Published : 28 Dec 2016 01:17 PM
Last Updated : 28 Dec 2016 01:17 PM

இந்திய கிரிக்கெட் 2016: களம் ஆளும் கோலி-கும்ப்ளே கூட்டணி!

2016... இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச் சிறந்த ஆண்டு. வீரர்கள் அனைவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த, டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

ஐசிசி பவுலிங் தரவரிசையிலும், ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் அஸ்வின் முதலிடம் வகித்தார். மேலும், பவுலிங் தரவரிசையில் அஸ்வின், ஜடேஜா இருவரும் முதல் இரண்டு இடங்களை முதல் முறையாகப் பிடித்தனர்.

கோலி கேப்டனாக வீரராக பல சாதனைகளை நிகழ்த்திய ஆண்டாக 2016 அமைந்தது. உலக அளவில் இந்திய அணியை பெரிய டெஸ்ட் அணியாக வீழ்த்த முடியாத டெஸ்ட் அணியாக மாற்றமடையச் செய்ய கோலி - கும்ப்ளே கூட்டணி அடித்தளம் அமைத்த ஓர் ஆண்டாக 2016 அமைகிறது.

2007-ம் ஆண்டு டி20 உலக சாம்பியன்களான இந்திய அணி, அதன் பிறகு டி20 வடிவத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஒயிட்வாஷ் கொடுத்து மீண்டும் இழந்த புகழை நிலைநாட்டியது.

தோனியின் தலைமையில் உலகக் கோப்பை டி20 தொடரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக தோற்று இந்தியா வெளியேறியது. கோப்பையை மே.இ.தீவுகள் வென்றது.

2016-ல் இந்திய கிரிக்கெட் ஒரு கண்ணோட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை இந்தியா ஆஸ்திரேலியாவில் 1-4 என்று இழந்த நிலையில், 2016 மோசமாகவே தொடங்கியது. இந்தத் தொடரில் கடைசி போட்டி சிட்னியில் ஆஸ்திரேலியாவின் 325 ரன்களுக்கும் மேலான இலக்கை மணீஷ் பாண்டே அனாயச சதத்தின் மூலம் துரத்தி வெற்றிகண்ட போட்டியாக அமைந்தது. எனவே ஆண்டுத் தொடக்கத்தில் மணீஷ் பாண்டே என்ற ஒரு அபார வீரரை இந்தியாவுக்கு அடையாளம் காட்டிய போட்டி சிட்னி ஒருநாள் போட்டியாகும்.

ஆனால், டி20 தொடரில் ஆஸ்திரேலியா 2-ம் நிலை அணியை களமிறக்கினாலும், அதன் மண்ணில் முதன்முறையாக டி20 தொடரில் 3-0 என்று இந்தியா ஒயிட்வாஷ் கொடுத்தது.

பிறகு நாடு திரும்பிய இந்தியா, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியை படுமோசமாகத் தோற்றாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றிய கையோடு வங்கதேசத்தில் ஆசியக் கோப்பைக்குச் சென்றது. முதல் முறையாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20 வடிவத்தில் நடைபெற்றது. இதில் வங்கதேசத்தை முதலில் வீழ்த்திய இந்திய அணி, பாகிஸ்தானையும் வீழ்த்தி, இலங்கை, யு.ஏ.இ. அணிகளையும் பந்தாடியது.

மழையால் பாதிக்கப்பட்ட இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை வென்று உலகக் கோப்பை டி20 நமக்குத்தான் என்ற ஆவலை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. இதற்கும் மேலாக தோனி மீண்டும் நமக்கு ஒரு கோப்பையை வென்று தருவார் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடையே நிலவியது குறிப்பிடத்தக்கது.

2016 உலகக் கோப்பை டி20:

2007-ல் டி20 உலக சாம்பியன்களான பிறகு அணியில் பல மாற்றங்கள் ஏற்பட அடுத்தடுத்த உலகக் கோப்பை டி20-களில் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை. இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக டி20 உலகக் கோப்பை நடைபெற்றது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பையும் நாடித்துடிப்பையும் அதிகரித்தது.

ஆனால் ரசிகர்களின் அதிர்ச்சியடையுமாறு உலகக் கோப்பை முதல் போட்டியில் நியூஸிலாந்திடம் தோனி படை அதிர்ச்சித் தோல்வி கண்டது. பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்க தடுமாற்றத்திற்குப் பிறகு விராட் கோலியின் உறுதியினால் வெற்றி பெற்றது, பிறகு வங்கதேசத்திற்கு எதிராக நெருக்கமான, பரபரப்பான போட்டியிலும் இந்தியா வென்றது. வெற்றி பெற்றேயாக வேண்டுமென்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தான் யாரென்று நிரூபித்தார். பெரிய அளவுக்கு காட்டுத்தனமாக ஆடாமலேயே அதிக ரன் விகித விரட்டலையும் வெற்றியாக சாதிக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல கிரிக்கெட் உலகிற்கே நிரூபித்தார் விராட் கோலி.

கஷ்டப்பட்டு அரையிறுதியில் நுழைந்து மே.இ.தீவுகளை சந்திக்க அன்று மே.இ.தீவுகளின் ஆட்டம் வேறு ஒரு மட்டத்தில் இருந்ததால் இந்தியா தோல்வியடைந்து வெளியேற மீண்டுமொரு முறை டி20 உலகக் கோப்பை கை நழுவியது.

உலகக் கோப்பை டி20 தோல்வியினால் அதனையடுத்த ஐபிஎல் டி20 போட்டிகளும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் டி20 பேட்டிங்கை வேறொரு மட்டத்துக்கு உயர்த்திய விராட் கோலி மீதான எதிர்பார்ப்புகள் கூடின. கோலியும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த விதம் சாதனைக்குரியது. இந்த ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் 973 ரன்களுடன் அதிக ஐபிஎல் ரன்கள் என்ற சாதனைக்குரியவரானார் விராட்.

கோலி இப்படி ஆடியும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இன்னொரு முறை தவற விட்டது. இறுதிப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வி கண்டு ஏமாற்றமடைந்தது.

ஜிம்பாப்வே தொடர்:

ஐபிஎல் திருவிழாவுக்குப் பிறகு ஜிம்பாப்வேவுக்கு இந்திய அணி ஒரு விரைவுப் பயணம் மேற்கொண்டது. இதில் முக்கிய, நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட ஜிம்பாப்வேக்கு இந்த 2-ம் நிலை இந்திய அணியே சமாளிக்க முடியாததாகி ஜிம்பாப்வே 0-3 என்று ஒயிட்வாஷ் ஆனது.

ஆனால் ஒருநாள் தொடரில் இழந்த மதிப்பை டி20 தொடரில் ஜிம்பாப்வே முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஈட்டியது. ஆனால் தொடரை வெல்லும் அளவுக்கு அந்த அணியிடம் வலுவில்லாததால் இந்திய அணி 2-1 என்று டி20 தொடரையும் வென்றது.

கோலியின் கேப்டன்சி பெருமையை நிலைநாட்டிய நீண்ட டெஸ்ட் தொடர்களின் தொடக்கம்:

ஒரே சீசனில் ஏகப்பட்ட டெஸ்ட் தொடர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் விராட் கோலி தலைமை இந்திய அணி மே.இ.தீவுகளுக்குச் சென்றது, அனில் கும்ப்ளே பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் தொடர் இது என்பது ஆவலைக்கூட்டுவதாக அமைந்தது.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஓரளவுக்கு இந்திய பிட்ச் போன்ற சூழலில் கேப்டன் விராட் கோலி தன் முதல் டெஸ்ட் இரட்டைச் சதத்தை எடுக்க இந்திய அணி மே.இ.தீவுகளை இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்த 2 போட்டிகளும் டிரா, இதில் கடைசி டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகளின் ஸ்டூவர்ட் சேஸ் மிக அருமையான சதத்துடன் அஸ்வினின் தீவிர சுழலையும் மீறி டிரா செய்தது மே.இ.தீவுகள் கிரிக்கெட்டின் புதிய தொடக்கமாகவே அமைந்தது. இந்திய அணி தற்காலிகமாக டெஸ்ட் முதலிடத்தைப் பிடித்தது.

டெஸ்ட் தொடருக்குப் பிறகு கிரிக்கெட் வளர்ச்சித் திட்டம் என்பதற்கு இணங்க அமெரிக்காவின் புளோரிடாவில் தோனி படை, மே.இ.தீவுகளை 2 டி20 போட்டியில் சந்தித்தது. முதல் டி20 போட்டி இரு அணிகளுக்குமான அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. அருமையான விரட்டலில் கடைசியில் தோனியின் தவறினால் ஒரு ரன்னில் இந்தியா தோல்வி தழுவியது, இரண்டாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு நோ-ரிசல்ட் ஆனது.

பாகிஸ்தான் இடையில் தனது வெற்றியின் மூலம் டெஸ்ட் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க, இந்தியா நியூஸிலாந்து அணியை மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் முயற்சியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்கொண்டது.

இதில் தாறுமாறாக திரும்பும் ஸ்பின் பிட்சை இந்தியா அமைத்து நியூஸிலாந்தை 3-0 என்று ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் முதலிடத்தை மீண்டும் பெற்றது. இந்தத் தொடரும் விராட் கோலி பேட்டிங் பேசியது.

இதனையடுத்த ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து தான் ஒரு சிறந்த ஒருநாள் அணி என்று நிரூபித்தது. 5 போட்டிகளில் 4 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 2-2 என்று இருந்தன. கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. இதில் ஸ்பின் எடுக்கும் பிட்சில் அமித் மிஸ்ரா 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற நியூஸிலாந்து படுதோல்வி அடைந்தது, இந்தியா தொடரை 3-2 என்று வென்றது.

அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான கடினமான டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆடுவது அவ்வளவு சுலபமல்ல. மேலும் தற்போதைய வீர்ர்கள் ஆண்டு முழுதும் எங்காவது விளையாடிக் கொண்டேயிருக்கும் நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை அதுவும் இங்கிலாந்து போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடுவது சவாலானதே.

இந்தக் கடும் சோதனையிலும் கோலி படை வெற்றி கண்டது. ராஜ்கோட்டில் நேரடியான தோல்வியை தவிர்த்து டிரா செய்து அடுத்த 4 போட்டிகளிலும் வென்றது. இதில் பிட்ச் பெரிய அளவில் உதவிபுரியவில்லை. இரு அணிகளுமே ஆடும் பிட்ச்சாகத்தான் தயாரிக்கப்பட்டது. ஆனால் அஸ்வின், ஜடேஜா, அவ்வப்போது உமேஷ் யாதவ், மொகமது ஷமியின் அபாரப்பந்து வீச்சுகளினால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 4-0 என்று இழந்தது. பேட்டிங்கில் விராட் கோலி, புஜாரா ஆகியோருடன் அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட பின்கள வீரர்களின் பங்களிப்பும் இந்திய அணியை சரிவுக் கட்டங்களிலிருந்து மீண்டெழச் செய்துள்ளது.

கோலி சாதனைகள்

கோலி தனது 3-வது இரட்டைச் சதத்தை அடித்து டான் பிராட்மேன் உள்ளிட்ட உயர்மட்ட பட்டியலில் இணைந்தார். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக 652 ரன்களை அவர் எடுத்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த கவாஸ்கர் உள்ளிட்டோர் பட்டியலிலும் முதன்மை வகித்தார்.

டெஸ்ட் தொடரை 4-0 என்று கைப்பற்றி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தற்போது 120 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளது.

ஒருநாள் தரவரிசயில் இந்தியா 2016-ம் ஆண்டில் 3-ம் நிலையிலும், டி20-யில் 2-ம் இடத்திலும் உள்ளது.

களத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் கோலி தலைமையில் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தோல்வியடையாத சாதனையை நிகழ்த்தியதோடு 9 டெஸ்ட் போட்டிகளில் வென்று அபாரமாகத் திகழ்ந்தது. இந்த ஆண்டில் இந்திய அணி சிறந்த டெஸ்ட் அணியாக திகழ்ந்ததற்கு கோலி, அஸ்வினின் பங்களிப்பு மிகப்பெரியது என்றே கூற வேண்டும்.

கும்ப்ளே பயிற்சியில் கோலியுடனான கூட்டணி இந்திய அணியை ஒரு வெற்றி பெறும் ஒரு கூட்டணியாக மாற்ற கடுமையான சில திட்டங்களை வழிவகுத்து அதனை சர்ச்சையற்ற விதத்தில் அமல்படுத்தி இந்திய அணியை வேறொரு கட்டத்திற்கு நகர்த்த முயற்சிகள் மேற்கொண்டு வருவது பாராட்டுதலுக்குரியது.

அயல்நாடுகளில் இதே போன்று வெற்றி பெறுவோம் என்று விராட் கோலி கூறிய உறுதிமொழியுடன் 2016 இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைவாக முடிந்ததோடு 2017-க்கான உற்சாகத் தொடக்கத்தை கொடுக்கும் என்று எதிர்பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x