Published : 15 Feb 2015 12:07 PM
Last Updated : 15 Feb 2015 12:07 PM

இந்திய - பாக். போட்டி | கோலி, ரெய்னாவின் பக்கம் அதிர்ஷ்டம்

அடிலெய்டில் இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் ஃபீல்டர்கள் செய்த தவறினால் கோலி, ரெய்னாவின் பக்கம் அதிர்ஷ்டக் காற்று அடித்தது.

விராட் கோலி களமிறங்கி 3 ரன்களில் இருந்தபோது, ஆட்டத்தின் 11-வது ஓவரை ஷாகித் அஃப்ரீடி வீச, அளவு சற்றே குறைந்த பந்தை புல் ஆடினார். அப்ரீடி பந்து காற்றில் வேகமாக வரக்கூடியது, பிட்ச் ஆன பிறகும் சற்று வேகத்துடன் வரக்கூடியது. இந்நிலையில் அந்தப் பந்தை புல் ஆடினார். ஷாட் சரியாக சிக்காமல் லாங் ஆனில் கேட்ச் ஆகச் சென்றது.

அது நீளமான பவுண்டரி என்பதால் யாசிர் ஷா முன்னால் கேட்சுக்கு ஓடி வரநேரிட்டது. ஆனால் பந்து முன்னமேயே தரையை நெருங்க, யாசீர் ஷா டைவ் அடித்துப் பார்த்தார், பந்து கையில் பட்டு கீழே தவறியது. இதைப் பிடித்திருந்தால் அசாத்தியமான கேட்ச் என்பதோடு இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

அதன் பிறகு கோலி சில அபாரமான ஷாட்களை ஆடினார். குறிப்பாக கவர் டிரைவ், இன்சைட் அவுட் டிரைவ் அனாயசமாக அவருக்கு வந்தது.

கோலி 76 ரன்களில் இருந்த போது ஆட்டத்தின் 32-வது ஓவரை பாகிஸ்தானின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹாரிஸ் சோஹைல் வீச கோலியின் மட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் அக்மலிடம் விரைவாகச் சென்றது. சாதாரணமாக விக்கெட் கீப்பர்கள் அது போன்ற கேட்ச்களை பிடிப்பதுதான் வழக்கம், ஆனால் உமர் அக்மல் வழக்கமான விக்கெட் கீப்பர் இல்லை, கோட்டை விட்டார். தப்பினார் கோலி, அவருக்குக் கிடைத்த 2-வது வாழ்வு இது.

ஆட்டத்தின் 34-வது ஓவரில் இந்த முறை சுரேஷ் ரெய்னா பிழைத்தார். அதிர்ஷ்டமில்லாத அந்த வீச்சாளர் மீண்டும் ஹாரிஸ் சோஹைல்தான். ஷாட் பிட்ச் பந்தை ரெய்னா புல் செய்ய பந்து டீப் மிட்விக்கெட்டுக்குச் சென்றது. அங்கு எல்லைக்கோட்டருகே யாசிர் ஷா நின்றிருந்தால் கையில் வந்து நேராக கேட்ச் உட்கார்ந்திருக்கும், ஆனால், அவர் சற்று முன்னே நிற்க கடைசியில் கேட்சைப் பிடிக்க முயன்று, தனக்குத்தானே கடினமாக்கிக்கொண்டு பந்தை சிக்சருக்குத் தட்டி விட்டார்.

பார்ப்பதற்கு, அசாத்தியமான கேட்ச் போல் இருந்திருக்கும். ஆனால், அவர் சரியான நிலையில் நிற்கவில்லை என்பதே ரெய்னாவின் அதிர்ஷ்டம்.

ஆகவே, அடிலெய்டில் கோலி, ரெய்னா ஆகியோருக்கு வாழ்வளித்தது பாகிஸ்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x