையில் 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி இந்த சீசன் முடிவில் முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் என தோனி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

தற்போதைய நிலையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பாக உள்ளது. குறுகிய வடிவிலான போட்டிகளில் நமது அணி தற்போது முழுமை பெற்றுள்ளதுடன் நல்ல பேட்டிங் அனுபவமும் உள்ளது. கடந்த இரண்டரை வருடங்களாக ஒரே பேட்டிங் குழுவை பயன்படுத்தி வரு கிறோம். இதில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் அதிகம் கற்றுக் கொண்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டி எப்போதுமே உச்சகட்ட வடிவமுடையது. நாம் மீண்டும் முதலிடத்தை பிடிக்க முடியும். சாதகமான விஷயமாக நமது வேகப்பந்து வீச்சாளர்கள் முழு உடல் தகுதியுடன் உள்ளனர். முறையாக வேகப்பந்து வீசக்கூடிய 10 வீரர்களை நாம் கொண்டுள் ளோம். இவர்கள் அணிக்கு கிடைத்த சொத்து. தற்போது நாம் அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளோம். எனவே வேகப்பந்து வீச்சாளர்களை தேவைக்கு தகுந்தபடி நாம் சுழற்சி முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

செயல்திறனில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். திறமை, அனுபவம் ஆகியவை அணியின் செயல்திறனாக சரியான நேரத்தில் வெளிப்பட வேண்டும். இந்த சீசனில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளோம். எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் இந்த சீசன் முடிவில் இந்திய அணி தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும். மேலும் 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கும் நமக்கும் இடையே கணிசமான இடைவெளியும் இருக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் எந்தவித வித்தியாசமும் இருந்ததாக நான் கருதவில்லை. முதல் போட்டியில் விளையாடிய ஆடுகளம் போன்றுதான் இருந்தது. இரு ஆட்டங்களுக்கும் அதிக கால இடைவெளி இல்லை. இது பந்து வீச்சாளர்கள் விரைவான திட்டம் வகுக்க உதவியது. சுழற்பந்து வீச்சாளர் மிஸ்ரா அருமையாக பந்து வீசினார். ஒட்டு மொத்த பந்து வீச்சு குழுவும் சிறப்பாக செயல்பட்டு 140 ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்திய விதம் அபாரமானது.

இந்த தொடரில் இருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. முதல் ஆட்டத்தில் 245 ரன்களை துரத்துவது ஆரம் பத்தில் இருந்தே கடினமாக அமைந்த போதிலும் நமது பேட்ஸ்மேன்கள் அருமையாக விளையாடினர்.

அதேபோல் பந்து வீச்சாளர் களுக்கு முதல் ஆட்டம் கடினமாக அமைந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் மீண்டு வந்தனர். இது வியப்பாகவும் அமைந்தது. அதேவேளையில் நமது பந்து வீச்சு குழுவின் தன்மையை உணர்ந்து கொள்ள முடிந்தது.

நாங்கள் அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளோம். அணியில் உள்ள வீரர்கள் அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர் மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட குறுகிய வடிவிலான தொடர்களில் பங்கேற்ற அனுபவமும் உள்ளது. குழுவாக பந்து வீச்சு சிறப்பாக உள்ளது.

அதேவேளையில் பேட்டிங் குழுவானது, உலக சாம்பியன் அணியில் இருந்து சற்று மாறு பட்டதாக உள்ளது. மொத்தத்தில் இந்த தொடர் சில இளம் வீரர் களுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. கே.எல்.ராகுல் முதல் ஆட்டத்தில் வியக்கும் வகையில் பேட் செய்தார்.

ஆட்டத்தின் முடிவு நமக்கு சாதகமாக அமையாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இருந்து நல்ல விஷயங்கள் கிடைத்துள்ளது. டெஸ்ட் தொடரில் விளையாடி விட்டு உடனடியாக வீரர்கள் டி 20 ஆட்டத்துக்கு தகுந்தபடி தங்களை வடிவமைத்துக் கொண்ட விதம் பாராட்டுக்குரியது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டனர்.

இந்த தொடர் இந்தியாவுக்கு மட்டும் அல்ல மேற்கிந்தியத் தீவுகளுக்கும் சிறப்பாகவே இருந்தது. இந்த இடம் மேற்கிந்தியத் தீவுகள் அணி யினருக்கு அருகாமையிலேயே உள்ளது. மீண்டும் நாங்கள் இங்கு திரும்பி வந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுவோம்.

துரதிருஷ்டவசமாக கடைசி போட்டி மழையால் பாதிக்கப் பட்டது. மற்றபடி வானிலை கிரிக்கெட்டுக்கு பொருத்தமாகவே உள்ளது. போட்டியை ஒளிபரப்பும் நேரம் வசதியாக உள்ளது. ரசிகர் களும் அதிகளவில் மைதானத்துக்கு போட்டியை காண நேரில் வருகின் றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x